
சூரிய ஒளி இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியமில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்வீச்சு மனிதர்களையும் பிற உயிரினங்களையும் காக்கும் வகையில் ஓசோன் படலம் செயல்படுகிறது. மனிதர்களின் செயல்பாடுகளால் சில ஆண்டுகளாக ஓசோன் படலத்தில் துளைகள் தோன்றியுள்ளன என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
ஓசோன் படலம் என்பது என்ன?
ஓசோன் அடுக்கு அல்லது படலம் என்பது பூமியின் அடுக்கு மண்டலத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் பத்து முதல் 30 கிலோ மீட்டர் வரை அமைந்துள்ளது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சை, குறிப்பாக UV-B மற்றும் UV-C கதிர்களை ஓசோன் படலம் உறிஞ்சுவதன் மூலம் பூமியில் உள்ள உயிர்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஓசோன் படலத்தின் நன்மைகள்: மனிதர்களுக்கு சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய சருமப் புற்று நோய் மற்றும் கண் புரையில் இருந்து காக்கிறது. தாவரங்களின் செழிப்பான வளர்ச்சி, கடல் வாழ் உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாதுகாப்பு, விலங்குகள் மற்றும் பல்லுயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியின் யூவி கதிர்வீச்சில் இருந்து ஓசோன் படலம்தான் காக்கிறது. ஓசோன் படலம் வலுவிழந்தால் பூமியில் வாழும் உயிர்கள் அனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உள்ளாக நேரிடும்.
ஓசோன் அடுக்கை பாதுகாப்பது எப்படி?
அதிகரித்த வாகனப் போக்குவரத்தைக் குறைத்தல்: ஆளுக்கு ஒரு டூவீலர், வீட்டுக்கு இரண்டு கார்கள் என்று வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் பெருகி விட்டது. லோன் தருகிறோம், ஜீரோ பர்சன்ட் வட்டி என்றெல்லாம் மக்களை ஆசை காட்டி கவர்ந்திருக்கும் விளம்பரங்களில் மயங்கி மக்கள் வாகனங்களை வாங்கி குவித்ததன் பலன் ஓசோன் படலத்தை பாதித்திருக்கிறது. அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது, சைக்கிளைப் பயன்படுத்துவது, கார் போன்ற வாகனத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது என்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும்.
நச்சுத்தன்மையுள்ள துப்புரவுப் பொருட்களைத் தவிர்த்தல்: சந்தையில் விற்கப்படும் வீட்டின் தரை மற்றும் கழிவறை சுத்தம் செய்யப் பயன்படும் பல துப்புரவுப் பொருட்களில் அரிக்கும் கரைப்பான்கள் உள்ளன. இந்த ஆபத்தான பொருட்களை மாற்றி விட்டு வினிகர் போன்ற நச்சுத்தன்மையற்ற பொருட்களை பயன்படுத்தலாம்.
பழைய ஏ.சி., ஃபிரிட்ஜ், ஃபோம் மெத்தை வேண்டாமே: பழைய குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள், ஹேர் ட்ரையர்கள், டியோடரன்டுகள், ஸ்பிரே பெயிண்டுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. வீடுகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் ஃபோம் மெத்தைகளில் சிஎப்சி போன்ற ரசாயனங்கள் ஓசோன் படலத்திற்கு ஆபத்தானவை. இவற்றைத் தவிர்த்து விட்டு ஓசோன் படலத்துக்கு ஏற்ற வகையில் உள்ள பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பல புதிய மாடல்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனர்களை தூக்கி எறியாமல் அவற்றை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
பூச்சிக்கொல்லிகளை தவிர்த்தல்: பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்ல விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள மெத்தில் ப்ரோமைடு ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, முடிந்தவரை கரிம அல்லது இயற்கை மாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். தீயை அணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் ஹாலோன்களில் ப்ரோமைன் உள்ளது. இது ஓசோன் படலத்திற்கு அதிக அழிவைத் தரும்.
கைவிட வேண்டியவை: தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்னணு மற்றும் உலோக பாகங்களை சுத்தம் செய்ய கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஓசோன் படலத்தை பாதிக்கும் ரசாயனங்கள் உள்ளன. ராக்கெட் ஏவுதல் போன்ற செயல்முறைகள் ஓசோன் படலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை வெளியிடுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை எரிக்கும்போது அது ஓசோன் படலத்தையும் பாதிக்கிறது. இந்த செயல்முறைகளை மனிதர்கள் கைவிட வேண்டும்.