
இரத்தம் என்றாலே அனைவர் நினைவுக்கும் வருவது சிவப்பு நிறம்தான். உடலிலுள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் இரும்புச் சத்து நிறைந்த ஒரு வகைப் புரோட்டீன்தான் ஹீமோகுளோபின். இதன் சிவப்பு நிறத்தையே பல வகையான விலங்குகளின் இரத்தமும் பிரதிபலிக்கின்றன. இதற்கு விதிவிலக்காக சில விலங்குகளின் இரத்தம் நீலம், பச்சை, பர்ப்பிள் மற்றும் பால் போன்ற வெண்மை நிறத்தில் கூட தோற்றமளிக்கின்றன. விலங்குகளின் இரத்த ஓட்ட அமைப்பில் ஆக்ஸிஜனுடன் இணைந்திருக்கும் பல்வேறு வகையான மூலக்கூறுகள் அல்லது வெவ்வேறு கூட்டுப்பொருட்களின் தன்மையைப் பொறுத்தே, தனித்துவமான நிறங்களை அவை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இது அவற்றின் பரிணாம வளர்ச்சியாகவோ அல்லது இயற்கையான செயல்பாட்டினால் ஆனதாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும், இவ்வுயிரினங்கள் உருமாறித் தோற்றமளிக்கவும், மாறுபட்ட சூழ்நிலைகளை சமாளிக்கவும் இந்நிற வேறுபாடு உதவி புரிகிறது. இம்மாதிரியான 7 வகை விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆக்டோபஸ்: ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறமாக உள்ளது. இதன் உடலுக்குள் ஆக்ஸிஜனை கடத்திச் செல்ல உதவும் ஹெமோசியானின் (Hemocyanin) என்ற மூலக்கூறு காப்பரை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இரத்தம் நீல நிறம் கொண்டுள்ளது. ஹெமோசியானின், ஹீமோகுளோபினை விட சக்தி வாய்ந்தது. அது குளிர்ச்சியான, ஆக்ஸிஜன் குறைவாக உள்ள சூழ்நிலைகளிலும் ஆக்டோபஸ் உயிர் வாழ உதவி புரியும். கடலின் கரடு முரடான ஆழமான பகுதியிலும், ஆக்டோபஸ் தனது உடலின் வித்தியாசமான இரத்த ஓட்ட அமைப்பினாலும் ஹெமோசியானின் உதவியாலும் உயிர் வாழ்கிறது.
2. ஐஸ் ஃபிஷ்: அண்டார்க்டிகா பிரதேசத்தின் குளிர்ந்த நீருக்குள் வாழும் ஐஸ் ஃபிஷ்ஷின் இரத்த நிறம் பால் போன்று வெண்மையாகக் காட்சி அளிக்கும். முதுகெலும்புள்ள இந்த ஒரு இனம்தான் ஹீமோகுளோபினின் சிவப்பு நிறத்தைக் கொள்ளாமல் வெள்ளை நிற இரத்தத்தைக் கொண்டுள்ளது. இதன் இதயமும் இரத்த நாளங்களும் அளவில் சற்றுப் பெரிதாக உள்ளன. நீரிலுள்ள ஆக்ஸிஜன் நேரடியாக பிளாஸ்மாவுக்குள் சென்று கலந்து விடுகிறது. இதன் தனித்துவமான இரத்த ஓட்ட அமைப்பு இந்த மீன்களை அதிகளவு ஆக்ஸிஜன் உள்ள பனி நீரிலும் உறைய வைக்கும் குளிரிலும் உயிர் வாழ உதவுகின்றது.
3. பீநட் ஒர்ம் (Peanut Worm): இந்த பீநட் ஒர்மின் இரத்த நிறம் பர்ப்பிள். இதற்கு இந்த நிறத்தைத் தருவது ஹெமெரித்ரின் (hemerythrin) என்ற மூலக்கூறாகும். இது இரும்பை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஸிஜனுடன் இணைந்து செயலாற்றுவது. ஆனால், இது ஹெமோசியானின் மற்றும் ஹீமோகுளோபினிலிருந்து வேறுபட்டது. ஹெமெரித்ரின் ஆக்ஸிஜனேற்றமடையும்போது பர்ப்பிள் நிறமடைகிறது. முதுகெலும்பில்லாத இந்த புழு கடலோரப் பகுதியின் சகதியில் வசிப்பவை. இதற்கு நோயெதிர்ப்பு சக்தியையும் இதன் பர்ப்பிள் பிளட் கொடுக்கிறது.
4. அட்டைகள் (Leaches): இவற்றின் இரத்த நிறம் பச்சை. குளோரோகுரோரின் என்ற மூலக்கூறைக் கொண்ட இரும்புச் சத்தின் அடிப்படையிலான ஹீமோகுளோபின் போன்ற புரோட்டீன் இது. இதில் பச்சை நிறத்தின் சாயல் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றமடையும்போது இரத்தம் பச்சை நிற தோற்றம் தருகிறது. குளோரோகுரோரின், லீச் உள்ளிட்ட, பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட (Segmented) இதே இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரினங்களுக்கும் உடலுக்குள் ஆக்ஸிஜன் செல்ல உதவி புரிகிறது. குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள சேறு கலந்த தண்ணீரிலும் இவை உயிர் வாழ குளோரோகுரோரின் உதவுகிறது.
5. சீ குக்கம்பர் (Sea Cucumber): ஆக்டோபஸ் மற்றும் மற்ற மெல்லுடலிகள் போல சீ குக்கம்பர் ஹெமோசியானின் மூலக்கூறு கொண்டது. இதன் இரத்த நிறம், அந்த இடத்தின் ஆக்ஸிஜன் அளவுக்கும், அந்த உயிரினத்தின் வகைக்கும் ஏற்றவாறு நீலமாகவோ பச்சையாகவோ மாறக் கூடியது. சீ குக்கம்பரின் விசித்திரமான இரத்த ஓட்ட அமைப்பு மற்றும் அதன் வினோதமான தோற்றம் ஆகிய இரண்டும் அதை குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள கடலின் அடிப்பரப்புகளில் வாழவும், எந்தவிதமான பின்னடைவுகளை சந்திக்கவும், தன்னைத்தானே காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
6. ஸ்பைடர்ஸ்: மனிதர்களுக்கு உள்ளது போன்ற இரத்தம் ஸ்பைடர்களுக்குக் கிடையாது. மாறாக, ‘ஹீமோலிம்ப்’ எனப்படும் லைட் ப்ளூ நிறத்திலான திரவம் உண்டு. இதன் மூலக்கூறான ஹெமோசியானின் காப்பரை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இரத்தம் நீல நிறமாக உள்ளது. தாரான்சுலாஸ் (Tarantulas) போன்ற ஸ்பைடர் வகைகள் ஹீமோலிம்ப் உடையவை. இந்த மூலக்கூறு, ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருந்தாலும் அந்த இடத்தில் ஸ்பைடர் உயிர் வாழ உதவுகிறது.
7. ஸ்கின்க்: நியூ கினியாவை பிறப்பிடமாகக் கொண்ட சில வகை ஸ்கின்க்ஸ் கரும் பச்சை நிற இரத்தம், தசைகள் மற்றும் எலும்புகள் கொண்டவையாக உள்ளன. விஷத் தன்மையுள்ள பிலிவர்டின் (Biliverdin) என்ற பித்த நிறமியின் அளவு இதன் இரத்தத்தில் அதிகமாகும்போது இரத்த நிறம் கரும் பச்சையாகிறது. அதிசயிக்கத்தக்க விதத்தில் இந்த பித்த நிறமி ஸ்கின்க்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியாக வினையாற்றுகிறது. இவை பூஞ்சைகளின் தாக்குதலிலிருந்து ஸ்கின்க்களை காப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வழக்கமாக விஷம் என்று கருதக்கூடிய ஒரு பொருளிலிருந்து, ஒரு விலங்கு எவ்வாறு எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது என்பது இன்னும் ஆய்வில் உள்ளது.