
நதிகள் என்றவுடன் அகண்டு விரிந்து பல கிலோமீட்டர்களுக்கு கடந்து செல்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் நதிகள் ஏராளம் உள்ளன. ஆனால் சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ள ஹுவாலை (Hualai) நதி தான் உலகிலேயே மிக குறுகலான நதி ஆகும்.
இந்த நதியானது 17 கிலோமீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. அதன் அகலம் வெறும் 4 செமீ முதல் 15 சென்டிமீட்டர் வரை மட்டுமே.
Hualai போன்ற ஒரு நதி உண்மையில் இருக்கிறது என்பதை நம்புவது கடினம். ஆனால் சீன நிபுணர்களின் கூற்றுப்படி, அது குறைந்தது 10,000 ஆண்டுகளாக கோங்கர் புல்வெளி வழியாக பாய்கிறது என்கின்றனர்.
ஹுவாலை நதி ஒரு நிலத்தடி நீரூற்றில் இருந்து உருவாகிறது. ஹெக்சிக்டன் புல்லேண்ட்ஸ் இயற்கை காப்பகத்தில் உள்ள தலாய் நூர் ஏரியில் பாய்கிறது.
ஹுவாலையை நதியாகக் கூட கருத முடியாத அளவுக்கு குறுகலானது என்று சிலர் கூறினாலும், ஆறுகள், ஓடைகள் மற்றும் சிற்றோடைகளுக்கு இடையே அளவு வேறுபடுத்திக் காட்டும் காரணியாக இல்லை என்பதே உண்மை. இந்த நதி ஒரு நிரந்தர நீர்நிலையாகும். இது ஆண்டு முழுவதும் சீராக பாய்கிறது.
ஹுவாலை 'புத்தகப் பாலம் நதி' என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு சிறுவன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து, தனது புத்தகத்தை ஹுவாலையின் குறுகலான பகுதிகளில் ஒன்றின் மேல் இறக்கி வைப்பது தொடர்பான நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன. மறுகரைக்கு செல்ல முயன்ற எறும்புகளுக்கு, இந்த புத்தகம் பயனுள்ள பாலமாக மாறியதாம். இதனால், புத்தகப் பாலம் நதி என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது.
ஹுவாலை நதி அகலமாக இல்லாவிட்டாலும், அதன் ஆழம் 50 சென்டிமீட்டர் வரை உள்ளது என்பதும் மேலும் ஒரு ஆச்சரியம்தான்.
உயரமோ, அகலமோ, நீளமோ எவ்வாறு இருந்தாலும் எவ்வளவு தூரம் இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும், நதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையாக பராமரித்து, நீர் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அந்நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பதோடு, வருங்கால தலைமுறையினருக்கும் நன்மை பயக்கும்!