
பூமியின் மேல் உள்ள க்ரஸ்ட் (Crust) பகுதியில் தான் நாம் வாழ்கிறோம் இல்லையா. இந்த வெளிப்புற நிலத்துக்குக் கீழேதான் மேண்டில் (Mantle) இருக்கிறது. இது பூமியின் மேலோட்டுக்கும் 'கோர்' (Core) எனப்படும் மையத்துக்கும் இடையில் உள்ள பகுதி. இதுவே பூமியின் தடிமனான பகுதியாகும். மொத்த பூமிப்பந்தில் 84% மேண்டில் தான் உள்ளது என்றால் இதன் அளவைப் புரிந்து கொள்ளுங்களேன்.
பெருங்கடல்களின் தரைக்குச் சுமார் 12 கிமீ ஆழத்தில் துவங்கும் இந்த மேண்டில் லேயர் 2900 கிமீ ஆழம் கொண்டதாம். 500 முதல் 4000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமானதாம். இங்கே மெக்னீசியம் மற்றும் இரும்பு அதிகமுள்ள சிலிகேட் பாறைகள் உள்ளனவாம். இவை பொதுவாக எரிமலை வெடிப்பின் போது லாவா என்ற பெயரில் வெளிப்படும்.
ஆனால் எரிமலை வழியாக அல்லாமல் இயற்கையாக இந்த மேண்டில் பகுதியின் பாறைகள் பூமிக்கு மேலே வெளிப்படும் ஒரே ஒரு இடம் பூமியில் உள்ளது. பூமிக்குள் இருப்பதை அறிந்துகொள்ள ஒரு வரப்பிரசாதமாக புவியியல் வல்லுநர்களால் அறியப்படுகிறது இந்த இடம். ஆக்டிவாக பூமியின் மேண்டில் இங்கே வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
தென்பெருங்கடலின் தொலை தூரத்தில் டாஸ்மானியா - அண்டார்டிகா இடையில் உள்ள மக்கொய்ரி தீவு (Macquarie Island) தான் அந்த அதிசய இடம்.
34 கிமீ நீளமும் 5 கிமீ அகலமும் கொண்ட குட்டித் தீவு தான் இது. ஆனால் இந்தத் தீவின் வயது என்ன தெரியுமா? சுமார் 12 மில்லியன் ஆண்டுகள்!
ஆஸ்திரேலியா - பசிபிக் டெக்டானிக் தட்டுகள் (Australian – Pacific Tectonic Plates) ஒன்றை விட்டு ஒன்று விலக ஆரம்பித்த போது உள்ளுக்குள் இருந்த மேண்டில் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. அது மேடுதட்டி மெல்ல மெல்ல உயர்ந்து வந்திருக்கிறது. இதுதான் மக்கொய்ரி மேடு (Macquarie Ridge) எனப்படுகிறது. இப்படிச் சுமார் 4 லட்சம் வருடங்களுக்கு இந்த மேடு மெல்ல மெல்ல உயர்ந்துவர, கதையில் ட்விஸ்ட் என்பதுபோல், விலகிச் சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலியா – பசிபிக் தட்டுகள் ரூட்டை மாற்றி ஒன்றை நோக்கி ஒன்று நெருங்க ஆரம்பிக்க, டூத் பேஸ்ட் ட்யூபில் இருந்து இரு புறங்களிலும் தரப்படும் அழுத்தத்தால் பிதுங்கிக்கொண்டு வெளியேறுவதைப் போல மேண்டில் வெளியேற ஆரம்பித்திருக்கிறது. இப்படித்தான் சுமார் ஆறேழு லட்சம் வருடங்களுக்கு முன்னால் இந்த மக்கொய்ரி தீவு (Macquarie Island) உருவாகியிருக்கிறது.
12 மில்லியன் ஆண்டுகாலமாக மிக மிக மெதுவாக நடந்துவரும் இந்தப் புவியியல் செயல்பாட்டின் விளைவாக உருவாகியிருக்கும் மக்கொய்ரி தீவு (Macquarie Island) 'Natural Laboratory' என்று புவியியல் வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது. இந்தச் செயல்பாடு இன்றும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
மக்கொய்ரி தீவுக்குப் போனால் நாம் கால் வைப்பது வெறும் நிலம் அல்ல. பெருங்கடலின் தரையில்! மேண்டில் பகுதியின் சிலிகேட் பாறைகளில்! பில்லோ பஸால்ட் (Pillow Basalt) எனப்படும் வேகமாகக் குளிர்ந்த லாவாவின் மேல் இங்கே நாம் நடந்து போகலாம்.
இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பெருங்கடல் தரை உருவாக்கம் பற்றியும் பெருங்கடல் தரைக்கும் கீழே உள்ளவற்றைப் பற்றியும், டெக்டானிக் தட்டுகள் பற்றியும், அவற்றின் தொடர்புகள் நகர்வுகள் பற்றியும் அறிய முடிகிறது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக இருக்கும் இந்தத் தீவு புவியியல் தகவல் களஞ்சியமாக மட்டுமல்லாமல் சுமார் 3.5 மில்லியன் கடல் பறவைகளின் வாழிடமாகவும் உள்ளது. இங்கே ஆக்கிரமித்திருக்கும் ராயல் பென்குவின்களையும் கடல் யானைகளையும் பூமியில் வேறெங்கும் காண முடியாது.
1810-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இத்தீவு கடுமையான கடல் சீற்றம் கொண்ட பகுதியாக உள்ளது. 1997ல் யுனெஸ்கோ இத்தீவுக்கு ‘உலக பாரம்பரியக் களம்’ என்ற அடையாளம் கொடுத்தது. இதன் தனித்துவத்தைக் காக்கும் பொருட்டு இங்கே பயணம் செய்யக் கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டுள்ளன.
கடினமாக உழைத்து, பூமியில் பல்லாயிரம் அடிகள் துளையிட்டுச் செய்ய வேண்டிய ஆய்வுகளை இங்கே எளிதாகச் செய்கிறார்கள் புவியியலாளர்கள். புவியியல் அதிசயமான இந்த மக்கொய்ரி தீவை (Macquarie Island) Geologistகள் நிச்சயமாக மிஸ் பண்ண மாட்டார்கள்!