
சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் படி கடல் கடந்த 40 ஆண்டுகளில் அதிகளவு வெப்பமடைந்து வருகிறது. பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் மெர்ச்சன்ட் தலைமையில் கடல் வெப்ப மயமாதல் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் சுற்றுச்சூழல் அதிவேகமாக சீரழிந்து வருவதை காட்டுகிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக கடல்நீர் ஆவியாதல் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
1980களின் பிற்பகுதியில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் 0.06 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை விகிதம், கடந்த பத்து ஆண்டுகளில் 0.27 டிகிரி செல்சியஸாக அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 4 மடங்கிற்கும் அதிகமான அளவில் மிக வேகமான கடல் நீர் பரப்பு சூடாகி வருகிறது.
வேகமாக மாறிவரும் வெப்பமயமாதல் அதிகரிப்பினால் சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கடல் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் தொடர்ந்து 450 நாட்களுக்கு உச்சத்தை எட்டியிருந்தது. இதற்கு எல் நினோ போன்ற நிகழ்வுகள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட , புவியின் சுற்றுச் சூழல் மாற்றம், அதிகரித்து வரும் காற்று மாசுபாடுகள் போன்றவை கடல் வெப்பமாவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 44% அளவில் பெருகிய கடல் வெப்பநிலை அதிகரிப்பு, பெருங்கடல்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட உள்ளதை எச்சரிக்கின்றன.
"பெருங்கடல்களை ஒரு குளியல் தொட்டியாக நினைத்துக் கொள்ளுங்கள். 1980 களில், குளியல் தொட்டியின் குழாயில் மெதுவாக சூடான நீர் வெளிவந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு தசாப்தத்திற்கும் இந்த வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்படியே சிறிது சிறிதாக குழாயில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலை அதிகரித்து விட்டது. இப்போது மிக வேகமாக தண்ணீர் தொட்டியில் சூடான நீர் வந்து கொண்டிருக்கிறது. இப்போது குளியல் தொட்டியின் வெப்பநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்" என்று பேராசிரியர் கிறிஸ் மெர்ச்சன்ட் விளக்கினார்.
கடல் வெப்பநிலையில் ஏற்படும் விரைவான மாற்றம் உலகளாவிய காலநிலை வடிவங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மனிதனின் செயல்களினால் உருவான இந்த வெப்பமயமாதலில் இருந்து 90 % அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சுகின்றன. இதனால் பூமியின் முதன்மை வெப்பமண்டலமாக கடல்கள் மாறி வருகின்றன. கடல்கள் வெப்பமடையும் விகிதம் அதிகரிப்பதால் வானிலையை அவை வெகுவாக பாதிக்கின்றன. இந்த வெப்பநிலை உயர்வு துருவப் பகுதியில் உறைந்துள்ள பனிக் கடல்களை உருக வைத்து கடல் நீர் மட்டத்தை வெகுவாக உயர்த்தும். துருவப் பகுதி வாழ் உயிரினங்கள் இந்த சூழலில் மிக மோசமாக பாதிப்படைய உள்ளன.
கடல் வெப்பநிலை மோசமாக மாறினால் கடல் வாழ் உயிரினங்களிடையே புதிய வெப்ப நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சூடான வெப்பநிலை கடல் மேற்பரப்பில் உள்ள சிறிய உயிரினங்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். இவ்வாறு பாதிக்கப்பட்ட கடலில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலமோ அல்லது நீரில் உள்ள கடல் நோய்க்கிருமிகளை வெளிப்படுத்துவதன் மூலமோ மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.
கடல் வெப்பமயமாதலின் தற்போதைய நிலை கடந்த 40 ஆண்டுகளில் காணப்பட்ட வெப்பநிலைய விட அதிகரித்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்தல் அடுத்த 20 ஆண்டுகளில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.இந்த வெப்பமயமாதல் போக்கை குறைக்க, உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார் பேராசிரியர் கிறிஸ் மெர்ச்சன்ட்.