

பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நாட்டு மாடு இருந்தால் அதன் சாணம் மற்றும் கோமியத்தைக் கொண்டு 20 ஏக்கருக்கும் மேல் இயற்கை விவசாயத்தை நன்முறையில் செய்துவிட முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சகவ்யத் தயாரிப்பிலும் கோமியத்திற்கு முக்கிய பங்குண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், அவ்வளவு எளிதாக கோமியம் கிடைப்பதில்லை.
கிராமங்களில் மட்டுமே ஓரளவு மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதால், கோமியத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் நாட்டு மாடுகளை வளர்க்க முன்வர வேண்டும். நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை விவசாயத்தில் பயன்படுத்தினால், நஞ்சில்லா உணவுப் பொருட்களை உருவாக்க முடியும்.
இன்றும் கூட இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பலரும், சாணம் மற்றும் கோமியத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பயிர்களின் வளர்ச்சிக்கும், நோய் தடுப்பிற்கும் கோமியத்தை பயன்படுத்தும் போது நம் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை இப்போது காண்போம்.
கோமியத்தை சேகரிக்கும் முறை:
கோமியத்தை தூய வெள்ளை நிறத்துணியில் வடிகட்டி, ஒரு கொள்கலனில் சேகரித்து வைப்பது நல்லது. மருத்துவ பயன்பாட்டிற்கு கோமியம் சேகரிக்கப்படுகிறது என்றால், ஒரு நாளின் முதல் மற்றும் கடைசியாக கிடைக்கும் கோமியத்தை தவிர்க்கவேண்டும்.
கோமியத்தில் 95% தண்ணீரும், 2.5% யூரியாவும் உள்ளன. இதுதவிர்த்து ஆரம் ஹைட்டிராக்ஸ்டு, கிரியோடின் மற்றும் கால்சியம் மெக்னிசியம் உள்ளிட்ட தாதுக்கள் 2.5% என்ற அளவில் உள்ளன.
பயன்படுத்தும் முறை:
முதலில் கோமியத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை நீர்த்துப்போக செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் கோமியத்தில் செறிவுத்தன்மை அதிகமாக இருக்கும். ஆகையால் 1 பங்கு கோமியத்துடன், 10 பங்கு தண்ணீரை கலந்து பயன்படுத்துவது நல்லது. தண்ணீரை கலப்பதன் மூலம் கோமியத்தின் செறிவுத் தன்மை குறைந்து விடும்.
தாவரங்களின் இலைகள், தண்டுகள் மற்றும் கிளைகளின் மீது நீர்த்துப் போன கோமியத்தை தெளிக்கலாம். இலைகளின் வழியாக கோமியத்தின் சத்துக்கள் தாவரத்திற்கு கிடைக்கும்.
மண்ணிலும், தாவரங்களின் வேர்ப்பகுதியிலும் கோமியத்தை தெளிக்கலாம். நீர்ப்பாசனம் செய்யும்போது கோமியத்தில் உள்ள சத்துக்களை தாவரங்கள் எடுத்துக்கொள்ளும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. கீரைகள், தண்டுகள் மற்றும் இளம் செடிகள் போன்ற மென்மையான தாவரப் பாகங்களின் மீது கோமியத்தை தெளிக்கக் கூடாது.
2. நாம் பச்சையாக உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீது கோமியத்தை தெளிக்கக் கூடாது.
3. பயிர்களின் உண்ணப்படாத பாகங்களான செடி, கொடிகள் மற்றும் அலங்கார தாவரங்களின் மீது கோமியத்தை நேரடியாக தெளிக்கலாம்.
பயன்படுத்தும் அளவு:
முதலில் கோமியத்தை தாவரங்களுக்கு சிறிய அளவில் மட்டுமே தெளிக்க வேண்டும். பிறகு சிறிது நாட்கள் கழித்து தாவரங்களில் இலை வாடல் மற்றும் கருகல் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். அப்படி ஒருவேளை பாதிப்புகள் ஏற்பட்டால், கோமியத்தை தெளிக்கக் கூடாது. மாறாக வேப்ப இலைச் சாறுடன் கோமியத்தைக் கலந்து பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.
கோமியத்தை பயன்படுத்தும் முன்னர், மூத்த விவசாயிகள் மற்றும் வேளாண் துறை வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.