

கீரை விவசாயத்தில் மிகவும் எளிதாக சாகுபடி செய்யக்கூடிய வகையில், மணத்தக்காளி கீரைக்கு குறைந்த பராமரிப்பே போதுமானது. தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே மணத்தக்காளி கீரை பயிரிடப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் வரப்போரங்களில் தானாகவே மணத்தக்காளி கீரைகள் வளர்ந்து வரும். இப்படி வளர்ந்து வரும் கீரைகளை கிராமப்புறங்களில் வியாபாரிகள் அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்வதுண்டு.
மணத்தக்காளி கீரையில் கோ1 ரகம் தான் அதிக மகசூலைக் கொடுக்கக் கூடியது. ஒரு ஹெக்டேருக்கு 30 முதல் 35 டன் கீரை மகசூலைப் பெற முடியும். வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் மணத்தக்காளி சாகுபடியைச் செய்யலாம். அங்ககத் தன்மை அதிகமிருக்கும் வண்டல் மண், மணத்தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது.
விதைப்பு:
மணத்தக்காளியை நேரடியாக விதைக்க 5 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்றுகள் முறையில் விதைக்க 21/2 கிலோ விதைகள் தேவைப்படும். 25 முதல் 30 நாட்கள் கொண்ட நாற்றுகளை 30-க்கு 30 செ.மீ., இடைவெளி விட்டு நட வேண்டும்.
விதைப்புக்குப் பின் 3வது நாளில் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பிறகு காலநிலையைப் பொறுத்து வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர்ப் பாய்ச்சினால் போதுமானது. ஒரு மாதத்திற்குப் பிறகு, களையெடுத்து விட்டால் கீரைகள் சீராக வளரும்.
பூச்சி மேலாண்மை:
சாதாரண புழுக்களும், வெட்டுப் புழுக்களும் மணத்தக்காளி கீரையைப் பாதிக்கும். ஆகையால் 3% வேப்பெண்ணெயை தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சி மற்றும் புழுக்களை ஒழித்துக் கட்டலாம்.
கீரைகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் மான்கோசப் மருந்தை 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இம்மருந்தை பிரித்த ஏழு முதல் பத்து நாட்களுக்கு கீரை அறுவடை செய்யக்கூடாது.
உர மேலாண்மை:
நாற்றுகளுக்கு 10 - 15 டன் மட்கிய தொழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். இதுதவிர 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ தழைச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை பாத்திகளில் அடியுரமாக கலக்க வேண்டும்.
நாற்று நட்ட ஒரு மாதத்திற்கு பிறகு களை எடுத்தால், கீரைகள் சீரான முறையில் நன்றாக வளரும். கீரை தான் முக்கிய உணவு என்பதால் செயற்கை உரங்கள் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அறுவடை:
நாற்றுகளை நட்ட அடுத்த 45 நாட்களில் இலை மற்றும் தண்டை கிள்ளி எடுத்து அறுவடையைத் தொடங்கலாம். முதல் அறுவடைக்குப் பிறகு அடுத்தடுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை மணத்தக்காளி கீரையை அறுவடை செய்து கொள்ளலாம்.
மணத்தக்காளி விவசாயத்தில் முறையான பராமரிப்பு இருந்தால் ஆறு மாதத்தில் ஒரு ஹெக்டேருக்கு 30 முதல் 35 டன் கீரைகளை அறுவடை செய்ய முடியும்.
சந்தையில் பொதுமக்கள் மத்தியில் மணத்தக்காளி கீரைக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால், குறைந்த செலவில் லாபம் ஈட்ட விவசாயிகளுக்கு இந்த கீரை நல்ல தீர்வாக இருக்கும்.