
மரங்களின் முக்கியத்துவம்:
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்சனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் மூன்று சிலிண்டர்களின் விலை 2100 ரூபாய். ஒரு வருடத்திற்கு ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கு பாருங்கள்.
மனிதர்களுடைய சராசரி ஆயுள் காலம் 60 என்று வைத்துக் கொண்டால் கூட நாலு கோடிக்கு மேல் ரூபாய் செலவாகும். இவ்வளவு விலை உயர்ந்த , மதிப்பு மிகுந்த சுவாசக் காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகின்றது. அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்க வேண்டும்.
மரங்களின் தேவை:
மரங்கள் என்பது இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இனியாவது மரங்களை வெட்டாமல், வீட்டுக்கு ஒரு மரம் அல்ல இரண்டு மரங்களது வளர்க்கவேண்டும் . அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் குறைந்தது 7 , 8 மரங்களாவது வளர்த்தால்தான் நமக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதுடன் வெயிலின் கடுமையும் தெரியாமல் இருக்கும்.
மழை வளமும் நிலத்தடி நீர்மட்டமும்:
தற்போது நிலவும் அதிக அளவிலான வெப்பம், அனல் காற்று, மழையின்மை, வறட்சி போன்றவை மரங்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. பள்ளியில் சின்ன வயதில் அசோகர் என்ன செய்தார் என்ற கேள்விக்கு உடனே சாலையோரம் மரங்களை நட்டார் என்று பட்டென்று பதில் சொல்வோம்.
அன்று தொலைநோக்குடன் சாலையோரங்களில் அசோகர் மரக்கன்றுகளை நட்டார் என்பதால் தான் மாதம் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து வளர்ந்தது. ஆனால் இன்று மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் மழை வளம் குறைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு இன்றிமையாதது:
காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கு மட்டுமில்லை மனிதர்களுக்கும் பாதிப்பு அதிகம் ஏற்படும் . காற்று மாசுபாட்டால் ஆரோக்கிய கேடு விளையும். மரத்தின் வேர்கள் மண்ணை நிலைப்படுத்தி மண்ணரிப்பை தடுக்கும். மரங்கள் தங்கள் இலைகளில் இருந்து நீரை ஆவியாக்கி காற்றின் வெப்பநிலையை குறைப்பதுடன், மழைப்பொழிவையும் தூண்டுகிறது.
ஒலி மாசுபாட்டை குறைக்க மரங்கள் ஒலித்தடைகளாகவும் செயல்படுகின்றன. மரங்கள் நமக்கு ஆக்சிஜனை வழங்குவதன் மூலமும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதன் மூலமும் மனித வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் வளமான வளங்களை வழங்குகின்றன.
காற்று சுத்திகரிப்பு:
மரங்கள் இயற்கையான காற்று சுத்திகரிப்பார்கள். இவை தீங்கு விளைவிக்கும் மாசுக்களை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதால் காற்றின் தரம் மேம்படுகிறது. மரங்கள் நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் ஓசோன் போன்ற பல்வேறு மாசுபாடுகளை நீக்குகின்றன. இது சுவாச நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றது. மரங்களின் இலைகள் தூசி மற்றும் துகள்களை வடிகட்டி காற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகின்றன.
மண் பாதுகாப்பு:
மரங்கள் மண்வளத்தை அதிகரிப்பதுடன் மண் அரிப்பை தடுக்கவும் உதவுகிறது. வேர்கள் மண்ணை ஒன்றாக பிடித்து அவை அடித்துச் செல்லப்படுவதை தடுக்கின்றன. மண்ணரிப்பை தடுப்பது மூலம் ஆரோக்கியமான மண்ணை பராமரிப்பதற்கு உதவுகிறது.
குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்:
மரங்கள் சுற்றுச்சூழலின் இன்றிமையாத பகுதி என்பதை நாம் மட்டும் உணர்ந்தால் போதாது நம் அடுத்த தலைமுறை குழந்தைக்கும் எடுத்துச் செல்வது அவசியம். மரங்களை நடும் பணியில் நம்முடன் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு மரங்களை நடுவது குழந்தைகளின் மனஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அவர்கள் வெளிப்புற சூழல்களில் விளையாடுவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகளை தரும். இது இயற்கை மீதான பொறுப்புணர்வை வளர்க்க உதவும்.