
நீர்க்காகம் என்னும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழும். உலகெங்கும் இப்பறவைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவை ஆகாயத்திலும் பறந்து செல்லும்; அதேவேளையில், நீரிலும் மூழ்கிச் சென்று மீன்களை வேட்டையாடும். இரண்டு நிமிடம் மூச்சு பிடித்து நீருக்குள்ளே இருக்கும்.
நீண்ட கழுத்து கொண்ட இப்பறவை, மிகுந்த பேராசை கொண்டது. இப்பறவையைக் கண்டால் மீனவர்களுக்கு எரிச்சல்தான். மீனவர்கள் சிரமப்பட்டு பிடிக்கும் மீன்களை இப்பறவைகள் திருடித் தின்றுவிடுவதுதான் மீனவர்களின் எரிச்சலுக்குக் காரணம். இப்பறவைகளால் படகில் மீன்களை வைப்பது என்றால் மீனவர்களுக்குக் கவலை.
ஆனால், சீனா, ஜப்பான் மீனவர்கள் இப்பறவையைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் மீன் பிடிக்கின்றனர். அவர்கள் இப்பறவையைக் கொண்டு கி.பி.960 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியமாக மீன்பிடிக்கின்றனர். நீர்க்காகத்தின் நீண்ட கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டி அதை ஒரு சங்கிலியோடு இணைத்துக் கட்டிவிட்டு, இதை நீரில் மீன்பிடிக்க விடுவார்கள். இப்பறவையும் ஆர்வமாக நீரில் மீன் பிடிக்கும்.
ஆனால் அந்த நீர்க்காகத்தால் அந்த மீனை விழுங்க இயலாது காரணம் கழுத்தில் உள்ள வளையம், அதனை விழுங்க இடம் கொடுக்காது. மீனவர்கள் அதன் வாயில் உள்ள மீனை எடுத்துக் கொண்டு, அதற்குச் சிறிய மீன் ஒன்றை இரையாகக் கொடுத்து மீண்டும் அதை மீன் பிடிக்க அனுப்புவர். இவ்விதமாக இப்பறவையைக் கொண்டு அவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
நீர்க்காகத்தினைக் கொண்டு மீன்பிடிக்கும் முறையினை ‘தூண்டில் பறவைகள்' (Cormorant Fishing) என்கின்றனர். தூண்டில் பறவைகளாகப் பயன்படுத்தப்படும் நீர்க்காகங்களின் வகைகள் இருப்பிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன.
சீன மீனவர்கள் பொதுவாக பெரிய நீர்க்காகத்தை (Phalacrocorax Carbo) பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் ஜப்பானில், ஜப்பானிய நீர்க்காகம் (Phalacrocorax Capillatus), பெரு நாட்டில் நியோட்ரோபிக் நீர்க்காகம் (Nannopterum Brasilianum) பயன்படுத்தப்படுகிறது. நீர்க்காகங்களின் உறவினர்களான டார்ட்டர்கள் (Anhinga) இனத்தைச் சேர்ந்த பறவைகளும் சில சமயங்களில் இந்த மீன்பிடி நுட்பத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தெற்கு சீனாவின் பிற இடங்களில், பாய் மக்கள் 9 ஆம் நூற்றாண்டிலிருந்து எர்ஹாய் ஏரியின் கரையில் நீர்க்காக மீன்பிடித்தலைப் பயன்படுத்தி வருகின்றனர். நீர்க்காக மீன்பிடித்தல் ஒரு காலத்தில் வெற்றிகரமான முயற்சியாக இருந்த போதிலும், இன்று அதன் முதன்மை பயன்பாடு சுற்றுலாத் துறையில், சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுவதாக மாறிப் போய்விட்டது.