இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்! நிரந்தர தீர்வு கிடைக்குமா?

கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்துவது நடந்தவண்ணம் உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil Nadu fishermen
Tamil Nadu fishermen
Published on

இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகள்தான்! இருந்தும் சமீப காலங்களில் நல்லநாள், கெட்ட நாள், என்று கூடப் பார்க்காமல் நமது மீனவர்களை கடலுக்குள் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு செல்வதும், அதிகப்படியான தொகையை அபராதமாக விதிப்பதும், நம்மவர்களின் எந்திரப் படகுகளை அவர்கள் நாட்டு உடமை ஆக்கிக் கொள்வதுமாக, அலைக்கழித்து அவர்களின் குடும்பங்களைச் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். இவ்வளவுக்கும் இலங்கையின் வளர்ச்சிக்கு நம் இந்திய நாடு பலவிதத்திலும் உதவி வருகிறது!

இலங்கையை வேடிக்கையாக, ‘இந்தியாவின் கண்ணீர்த்துளி’ என்றழைப்பதும் உண்டு. நம் மீனவர்களின் கண்ணீரை வாங்குவதால் இப்படிப் பெயர் வந்ததோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இலங்கைத் தீவின் நில அமைப்பே கண்ணீர்த்துளி போன்றே உள்ளது.

ஒவ்வொரு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கடற்பரப்பு (Territorial Waters) என்பது, அந்த நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது 22.2 கி.மீ அல்லது 13.8 மைல்கள். 1982-ம் ஆண்டில் நடந்த கடல் சட்டங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஜனத்தொகை 2024ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 145.09 கோடி. அதே காலத்தில் தமிழ்நாட்டின் ஜனத்தொகை 7.71 கோடி என்றும் ஶ்ரீலங்காவின் மக்கட்தொகை 2.30 கோடி என்றும் விபரங்கள் தெரிவிக்கின்றன. இவை மதிப்பீடு என்பதால் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால் பெரு வித்தியாசங்கள் ஏற்பட வாய்ப்பில்லை! மக்கட்தொகை அடிப்படையில் தேவை-வழங்கல் (Demand-Supply) நிலையைப் பார்த்தோமானால், ஶ்ரீலங்காவின் ஜனத்தொகையைப் போன்று சற்றேக்குறைய 4 மடங்கு அதிக மக்கட் தொகையை நம் தமிழ்நாடு மட்டுமே கொண்டிருக்கிறது. இந்தியாவின் மக்கட்தொகையோடு ஒப்பிட்டோமானால் எத்தனை மடங்காகும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம். நம் தேவையும், இலங்கையின் தேவையும் எவ்வளவாக இருக்கும் என்பதை இதிலிருந்தே அறியலாம்!

இதையும் படியுங்கள்:
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி 1000 மீனவர்கள் போராட்டம்!
Tamil Nadu fishermen

தீவுகளுக்கு இன்னொரு சாதகமும் உண்டு. சுற்றிலும் கடல் இருப்பதால், ஆளுகைக்கு உட்பட்ட கடற்பரப்பும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இலங்கையைப் பொருத்தவரை தேவை குறைவு, மீன் வளப்பரப்பு அதிகம். அதற்காக நமக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்று சொல்ல வரவில்லை. நம் மீனவர்களைக் கைது செய்வதில் இவ்வளவு வேகம் காட்டுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது!

பிரச்சனை என்ன? அவர்கள் கடற்பரப்பில் நம் மீனவர்கள் நுழைந்து விடுகிறார்கள் என்பதுதானே!

- கடலிலும் எல்லையை வரையறுக்கும் விதமாகக் கொடிக் கம்பங்கள் நடலாம். நவீன விஞ்ஞானத்தில் எதுவும் சாத்தியந்தானே!

இதையும் படியுங்கள்:
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு!
Tamil Nadu fishermen

- நம் கடற்படையைப் பல பிரிவுகளாக்கி, இருக்கும் நிலைக்கேற்ப 100 அல்லது 200 மீன் பிடிப்படகுகளுடன் ஒரு பிரிவை அனுப்பலாம். எல்லை தாண்டாமலும், பிற நாட்டு கடற்படையினர், குறிப்பாக இலங்கைக் கடற்படையினர் அத்து மீறாமலும், நம் மீனவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யாமலும் பார்த்துக் கொள்ளலாம்! கடற்கொள்ளையர்களிடமிருந்தும் மீனவர்களைப் பாதுகாக்கலாம்.

- நமது மீனவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எல்லை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் இவர்களின் முதன்மைக் கடமையாகும். அதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு மீனவரும் எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக் கூடாது என்ற உறுதிமொழியைத் தங்களுக்குள்ளாக எடுத்துக் கொண்டு அதனைச் சிரத்தையுடன் பின்பற்ற வேண்டும்.

- கைது செய்யப்படுகையில், இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை உடனடியாக ஈர்க்க, நமது எம்.பி க்களின் 5 பேர் கொண்ட குழுவை இதற்கென அமைக்கலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் உடனடியாகப் பேசித் தீர்வு காண இது வழிவகுக்கும்!

-அபராதத் தொகையைக் குறைக்கவும், படகுகளை உடனடியாக விடுவிக்கவும், இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசி, நிரந்தர முடிவை எட்ட வேண்டும். ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கும் பல்வகை நிவாரணங்களைக் குறைக்க வேண்டும்.

-இவற்றுக்கெல்லாம் வழக்கம் போல் கால தாமதமாகுமென்றால், நீதிமன்றங்கள் மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாமாகவே முன் வந்து (suo moto) மீனவர்களின் நலன் காக்க முயல வேண்டும்.

கடலே எங்கள் வீடு

காற்றே எங்கள் வாழ்வு

என்று கஷ்டப்படும் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்!

இதையும் படியுங்கள்:
தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Tamil Nadu fishermen

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com