
இந்திய அரசு தானியக் கிடங்குகளில் தானியங்களின் கையிருப்பு தற்போது வரலாறு காணாத வகையில் கூடியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாத தரவுகளின்படி அரிசி கையிருப்பு கடந்த ஆண்டை விட 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாகும். அரிசி மட்டுமல்லாமல், கோதுமை கையிருப்பும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு விவசாயிகளிடமிருந்து அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளை விட மிகவும் அதிகமாக தானியக் கையிருப்பு உள்ளது.
அதிகப்படியான உணவு தானியக் கையிருப்பு நமக்குப் பல நன்மைகளைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இதனால் உபரி அரிசியை ஏற்றுமதி செய்து அதிக அளவு வருமானம் ஈட்ட முடியும். அதேநேரத்தில் அதிகப்படியான கோதுமை கையிருப்பு நாட்டுக்கு வருடத்தின் பிற்பகுதியில் தேவைப்படும்.
கோதுமையின் கைஇருப்பு அதிகமாக இருப்பதால் அதை உள்நாட்டிலேயே அரசு விற்பனை செய்யலாம். இதனால் உயரும் கோதுமையின் விலை உயர்வைத் தடுக்க முடியும். கடந்த ஜூன் 1 அன்று கிடைத்துள்ள தகவலின்படி அரசு கிடங்குகளில் உள்ள மொத்த நெல் மற்றும் அரிசி வகைகளின் மொத்த கொள்ளளவு 59.5 MMT (மில்லியன் மெட்ரிக் டன்) என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
இந்த கையிருப்பு அரசாங்கம் நிர்ணயித்த 13.5MMT இலக்கை விட அதிகமாகவே உள்ளது. அரிசியின் கையிருப்பும் அதிகமாகவே இருப்பதால், அடுத்த அரிசி கொள்முதல் அக்டோபர் மாதம் நடைபெறுவதற்கு முன்னர், கிடங்குகளில் உள்ள கையிருப்பை அரசாங்கம் குறைக்க வேண்டிருக்கும். இதனால் அரசு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ அரிசியை விற்க வேண்டி இருக்கும். உள்நாட்டில் அரிசி விற்கப்பட்டால், அரிசியின் விலை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவிகித பங்களிப்பை அளிக்கிறது. அரிசி விலை அதிகரிப்பை குறைக்கவும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் 2022ம் ஆண்டு மார்ச் முதல் 2025ம் ஆண்டு வரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசி தட்டுப்பாட்டை நீக்க இந்தியா உதவும்.
தற்போதைய அரசாங்க கிடங்குகளில் கோதுமையின் இருப்பு 36.9 மில்லியன் டன்களாக உள்ளது. இது அரசாங்கத்தின் இலக்கான 27.6 மில்லியன் டன்களை விட மிக அதிகம். விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் சிறந்த முறையில் கொள்முதல் செய்ததால் இந்த சாதனையை எட்ட முடிந்தது. கடந்த 7 ஆண்டுகளாக நாடு கோதுமையின் தேவையை இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்தது. இந்த ஆண்டு கோதுமையின் இறக்குமதிக்கு தேவை இருக்காது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அளவின் மூலம் நாடு தன்னிறைவை அடைகிறது.