பல நேரங்களில் நாம் செய்திகளில் மீன் மழை பற்றி கேள்விப் பட்டிருப்போம். 'சாதாரண மழையே சில நேரங்களில் பொய்க்கும் போது மீன் மழை எல்லாம் சாத்தியமா?' என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். மீன் விற்கும் விலையில், அது மழையாக பெய்தால் அதை சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அப்படி எல்லா இடங்களிலும் மழை பெய்வதில்லை. அரிதாக சில நேரங்களில் சில இடங்களில் மட்டுமே மீன் மழை பொழிகிறது.
மீன் மழை உருவாக்கம்:
கடலின் மேற்பரப்பில் சூரியனின் வெப்பக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது , அங்குள்ள வாயு சூடாக்கப்பட்டு பின்பு லேசாகி நீராவியுடன் வானத்தை நோக்கி செல்கிறது. காற்று மேல் நோக்கி செல்லும் போது, கடற்பரப்பின் பகுதி குறைந்த காற்று அழுத்த மண்டலம் என்று அழைக்கப் படுகிறது. குறைந்த காற்றழுத்த மண்டலத்திற்கு காற்று வரும் பொழுது அதனுடன் மேகங்களும் சேர்ந்து அந்த காற்றழுத்தப் பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. அதன் பின்னர் சுழல்காற்றாக மாறுகிறது. இந்த சுழல் காற்றானது கடல் பரப்பின் மேற்புறத்தில் இருந்து வானத்தை நோக்கி சில கி.மீ வரை நீண்டு இருக்கும்.
இது போன்று கடலின் மேற்புறத்தில் உருவாகும் சுழல் காற்றுடன் கடலில் கூட்டமாக வாழும் சில மீன் இனங்கள், அந்த சுழலில் சிக்கி காற்றுடன் வானத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றன. இந்த சுழல் காற்று பெரும்பாலும் கடலின் மேற்புறத்திலே வலுவிழுந்துவிடுகிறது. சில சமயம் கரையை கடக்கும் சில சுழல் காற்றானது வலுவிழுந்து கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் மழையாக பொழிகிறது. மீன் மட்டும் அல்லாமல் , அதனுடன் சில கடல்வாழ் உயிரினங்களும் , மேலே சென்று மழையாக பொழிகின்றன. இதை தான் மீன் மழை என்கின்றனர். பெரும்பாலும் இந்த மீன் மழை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தான் அதிகம் பொழிகிறது.
அதிகாரப் பூர்வமாக வரலாற்றில் முதன் முதலாக சிங்கப்பூரில் 1861 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி மீன் மழை பொழிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் நேபாளத்தில் 1900 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியும், கனடாவில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியும் மீன் மழை பொழிந்தது. ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் , ஶ்ரீலங்கா மற்றும் நமது நாட்டில் கூட பலமுறை மீன் மழை பெய்துள்ளது.
இந்தியாவில் கடற்கரை மாநிலங்களில் பல முறை மீன்மழை பெய்துள்ளது. குஜராத் மற்றும் கேரளாவில் முன்பு பெய்துள்ளது. நம் தமிழ்நாட்டில் 2013 செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னையிலும் ஒரு மீன்மழை பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வாக இது உள்ளது.
இந்த மீன்மழைக்கான சுழல் காற்று கடலில் மட்டும் அல்லாமல் சில நேரம் பெரிய ஏரிகளில் கூட நடைபெறுவது உண்டு. ஏரிகளில் சுழல் காற்றில் நன்னீர் மீன்களுடன் தவளைகளும் மேலே சென்று, பிறகு சுழல் வலுவிழந்து சில பகுதிகளில் மழையாக பெய்துள்ளது. ஈரான் நாட்டில் உள்ள ரிஜாயே என்ற ஏரியில் சுழல் ஏற்பட்டு பின்னர் அருகில் உள்ள ஊர்களில் மழையாக பொழிந்தது. இந்த மழையில் பெரும்பாலும் தவளைகளே பொழிந்தது. இந்த மழையை தவளை மழை என்று ஈரானியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மீனும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கு தவளையும் மழையில் கிடைக்கலாம். ஆனால், சீனர்களை பொறுத்த வரையில் எது கிடைத்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!