
நம் வீட்டிற்கு அருகிலும், கொள்ளைப்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் பல மருத்துவப் பயன்களைத் தரக்கூடிய பல செடிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் முறையாக அடையாளம் காணத் தவறிவிடுகிறோம். எனவே, அவற்றின் மருத்துவ பயன்களும் நமக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒருசில செடிகளை நாம் அடையாளம் காண்பது என்பது மிக முக்கியமானது. நமது வீட்டுப் பக்கத்திலேயே உள்ள மருத்துவப் பயன் தரக்கூடிய நான்கு வகை செடிகளையும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் இப்பதிவில் பார்ப்போம்.
1. தும்பைச் செடி: இச்செடியின் இலைகள் நீண்டு நிமிர்ந்த கூர்மை வடிவில் காணப்படும். இதன் பூவானது வெள்ளை நிறத்தில் காணப்படும். மொட்டானது ஒரு பந்து போல் குழி குழியாகக் காட்சியளிக்கும். பூக்களானது இதழ்கள் போல் தனித்து காணப்படும்.
பயன்கள்: தும்பைப் பூவானது சளி, இருமல், தொண்டை கரகரப்பை போக்குகிறது. ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி தும்பைப் பூக்களை பறித்து சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி தேனீல் கலந்து குடிக்கலாம் அல்லது பாலில் போட்டு வடிகட்டியும் குடிக்கலாம். தும்பைப் பூக்களை உலர வைத்து தேனில் குழைத்து சாப்பிட, இரைப்பு நோயின் தீவிரம் குறையும். தும்ப இலைகளையும் பூக்களையும் சேர்த்து அரைத்து சொரி சிரங்கு, உடல் அரிப்பு உள்ள இடத்தில் போட்டால் குணமாகும்.
2. கீழாநெல்லி: இந்தச் செடியானது மிகவும் குட்டையாகக் காணப்படும். தொட்டாசிணுங்கி இலைகளை போல் அளவில் சிறியதாகக் காணப்படும். இதன் விதைகள் மொட்டுகள் போல் குட்டி குட்டியாக இலைகளுக்கு அடியில் காணப்படும்.
பயன்கள்: கீழாநெல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்தோ அல்லது உலர்த்தி பொடி செய்தோ அதனை பாலில் கலந்து அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். கல்லீரல் பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள் கரைவதிலும், உடல் உஷ்ணம், செரிமானக் கோளாறு என்று பல நோய்களைத் தீர்க்கும் பல ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது.
3. குப்பைமேனி: இச்செடியின் இலைகள் சிறியதாக முட்டை வடிவில் காணப்படும். பூக்கள் சிறியதாகவும், பச்சை கலந்த வெள்ளையாகவும் இருக்கும். இவை இலைகளின் காம்புகளில் கொத்தாகத் தோன்றும். வேர்களும் தண்டுகளும் லேசான பச்சை நிறத்தில் இருக்கும்.
பயன்கள்: குப்பைமேனி இலைகளை உப்புடன் சேர்த்து அல்லது வெறுமனே அரைத்து சொறி, சிரங்கு மற்றும் புண்கள் உள்ள இடத்தில் தடவினால் குணமாகும். குப்பைமேனி இலையின் சாற்றை தடவினால் வலி மற்றும் வீக்கம் குறையும். அதேபோல், இந்த இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து சருமத்தில் தேய்த்து வருவதன் மூலம் சருமம் பொலிவடையும். அல்லது இதன் பொடியை ஒரு கிராம் எடுத்து வெந்நீரில் போட்டு குடித்தால் இருமல், சளி குணமாகும்.
4. துளசி: இந்தச் செடியின் பலன்கள் குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். துளசி செடி நன்கு கிளைத்திருக்கும். மேலும், இது ஒரு சிறு செடியாக வளரும். இலைகள் பச்சை நிறத்தில், சிறியதாகவும், கூர்மையான முனைகளுடன் காணப்படும்.
பயன்கள்: துளசியை தேநீர், கஷாயம் அல்லது நேரடியாக இலைகளை மென்று சாப்பிடலாம். சளி, இருமல், மன அழுத்தத்தை குறைக்க, காய்ச்சல், சரும நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்குத் தீர்வாக பல ஆரோக்கிய பலன்களை துளசி நமக்குத் தருகிறது.