தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

Baya weaver
Baya weaver
Published on

நாம் காணும் பலவிதமான பறவைகளில் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கற்பனை திறனுடனும் கூடு கட்டக்கூடிய ஒரு பறவை என்றால் அது தூக்கணாங்குருவி தான். பார்ப்பதற்கு சிட்டுக்குருவிகளைப் போன்றே தோற்றமளிக்கும் இந்த தூக்கணாங்குருவிகளை தற்போது பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதைப் போலவே இந்த தூக்கணாங்குருவிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அழிந்து வரும் பறவை இனங்களின் வரிசையில் இருக்கும் இந்த தூக்கணாங்குருவிகளை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் வானிலையை கணிப்பதற்கு பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. ஆனால் முன்பெல்லாம் கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் அந்த ஆண்டு பெய்யக்கூடிய தென்மேற்கு பருவ மழையை தூக்கணாங்குருவிகளின் கூட்டை பார்த்தே தெரிந்து கொண்டார்களாம். அதற்கு முக்கியமான காரணம் தூக்கணாங்குருவிகள் தாங்கள் கட்டும் கூட்டின் வாயிலை வடக்கு புறம் நோக்கி அமைத்திருந்தால் அன்றைய காலகட்டங்களில் தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்று அர்த்தமாம். மழைக்காலங்களில் காற்றும் மழையும் அதிகமாக இருக்கும் போது மழை பெய்யக்கூடிய திசையை பார்த்தவாறு கூட்டின் வாயிலை அமைத்தால் தண்ணீரும் காற்றும் கூட்டுக்குள் வரக்கூடும் என்பதால் காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் தங்கள் கூட்டின் வாயிலை அமைக்குமாம் தூக்கணாங்குருவிகள்.

எப்பொழுதும் தூக்கணாங்குருவி கூடு கட்டுவதற்கு முன் கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தும். கூடுகட்டும் இடம் மிகவும் உயரமாக இருக்க வேண்டும், நீர் நிலைக்கு அருகில் இருக்க வேண்டும், அதிலும் குறிப்பாக நீர்நிலைகளுக்கு மேலாக தொங்கும்படி இருக்க வேண்டும், அருகில் பயிர்கள் பயிரிடக்கூடிய விவசாய நிலம் இருக்க வேண்டும் என்று பல்வேறு சாதகமான சூழல்களை திட்டமிட்டு அதற்கேற்றார் போல் கூடு அமைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாம். கூடுகளை உயரமாக அமைக்கும் போது எதிரிகளின் தொல்லை இருக்காது, நீர்நிலைகளுக்கு மேலாக அமைக்கும் போது எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும், விளைநிலங்களுக்கு அருகில் அமைக்கும் போது இரைக்காக நெடு தூரம் பயணம் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இத்தகைய இடங்களை தேர்வு செய்கின்றன தூக்கணாங்குருவிகள். அதிலும் குறிப்பாக கூடு அமைக்க தேர்வு செய்யும் மரங்கள் பனை, ஈச்ச மரங்களாக தேர்வு செய்யும். இத்தகைய மரங்களிலும் ஆண் மரத்தை தேர்வு செய்து கூடு அமைக்கும். ஏனெனில் பனை, ஈச்சமரம் போன்றவற்றில் ஆண் மரம் காய்க்காது. இதனால் அதில் மனிதர்களின் தொந்தரவு இருக்காது.

தூக்கணாங்குருவிகள் எப்போதும் கூடு கட்டும் போது மரத்தின் கிளைகளின் உச்சியில் கூடு கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். காரணம் உயரமான மரத்தின் கிளைகளில் நுனிப்பகுதியில் கூடு கட்டும் போது பாம்பு, காகம் போன்ற இரைக் கொல்லிகளால் ஆபத்து ஏற்படாது. ஒருவேளை இவை மரத்தில் ஏறினால் கூட உச்சிப் பகுதி வரை இவற்றால் வர முடியாது என்பதால் நுனிப்பகுதியை தேர்வு செய்து கூடுகள் அமைக்கின்றன. கூடு கட்டுவதை தேர்வு செய்யும் இத்தகைய நுணுக்கமான பண்புகள் தான் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூடுகள் தொங்குவதற்கு காரணம். மேலும் இவை கூட்டமாகவே வாழும் இயல்புடைய பறவைகள். சில நேரங்களில் ஒரே இடத்தில் 20 முதல் 30 வரையிலான கூடுகள் கூட அமைக்கக்கூடும். அவ்வாறு கூடு கட்டுவதிலும் யார் உயரமான இடத்தை பயன்படுத்துவது என்று தேர்ந்தெடுப்பதில் பல்வேறு போட்டிகள் நிலவுவது உண்டு.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?
Baya weaver

கூடு அமைக்கும்போது முதலில் ஆண் பறவையை அந்த இடத்தை தேர்வு செய்து கூடு அமைக்க தொடங்குகிறது. கூடு கட்டுவதற்கு கரும்புத்தோகை, நெற்பயிர் தாள், பனை ஓலை, தென்னங்கீற்று, போன்றவற்றை தேர்வு செய்து தன் கூம்பு போன்ற அலகால் அதிலிருந்து நீண்ட நார்களை கிழித்து அதை பயன்படுத்தியே கூடு கட்ட தொடங்கும். கூடுகட்டும் போது கூட்டினுள் 2 அறைகள் அமைக்கும். ஒரு அறை ஆண் மற்றும் பெண் பறவை தங்கிக் கொள்வதற்காகவும், மற்றொரு அறை முட்டையிட்டு அதனை பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்படும். முட்டையிட்டு பாதுகாப்பதற்காக அமைக்கப்படும் அறையைச் சுற்றிலும் களிமண்ணால் பூசி வைத்திருக்கும். இதனால் பலமான காற்று அடிக்கும் போது முட்டைகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதிலிருந்தும், கூட்டில் இருந்து கீழே விழுவதில் இருந்தும் தடுக்கப்படும். ஆண் பறவை கூடு கட்ட தொடங்கிய பின்பு கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடைந்தவுடன் பெண் பறவையை அழைத்து வந்து கூட்டினை காட்டும். அதில் பெண் பறவை மேலும் சில திருத்தங்கள் செய்து கொடுக்கும். அதன்படி பெண் பறவையின் சம்மதத்தின் பெயரிலேயே கூட்டின் கடைசி வேலையாக இருக்கக்கூடிய வாயில் பகுதி அமைக்கும் வேலையை ஆண் பறவை மேற்கொள்ளும். அது அன்றைய காலங்களில் நிலவக்கூடிய வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் உரிய திசையில் நுழைவாயிலை அமைக்கும்.

ஒரு ஆண் தூக்கணாங்குருவி பறவை ஒரு கூட்டினை அமைப்பதற்கு கிட்டத்தட்ட 500 முறை பயணம் செய்கிறது. 18 நாட்கள் உழைப்புக்கு பின் ஒரு கூட்டை கட்டி முடிக்கிறது. அவ்வாறு கூட்டை கட்டிய பின் ஆண் பறவையும் பெண் பறவையும் கூட்டினுள் சென்று வசிக்கத் தொடங்கும். பெண் பறவை 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சிறிய புழுக்கள் மற்றும் பூச்சிகளை தாய் பறவையும் தந்தை பறவையும் சேகரித்து அதனை அங்குள்ள களிமண்ணில் ஒட்ட வைத்து விடும். இதனை குஞ்சுகள் மெல்ல மெல்ல சாப்பிடத் தொடங்கும். அவ்வாறு பூச்சிகளை சேகரிக்கும் தாய்ப் பறவை சில நேரங்களில் மின்மினி பூச்சியையும் கொண்டு வந்து விடும். மண்ணில் ஒட்டிக்கொள்ளும் மின்மினி பூச்சிகள் இரவு முழுவதும் கூட்டிற்கு விளக்கு போன்று வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் மரத்தில் இருக்கக்கூடிய பாம்பு, ஓணான் போன்ற உயிரினங்கள் கூட்டை நோக்கி வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக தூக்கணாங்குருவிகள் தானியங்களையே உணவாக உட்கொள்ளும். ஆனால் கூடு கட்டும் போது, இனப்பெருக்கம் செய்யும் போது, குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் போது மட்டும் பூச்சி, தவளை, புழு, வண்ணத்துப்பூச்சி போன்றவற்றையும் உணவாக உட்கொள்கின்றன. ஆண் பறவைகள் மார்பு மற்றும் முதுகு பகுதியில் மஞ்சள் வர்ணத்துடனும், பெண் பறவைகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும். இவை கூடு கட்டுவதற்கு சமவெளி பகுதியில் உயரமான மரங்கள் கிடைக்காத போது சில நேரங்களில் கிணறுகளுக்கு உட்புறமாக படர்ந்து இருக்கும் புதர் செடிகளையோ அல்லது முட்செடிகளையோ கூட பயன்படுத்திக்கொண்டு கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
பாட்டு பாடும் 'பத்தினி பறவை'!
Baya weaver

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் குஞ்சுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு முழுதும் தாய் பறவையே சேரும். அந்த நேரங்களில் ஆண் பறவை பறந்து சென்று வேறொரு கூட்டை கட்டும் பணியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கும். இவ்வாறு ஆண் பறவை தன்னுடைய இனப்பெருக்க காலத்தில் கிட்டத்தட்ட 3 முதல் 4 கூடுகள் அமைக்கும். குஞ்சுகள் பெரிதாகி வளர்ந்தவுடன் பெண் பறவையும் மற்றொரு ஆண் பறவையோடு இணை சேர்ந்து மீண்டும் முட்டைகளை இடும். இப்படியாக ஒரு இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஒரு ஜோடி பறவைகள் கிட்டத்தட்ட 10 முதல் 12 குஞ்சுகள் வரை உற்பத்தி செய்கின்றன.

தூக்கணாங்குருவிகளில் சிறப்பாக இருக்கக்கூடிய பண்புகளில் ஒன்றாக பார்க்கப்படுவது அவை கூடு கட்டும் திறன் தான். இதனை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி சிறந்த மற்றும் நுணுக்கமான கற்பனை திறனுடன் கூடிய கூடு கட்டும் பண்பானது தூக்கணாங்குருவிகளின் மரபணுவிலே இயல்பாக இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறு அற்புதமான பண்புகளை பெற்றிருக்கக் கூடிய தூக்கணாங்குருவிகளை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com