

டைனோசர்கள் தோன்றுவதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் காலடி பதித்த ஒரு விசித்திரமான தொல்லுயிர் தான் குதிரைலாட நண்டு. இந்த அதிசயக் கடல் உயிரியின் அடர் நீல நிற இரத்தம், இன்று மனிதகுலத்தின் உயிரைக் காக்கும் மிகப்பெரிய மருத்துவ அமுதமாகத் திகழ்கிறது. நவீன மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த விசித்திர நீல இரத்தத்தின் ரகசியம் என்ன? வாருங்கள் படித்துத் தெரிந்து கொள்வோம்!
இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றான குதிரைலாட நண்டு (Horse Shoe Crab), பார்ப்பதற்கு நண்டு போல் தோன்றினாலும் உண்மையில் அவை சிலந்திகள் மற்றும் தேள்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஆர்த்ரோபோட் (Arthropod) வகையைச் சேர்ந்தவை.
டைனோசர்கள் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றிய ;உயிரோடு வாழும் தொல்லுயிர்கள்; என இவை அழைக்கப்படுகின்றன.
இவற்றின் ஓடு குதிரையின் குளம்பைப் போல வட்டமாகவும் விறைப்பாகவும் இருப்பதால் இதற்கு 'குதிரைலாட நண்டு' என்ற பெயர் பெற்றது. இதற்கு ஆறு ஜோடி கால்கள் உள்ளன; முன் கால்கள் உணவை வாய்க்குள் செலுத்த உதவுகின்றன.
சுவாசிக்க ஏதுவாக இதன் உடலின் அடிப்பகுதியில் புத்தகப் பை போன்ற செவுள்கள் (Book Gills) காணப்படுகின்றன. இதன் உடல் அமைப்பு நூறு மில்லியன் ஆண்டுகளாக எவ்வித பெரிய மாற்றமும் இல்லாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது அறிவியலின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்றாகும்.
குதிரைலாட நண்டுகள் முக்கியமாக ஆசியா மற்றும் வட அமெரிக்கா நாடுகளின் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. உலகில் தற்போது நான்கு வகையான குதிரைலாட நண்டுகள் மட்டுமே உயிரோடு உள்ளன. அவை வாழும் இடங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:
வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதி மற்றும் மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெலாவேர் வளைகுடா (Delaware Bay) பகுதிகள் இவற்றின் புகழ்பெற்ற இனப்பெருக்கத் தளங்களாகும்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான ஒடிசா (Odisha), மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஆழமற்ற கடலோரப் பகுதிகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளில் இவை காணப்படுகின்றன. ஒடிசாவின் 'சந்தபூர்' (Chandipur) கடற்கரை இவற்றுக்குப் பெயர் பெற்றது.
சீனா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன.
இவை ஆழமான கடலில் வாழ்வதில்லை. பொதுவாக மணல் நிறைந்த அல்லது சேற்றுப் பாங்கான ஆழமற்ற கடலோரப் பகுதிகள், முகத்துவாரங்கள் மற்றும் உவர்நீர் சதுப்புநிலங்களிலேயே (Estuaries and Mangroves) அதிகம் வசிக்கின்றன.
குதிரைலாட நண்டுகள் அசைவ உணவு வகையைச் சேர்ந்தவை . இவை கடலின் அடியில் உள்ள மணலில் ஊர்ந்து சென்று தமக்குத் தேவையான உணவைத் தேடி உண்ணுகின்றன. கடலின் அடியில் வாழும் மெல்லுடலிகள் (Molluscs), சிறிய வகை நண்டுகள், புழுக்கள் (Marine Worms), கடல் பாசிகள் மற்றும் இறந்த மீன் துண்டுகளை இவை விரும்பி உண்கின்றன.
குதிரைலாட நண்டுகளுக்கு பற்கள் கிடையாது. மாறாக, அவற்றின் முன் கால்களின் அடிப்பகுதியில் தாடைகள் போன்ற அமைப்பு உள்ளது.உணவை முதலில் தங்கள் கால்களால் பிடித்து அரைத்து, உடலின் மையப்பகுதியில் உள்ள வாய்க்குள் தள்ளி அவற்றை விழுங்குகின்றன.
ஒரு மருத்துவக் அதிசயம் என்னவென்றால், குதிரைலாட நண்டுகளின் மிகவும் வியக்கத்தக்க மற்றும் மனிதகுலத்திற்கு விலைமதிப்பற்ற அம்சம் அவற்றின் நீல நிற இரத்தம் ஆகும்.
மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் இரத்தம் ஹீமோகுளோபின் (Hemoglobin) காரணமாக சிவப்பாக இருக்கின்றது. ஆனால், இந்த நண்டுகளின் இரத்தத்தில் செம்பு (Copper) அடிப்படையிலான 'ஹேமோசயனின்' (Hemocyanin) இருப்பதால், இதன் இரத்தம் அடர் நீல நிறத்தில் உள்ளது.
மேலும், இந்த இரத்தத்தில் வெள்ளை அணுக்களுக்குப் பதிலாக அமீபோசைட்டுகள் (Amebocytes) எனப்படும் சிறப்பு செல்கள் உள்ளன. இந்தச் செல்கள் ஆபத்தான பாக்டீரியாக்கள் மற்றும் அவற்றால் வெளியிடப்படும் நச்சுக்களுடன் (Toxins / Endotoxins) உடனடியாக எதிர்வினை புரிந்து, இரத்தத்தை உறை நிலைக்குக் கொண்டுசென்றுவிடும்.
பாக்டீரியாக்களைச் சுற்றி வளைத்து, அவை உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுத்து, நச்சுக்களை செயலிழக்கச் செய்வது இதன் தனித்திறமையாகும்.
நவீன மருத்துவ உலகில் குதிரைலாட நண்டின் இரத்தம் 'உயிர் காக்கும் அமுதம்' என்றே கூறலாம்.
1970-களில் இதன் இரத்தத்திலிருந்து LAL (Limulus Amebocyte Lysate) என்ற சோதனைப் பொருள் கண்டறியப்பட்டது.
மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் எவ்வித மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளிலும் (Injectables, Vaccines, and Medical Devices) கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா நச்சுகள் இல்லை என்பதை உறுதி செய்ய இந்த LAL சோதனை கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களுக்குச் செலுத்தப்படும் எந்தவொரு ஊசியும் அல்லது மருந்தும் பாதுகாப்பானதா என்பதைச் சோதித்து அறியும் ஒரே நம்பகமான உலகளாவிய முறை இதுவாகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளிட்ட அனைத்துத் தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இந்த நண்டுகளின் இரத்தம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
மருத்துவத் துறையின் தேவைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குதிரைலாட நண்டுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உடல் இரத்தத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு நீல இரத்தம் சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு அவை மீண்டும் கடலில் விடப்பட்டாலும், இந்தச் செயல்பாட்டின் போது ஏற்படும் மன அழுத்தத்தினால் கணிசமான நண்டுகள் இறந்துவிடுகின்றன.
எனவே, தற்போது செயற்கையான முறைகளில் LAL-க்கு இணையான மாற்றுக் கூட்டுப் பொருட்களை (Recombinant Factor C) உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அறிவியல் மற்றும் மருத்துவ உலகிற்கு அளப்பரிய தொண்டு செய்து வரும் இந்த மூத்த உயிரினத்தைப் பாதுகாப்பதும், அதன் எதிர்காலச் சூழலியல் சமநிலையைக் காப்பதும் மனிதகுலத்தின் அவசியமான கடமையாகும்.
பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் தொல்லுயிர் ஒன்றின் மூலம் உலக மக்களின் தடுப்பூசி பாதுகாப்பை உறுதி செய்யும் மருத்துவ அறிவியலின் வியக்கத்தக்க உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.