காட்டின் காவலாளி... விவசாயிகளின் நண்பன்! 'அலுங்கு' பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்!

indian-pangolin
indian-pangolin
Updated on

லுங்கு (Pangolin/Anteater) என்பது உடல் முழுவதும் உறுதியான செதில்களால் மூடப்பட்ட ஒரு பாலூட்டி இனமாகும். 'காட்டின் காவலாளிகள்' அல்லது 'இயற்கையின் பூச்சிக்கொல்லிகள்' என்று அலுங்குகளை சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவை புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கரையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்ணும் ஒரு தனித்துவமான இரவுநேர பாலூட்டி இனமாகும். இதனால் இதனை எறும்புத்தின்னி என்றும் அழைக்கின்றனர். பார்ப்பதற்கு பூனை அளவில் இருக்கும் இந்த அரிய விலங்கு ஆபத்தை உணர்ந்தால் பந்துபோல சுருண்டு கொள்ளும் தன்மை உடையது. இவை அழியும் நிலையில் உள்ள இனமாக பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எறும்புத்தின்னியின் தலை தவிர உடலின் மற்ற அனைத்து உறுப்புகளும் கடினமான செதில்கள் போன்ற தோலால் மூடப்பட்டுள்ளது. இவை நீண்ட கூர்மையான முகம், நீண்ட வால் மற்றும் உறுதியான செதில்கள் (Scales) உடலை போர்த்திய வண்ணம் காணப்படும். ஆண் எறும்புத்தின்னிகளைவிட பெண் எறும்புத் தின்னிகள் அளவில் சிறியவை.

இவை 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இவற்றின் நீண்ட நாக்கு மூலம் எறும்புகளையும், பூச்சிகளையும் தூரத்திலிருந்தே பிடித்து உண்ணும். இவற்றிற்கு பார்வைத் திறன் மிகவும் குறைவு; ஆனால் மோப்ப சக்தி அதிகம். எறும்புத்தின்னிகள் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டவை. சில இனங்கள் மரமேறிகளாகக் கூட உள்ளன.

உலகில் 8 வகையான அலுங்குகள் உள்ளன. அதில் ஆசியாவில் 4 இனங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படுவது 'இந்திய அலுங்கு (Indian Pangolin) ஆகும். இவை இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இவை வறண்ட புதர்க்காடுகள், வெப்ப மண்டல காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றன.

இதன் உடல் முழுக்க உள்ள செதில்கள் இதற்கு பாதுகாப்பு கவசமாக பயன்படுகிறது. உடலில் உள்ள முடிகளே காலப்போக்கில் செதில்களாக மாறிவிட்டன. இவை பிற விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஒரு இரும்பு குண்டுபோல தன்னை சுருட்டிக்கொள்ள இதனால் முடிகிறது.

இதையும் படியுங்கள்:
மரத்தை வெட்டியாச்சு... ஆனா 'ஸ்டம்ப்' போகலையா? அதை வேரோடு அகற்ற 4 எளிய வழிகள்!
indian-pangolin

அலுங்கு எனப்படும் எறும்புத்தின்னிகள் தனிமை விரும்பிகள். இவை மட்டும் இல்லையென்றால் கரையான்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி பெருகி காடுகளிலும், விவசாய நிலங்களிலும் உள்ள மரங்களுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும். இவை உணவுக்காக நிலத்தை தோண்டும்பொழுது மண் இயற்கையாகவே உழப்படுவதால், மண்ணுக்குள் ஆக்ஸிஜன் செல்வது அதிகரித்து, நிலத்தடி நீர் ஊடுருவல் சீராகிறது. மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் எந்தத் தீங்கும் செய்யாத இந்த இனம் மறைமுகமாக விவசாயத்திற்கு பெரும் உதவி புரிகிறது.

இவை செதில்களுக்காகவும், இறைச்சிக்காகவும், இதன் உடல் பாகங்கள் மருத்துவகுணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாகவும் இவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகிலேயே அதிக அளவில் கடத்தப்பட்டு கொல்லப்படும் உயிரினமாக உள்ள, அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com