
காற்று மாசுபாடு, மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரையும் பாதிக்கிறது. காற்று மாசுபாடு மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
நுண்துகள் பொருள்களும், தீங்கு விளைவிக்கும் வாயுக்களும்;
காற்று மாசுபாடு பல்வேறு தீங்கு விளைவிக்கும் துகள்கள் மற்றும் வாயுக்களை கொண்டுள்ளது. அவற்றில் உள்ள நுண்துகள் பொருள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கூட நுழையக்கூடும். வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. அவை மனிதர்களை பாதித்து மூளையின் செயல் திறனையும் பாதிக்கிறது.
மூளையின் நியூரான்கள் சேதம்;
இந்த மாசுபடுத்திகள் மனிதர்களால் உள்க்கப்படும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மூளையின் நியூரான்களை சேதப்படுத்தி இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மூளையின் செல் சேதத்திற்கும் வழி வகுக்கிறது. மூளையின் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் இரண்டும் அறிவாற்றல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர், பார்க்கின்சன் போன்ற நரம்பு சிதைவு நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மூளை வளர்ச்சியில் தாக்கம்;
குழந்தைகளின் மூளை சரியாக வளர்ச்சி அடையாத நிலையில் காற்று மாசுபாட்டால் அவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். அதனால் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்பட்டு குறைந்த ஐ க்யூ திறன், கவனக்குறைவு சிக்கல்கள், ஆட்டிசம், ஸ்பெக்ட்ரம் கோளாறு போன்றவற்றுக்கு ஆளாகும் அபாயங்கள் உருவாகும். அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு ஆளாகும் குழந்தைகளின் மூளை அமைப்பில் வயதானவர்களுக்கு இருப்பதைப் போன்ற டிமென்ஷியா போன்ற மறதி நோய்களும் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நரம்புச்சிதைவு;
மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் போது நாளடைவில் நரம்புச் சிதைவு ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரான்களின் இழப்புக்கு வழிவகுக்கிறது.
மேலும் மனப்பதட்டம், சோர்வு மற்றும் பிற மனநிலைக் கோளாறுகள் அதிகரிப்பதும் ஏற்படும்.
மாசுக்கள் மூளையை அடையும் வழிகள்;
மாசுக்கள் மூளையை அடைய பல வழிகள் உள்ளன. சிறிய துகள்கள் நரம்பு வழியாக, வாசனை மூலமாக நேரடியாக மூளைக்குள் நுழையும். மாசுபடுத்திகள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் உறைந்து மூளை உட்பட பல்வேறு உறுப்புகளை பாதிக்கலாம்.
காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு எளிய வழிகள்;
பயன்பாட்டில் இல்லாத போது விளக்குகள் மற்றும் மின்னணு சாதனங்களை அணைத்து வைக்கலாம். எலக்ட்ரானிக் பொருட்களை புதிய புதியதாக வாங்கி பயன்படுத்துவதுவிட, மின்னணு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் போது ஏற்படும் காற்றுமாசுபாட்டை தவிர்க்க பொருள்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். இலைகள், குப்பைகள், காகிதங்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதை தவிர்க்கவேண்டும்.
எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த வாகனங்களை நன்கு பராமரித்து பயன்படுத்த வேண்டும். மரங்கள் அதிகமாக நட்டு ஆக்ஸிஜன் வெளியிடுவதை ஊக்குவிக்கலாம். வண்ண பூச்சுகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் போன்ற வலுவான ரசாயனங்கள் கொண்ட பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும். பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின்போது பட்டாசுகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.