
சுத்தம் என்பது ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய மிகவும் அத்தியாவசியமான ஒழுக்கமாகும். கண்ட இடங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, தன் வீட்டிற்கு வெளியே, தான் வசிக்கும் சாலையிலேயே திருப்பிவிடுவது, தம் இயற்கை உபாதைகளை வீட்டுக்கு வெளியே, எதிர்வீட்டு அல்லது பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவருக்கருகில் கழிக்குமாறு குழந்தைகளை அனுப்புவது என்று, பிறரைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல், மேற்கொள்ளும் ஒழுங்கீன செயல்களை நாம் எப்போதுதான் நிறுத்திக்கொள்ளப் போகிறோமோ!
2019ம் ஆண்டு மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்தநாள் விழாவின்போது, ‘இந்தியா முழுமையாக ஒரு சுத்தமான தேசம் என்ற நிலைமை உருவாக வேண்டும், அந்த நிலையே மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும்‘ என்ற எண்ணத்தில், நம் பிரதமரால், ‘தூய்மை இந்தியா இயக்கம்‘ துவக்கி வைக்கப்பட்டது. முதலில் இந்தியர் அனைவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.
அதாவது சுத்தமும், சுகாதாரமும் தனக்கு மட்டும்தான் என்று கருதாமல், பிறர் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு தாம் எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் வாழவேண்டும் என்ற தீர்மானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதிகளைக் கட்டாயமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், குறிப்பாக ரயில் பாதை ஓரமாக வசிப்பவர்கள் தண்டவாளங்களைக் கழிப்பிடமாக பயன்படுத்துவது இல்லாமல் போகும். (இந்த அவலம் சென்னை போன்ற நகரப் பகுதிகளில் இன்னமும் நிலவுவதுதான் கொடுமை.)
தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி, அதிகமாக வாங்கிவிட்டு, மிஞ்சிப் போனதைத் தூர எறிந்து அசுத்தப்படுத்துவதைக் கைவிடவேண்டும்.
நம்மிடம் பொதுவாக ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. ‘இதோ பார், எவனோ சாலையில் குப்பையை வீசிவிட்டுப் போயிருக்கிறான்,’ என்று அங்கலாய்த்துக்கொள்வோமே தவிர, அந்தப் பொருளை எடுத்து குப்பைத் தொட்டியில் நாம் சேர்க்க மாட்டோம். சாலையோரமாக அசுத்தம் செய்பவர்களிடம் ‘பக்கத்திலேயே பொது கழிப்பறை இருக்கிறதே, அதைப் பயன்படுத்தக்கூடாதா?’ என்று தட்டிக் கேட்க மாட்டோம். ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று போய்விடுவோம். இதே விட்டேற்றி மனப்பான்மைதான், அதே தவறைச் செய்ய நம்மையும் தூண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
மறுசுழற்சி முறையில் குப்பைகளை விவசாய உரமாகவும், பயோகேஸ் போன்ற எரிபொருளாகவும் மாற்றும் உத்தி தெரிந்தும் அதில் அலட்சியமாக இருக்கிறோம். ஒரு தெருவில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து குறிப்பிட்ட இடத்தில் அவற்றை சேகரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம். தம் தெருவில் யாரும் எந்த அசுத்தமும் செய்யாதபடி கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அனைவரும் புகையிலை போன்ற போதைப் பொருளைப் பயன்படுத்துவதில்லை என்று ஒட்டுமொத்தமாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். நம் தெரு வழியாக நடந்துபோகும் அறிமுகமில்லாத நபர் ஏதெனும் குப்பையை வீசினாரென்றால் அவரைத் தடுத்து நிறுத்தி, நல்லவிதமாக அறிவுரை சொல்லி, அந்தக் குப்பையை தொட்டியில் சேர்க்கச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி கட்டாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தலாம்.
இதுபோன்ற நம் செய்கைகள், நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் சுத்தம் என்ற ஒழுக்கத்தைத் தம் வாழ்நாளில் கடைபிடிக்க வழிசெய்யும்.
இந்த ஒழுக்கம், வாழ்க்கையின் பிற எல்லா நிலைகளிலும் நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, கூடவே துணை வரும்.