

பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாக மனதையும் இல்லத்தையும் சுத்தம் செய்யும் இனிய திருநாள் போகி. இந்தப் பொங்கலில் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, ‘பொங்கலோ பொங்கல்’ என குலவை இடும் அந்தக் கணங்களில் நம் பாரம்பரியத்தின் மணம் நிறைந்து வழியும். குடும்பம், உறவு, ஊர் என அனைத்தையும் ஒன்றிணைக்கும் திருநாளாக பொங்கல் தமிழரின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளது.
பண்டிகை என்றாலே வீட்டை சுத்தம் செய்வது நம் வழக்கம். மூலையில் தேங்கி நின்ற தூசுகளையும், பயன்பாடின்றிக் கிடக்கும் பொருட்களையும் அகற்றி இல்லத்தை ஒளிரச் செய்வதில் ஒரு மன நிறைவு உண்டு. ஆனால், வீட்டின் உள்ளும் புறமும் சுத்தம் செய்துவிட்டால் மட்டும் போதுமா? நாம் வாழும் வீதி, குடியிருக்கும் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டியது நமது கடமை அல்லவா? வீட்டுக் குப்பைகளை வீதியில் விட்டெறிவது நாகரிகமா? சுத்தம் என்பது தனிமனித செயல் மட்டுமல்ல; அது சமூகப் பொறுப்பு என்பதையும் நாம் உணர வேண்டும்.
இந்தப் பொங்கல் பண்டிகை நாட்களில், வீடுகளில் இருந்து அகற்றப்படும் அவசியமற்ற பொருட்களை முறையாக சேகரித்து அப்புறப்படுத்துவதற்காகவே நமது தமிழக அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு நிர்வாகம் மூலமாக வாகனங்களுடனும் பணியாளர்களுடனும் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை அகற்றி, ஒரே இடத்தில் சேகரித்து, அவற்றை முறையாகப் பிரித்து மேலாண்மை செய்யும் பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியின் வெற்றி, நம் ஒத்துழைப்பில்தான் அடங்கியுள்ளது.
எனவே, வீட்டைச் சுற்றிலும் சுத்தம் செய்து, குப்பைகளை உரிய முறையில் உரிய இடத்தில் சேர்ப்பிப்பதுதான் நாம் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அளிக்கும் உண்மையான ஊக்கமாகும். அவர்கள் செய்கிற பணி நம் அனைவரின் நலனுக்காகத்தான் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்துவது நம் கடமை.
நம் முன்னோர்கள் காலத்தில் போகியன்று குப்பைகளை எரித்து போகி கொண்டாடினர் என்று சொல்கிறோம். ஆனால், அந்தக் காலகட்டத்தில் வீடுகள் குறைவு, வெற்றிடங்கள் அதிகம், வாகனப் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் இருந்தது. இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட அந்தச் சூழல், இன்றைய நெருக்கடியான நகர வாழ்க்கைக்கு பொருந்துமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்றைய சூழலில் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. ஏற்கெனவே நாம் சுவாசிக்கும் காற்றில் தூசுக்கள் அதிக அளவில் கலந்துள்ளன. நமது தலைநகரான டெல்லியில் வாழும் நமது சகோதர, சகோதரிகள் சுவாசிக்கக்கூடிய தூய காற்றுக்காக எவ்வளவு பாடுபடுகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆதலால், இயற்கைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய இந்தப் போகி தீயை விட்டு விட்டு, சுற்றுச்சூழலைக் காக்கும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடைமை.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற நம் முன்னோர் சொல்லைப் போல, வெளியில் உள்ள பழைய பொருட்களை மட்டும் அல்லாமல், நம் மனதில் தேங்கி நிற்கும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களையும் அகற்றுவோம். பொறாமை, வெறுப்பு, வன்மம் போன்ற மனக் குப்பைகளை விட்டொழித்து, அன்பும் கருணையும் ஒற்றுமையும் பொங்க வைப்போமே. உறவுகளை மேம்படுத்தி, சமூக பொறுப்புணர்வோடு பண்டிகையை கொண்டாடுவதே உண்மையான போகி.
இந்த போகி, சுத்தமான இல்லங்களோடு மட்டுமல்ல; சுத்தமான மனங்களோடும், பாதுகாக்கப்பட்ட இயற்கையோடும், பொறுப்புள்ள சமூக உணர்வோடும் பொலியட்டும். அதுவே பொங்கல் தரும் முழுமையான மகிழ்ச்சி.