

குதிரை முடி பாம்பு (horse hair snake) என்பது பாம்பு அல்ல; நெமடோமார்பா (Nematomorpha) என்ற தொகுதியில் உள்ள ஒருவகை ஒட்டுண்ணி புழுவாகும். தண்ணீரில் விடப்பட்ட குதிரை முடிகளில் இருந்து இது உயிர் பெற்றது என்ற பழைய நம்பிக்கையின் காரணமாக இது குதிரைமுடி புழு என்று அழைக்கப்படுகிறது. இவை பார்ப்பதற்கு குதிரையின் முடி போல் மெல்லியதாகவும், நீளமாகவும் இருக்கும். இதில் வயது வந்த உயிரினங்கள் சுதந்திரமாக வாழ்கின்றன. ஆனால், இவற்றின் லார்வாக்கள், பூச்சிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் வண்டுகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கிரிக்கெட்டுகள் போன்ற பிற உயிர்களில் ஒட்டுண்ணித்தனமாக வாழ்கின்றன.
இவற்றின் பண்புகள் மற்றும் வாழ்க்கை சுழற்சி முறை: இவை நீளமாகவும், மெல்லியதாகவும் நூற்புழுவைப் போல காணப்படும். சில நேரங்களில் 5 சென்டி மீட்டர் முதல் 2 மீட்டர் நீளம் வரை இவை வளரக்கூடும். முதிர்ந்த புழுக்கள் நீர்ப்பாசன தொட்டிகள், குட்டைகள், ஓடைகள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒட்டுண்ணி லார்வாக்கள்: ஒரு மிட்ஜ் லார்வாவைப் போல, ஒரு நன்னீர் புழு, குதிரைமுடி புழுவின் முட்டைகளை உண்ணும்பொழுது வாழ்க்கை சுழற்சி தொடங்குகிறது. இவை பூச்சிகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. பெரிய புழுக்கள் நீர்நிலைகளில் சுதந்திரமாக வாழ்கின்றன.
வெட்டுக்கிளிகள் மற்றும் கிரிகெட்டுகள் போன்ற பூச்சிகளின் உடலில் முட்டைகளாகச் சென்ற இந்த ஒட்டுண்ணிகள் உள்ளே நன்கு வளர்ந்து, அவை ஒட்டுண்ணிகளாக வாழும்போது அந்தப் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி தண்ணீருக்கு செல்ல வைக்கும். தண்ணீருக்குச் சென்றதும் அந்த பூச்சிகளின் உடலில் இருந்து வெளிவந்து முட்டை இட்டு தங்கள் இனத்தைப் பெருக்கும்.
வாழ்க்கை சுழற்சி: பெண் புழுக்கள் தண்ணீரில் முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரிகள், வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்டுகள், கரப்பான் பூச்சிகள், வண்டுகள் போன்ற பூச்சிகளால் உட்கொள்ளப்படும்போது அவற்றின் உடலுக்குள் சென்று ஒட்டுண்ணியாக வளரும். முழுமையாக வளர்ந்த பிறகு, அந்தப் பூச்சியை நீர்நிலையை நோக்கிச் செல்லுமாறு அவற்றின் நடத்தையை மாற்றியமைத்து, பூச்சியின் உடலில் இருந்து வெளியேறி நீரில் வாழத் தொடங்கும். இந்தப் புழுக்களால் மனிதர்களுக்கோ, வீட்டு விலங்குகளுக்கோ அல்லது தாவரங்களுக்கோ எந்தத் தீங்கும் விளைவதில்லை.
இந்தப் புழுக்கள் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இவற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் ஒன்றாகும்.