

வீட்டுத் தோட்டத்தில் செடிகளை வளர்ப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், நாம் வளர்க்கும் செடிகளின் இலைகள், தண்டு போன்ற பகுதிகளில் மாவுப் பூச்சிகள் (Mealy Bugs) தோன்றுவது ஒரு பிரச்னையாக இருக்கிறது. இத்தகைய மாவு பூச்சிகள் செடிகளில் ஒட்டிக்கொண்டு அனைத்து சத்துகளையும் உறிஞ்சி, சில நேரங்களில் செடிகளை கெட்டுப்போகும் நிலைக்கு உருவாக்குகின்றன. அந்த வகையில் மாவு பூச்சி தொல்லையிலிருந்து செடிகளைக் காக்க வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய, செலவே இல்லாத ஒரு எளிய தீர்வை இப்பதிவில் காண்போம்.
1. முதலில் சாதம் வேகவைத்து வடித்த நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை எதுவும் செய்யாமல் நன்றாக மூடி மூன்று நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
2. மூன்று நாட்கள் கழித்து அதனை திறந்து பார்க்கும்போது இயற்கையாகவே நாம் எதிர்பார்க்கும் ஒரு புளிப்பு வாசனை வரும்.
3. இப்போது அந்த புளித்த வாசனையுள்ள நீரை நன்றாகக் கலக்கிக் கொண்டு அதனுடன் நாம் வீட்டில் பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தப்படும் சோப்பு அல்லது பாத்திரம் தேய்க்கும் திரவம் அல்லது துணி துவைக்க பயன்படுத்தப்படும் லிக்விட் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்க்க வேண்டும்.
4. மாவு பூச்சிகளின் ஒட்டும் தன்மையை உடைத்து அழிக்க இந்த திரவம் பயன்படுகிறது.
5. ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் இந்தக் கலவையை நன்றாகக் கலக்கி ஊற்றி, நம் வீட்டில் மாவு பூச்சிகள் பிடித்துள்ள செடிகளின் இலைகள், தண்டுகள் இருக்கும் இடங்களில் நன்றாகத் தெளிக்க வேண்டும்.
6. சில நாட்கள் கழித்து நாம் தெளித்த கலவை இந்த செடிகளில் பூச்சிகளை வாடி மறைந்து போகச் செய்கிறது. இதனால் செடிகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதைக் காணலாம்.
7. நம் வீட்டில் சாதம் வடித்த நீரும் பாத்திரம் கழுவும் திரவமும் எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தப்படாத இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் செடிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
8. இந்தக் கலவையை மாவு பூச்சிகள் பிடித்திருந்தாலும் அல்லது பிடிக்காவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறை தெளிப்பதனால் செடிகள் ஆரோக்கியமாகவும் பூச்சிகள் இல்லாமலும் புத்தம் புதியது போல செழிப்பாகக் காட்சி தரும்.
வீட்டுத் தோட்டத்தை நேசிக்கும் அனைவரும் வீட்டிலேயே தயாரிக்கும் மேற்கூறிய எளிய தீர்வை பயன்படுத்தி செடிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து பாதுகாத்திடுங்கள்.