
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் நாளன்று ‘உலகப் பாம்புகள் நாள்’ கொண்டாடப்படுகிறது. பாம்புகள் நச்சுடையவை என்று சொல்லப்பட்டாலும், பாம்புகள் இயற்கையின் சமநிலையைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுக்காகவும் நஞ்சைப் பயன்படுத்துகின்றன. இரைகளைப் பற்களால் கவ்விக் கடிக்கும் போது, பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நஞ்சு வெளியேறி இரையின் உடலுள்ளே சென்று அதைக் கொல்கிறது.
ஒரு சில நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும்.
அது சரி, கொம்பேறிமூக்கன் எனும் பாம்பு மிகுந்த நஞ்சுள்ளது என்றும், இது கடித்துவிட்டால் இறந்து விடுவார்கள் என்றும், அவ்வாறு இறந்தவர்களை சுடுகாட்டில் எரிப்பதை மரத்தின் மீது ஏறிப் பார்க்கும் என்று மக்களிடம் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. அது உண்மையா...?
அதில் சிறிதும் உண்மையில்லை, அது ஒரு கட்டுக்கதை.
உண்மையில் கொம்பேறி மூக்கன் பாம்பு, நச்சுத்தன்மையற்ற பாம்புகளில் ஒன்றாகும். இப்பாம்பு, விலரணை பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Dendrelaphis tristis என்று அழைக்கப்படும் இப்பாம்புகள் பொதுவாக, மரப் பொந்துகளில் வாழக்கூடியது.
இப்பாம்பு கழுத்தை விடச் சற்று பெரிய தட்டையான தலையைக் கொண்டுள்ளது. உடலின் முதுகுப் பகுதியில் வெண்கல நிறப் பட்டைகளைக் கொண்டிருக்கும். உடலின் பக்கவாட்டில் அடர் கரும்பழுப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்காக, இதன் ஒல்லியான வால் நீண்டிருக்கும். இதன் உடலின் பக்கவாட்டில் ஒரு மெல்லிய வெள்ளை நிறக் குறுக்குக்கோடு கழுத்தில் தொடங்கி, வால் வரை நீண்டு இருக்கும்.
இதன் நிற அமைப்பானது, இலைகள் மத்தியில் இப்பாம்பு இருப்பது தெரியாதபடி உருவ மறைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் வயிற்றுப் பட்டையில் ‘ப’ வடிவச் செதில்கள் இருக்கின்றன. இந்தச் செதில்கள், மரத்தைப் பற்றிக் கொண்டு ஏற இப்பாம்புக்கு உதவியாக இருக்கிறது. இந்தப் பாம்புகளின் உடல் வழவழப்பான, மிருதுவான செதில்களைக் கொண்டுள்ளது. இந்தப் பாம்பினத்தில் ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகள் சற்று பருமனாகவும், நீளமாகவும் இருக்கும்.
பெரிய கண்களும் கொண்டு ஒல்லியான, நீளமான உடல் கொண்டிருக்கும் இப்பாம்பு, பகலில் தனக்குத் தேவையான உணவை வேட்டையாடி உண்ணக்கூடியவை. இருப்பினும், இரவு நேரத்தில் உயர்ந்த மரத்தில் அமர்ந்து கொண்டு, தனக்கான உணவான மரத் தவளைகள், பல்லிகள், தவளைகள், மரத்தில் வாழும் சிறு பறவைகள், ஓணான் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத இந்தப் பாம்பு மர உச்சியில் இருந்து தாவக்கூடியது. இந்தப் பாம்பு சுறுசுறுப்பான விரைவான துணிவுடைய பாம்புமாகும்.
இந்தப் பாம்பு செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே ஆறு அல்லது ஏழு முட்டைகளை இடுகிறது. அதன் பிறகு 4 முதல் 6 வாரங்களுக்கு அடைகாக்கிறது. இப்பாம்பின் குட்டிகள் பிறக்கும் போது அரையடி நீளம் இருக்கிறது. அதன் பிறகு, 4 முதல் 5 அடி நீளம் வரை வளர்கின்றன.
கொம்பேறி மூக்கன் பாம்பானது, இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, குஜராத், பஞ்சாப், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களிலும், இலங்கை, வங்காள தேசம், பாக்கிஸ்தான், நேபாளம், மியான்மர், பூட்டான் நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.
கொம்பேறிமூக்கன் பாம்பு கடித்தவர்கள் இறந்து விடுவார்கள், அப்படி இறந்தவர்களை சுடுகாடு வரை வந்து மரத்தின் மேலிருந்து பார்க்கும் என்கிற மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தனது கிராமத்திற்கு எதிரிகளாக இருப்பவர்களை அழிக்கும் கதைக்களத்தைக் கொண்டு, 1984 ஆம் ஆண்டு, ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் கொம்பேறி மூக்கன் எனும் தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் தியாகராஜன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.