படமெடுத்துச் சீறும் ராஜநாகம் பாம்பு நம் கண் முன்னே வந்தால் யாருக்கும் இதயத்துடிப்பு நின்றுவிடும் போலிருக்கும். உலகின் மிகக் கொடிய விஷம் கொண்ட இந்தப் பாம்பைப் பற்றிய பயத்திற்குப் பின்னால், தாய்மை ஒளிந்திருக்கிறது. பெரும்பாலான பாம்புகள் கறையான் புற்று, மண் வளை, மரப் பொந்துகளில் முட்டையிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிடும்.
ஆனால், முட்டைகளுக்காகவே தனியாகக் கூடு கட்டும் உலகின் ஒரே பாம்பு இனம் இதுதான் என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். 60 முதல் 80 நாட்கள் நீடிக்கும் இதன் உண்ணாவிரதமும், குஞ்சுகள் வெளிவரும் முன் கூட்டை விட்டுப் பிரியும் விசித்திரப் பழக்கமும் இயற்கை ஆர்வலர்களை வியக்க வைக்கின்றன.
கூடு கட்டும் தனித்துவமான முறை!
முட்டையிடுவதற்கு முன்பு பெண் பாம்பு தன் உடலையே ஒரு வாரியாகப் பயன்படுத்தும். காய்ந்த இலைகள் மற்றும் சிறிய சுள்ளிகளை ஒன்றாகக் குவித்து ஒரு மேட்டை உருவாக்கும். மழைநீர் உள்ளே புகாமல் தடுக்க, நீர்நிலைக்கு அருகில் சற்று மேடான இடத்தைத் தேர்வு செய்யும். அங்கே சுமார் 3 முதல் 4 அடி உயரத்திற்குக் குவிமாட வடிவில் கூடு கட்டும். அந்தக் கூட்டின் அடிப்பகுதியில் 20 முதல் 40 முட்டைகளை இட்டு, அவற்றின் மீது மீண்டும் காய்ந்த இலைகளைக் கொண்டு பாதுகாப்பாக மூடிவிடும்.
பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து வெப்பம் தந்து அடைகாக்கும். ஆனால், இந்தப் பாம்பு முற்றிலும் வேறுபட்ட இயற்கை நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கூட்டில் குவிக்கப்பட்டுள்ள காய்ந்த இலைகள் மக்கும்போது உருவாகும் வெப்பத்தைக் கொண்டே முட்டைகளை அடைகாக்கிறது.
வெளியில் தட்பவெப்ப நிலை எவ்வளவு மாறினாலும் அது கவலைப்படுவதில்லை. கூட்டின் காற்றோட்டத்தைத் தானே சரிசெய்து, உட்புற வெப்பநிலை சுமார் 26°C முதல் 29°C வரை சீராக இருக்குமாறு பராமரிக்கிறது.
2 மாதங்களுக்கும் மேலாகப் பட்டினி!
முட்டையிட்ட பிறகு தாய் பாம்பு அந்தக் கூட்டின் மீதே சுமார் 60 முதல் 80 நாட்கள் தொடர்ந்து காவல் இருக்கும். 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தக் காலத்தில் அது உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்வதில்லை. இவ்வளவு நீண்ட பட்டினியால் உடல் சோர்வடைந்தாலும் அதன் பாதுகாப்பு உணர்வு குறையாது. கூட்டின் அருகே காட்டுப்பன்றி, கழுகு அல்லது மனிதர்கள் வந்தால் தன் உயிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் சீறிப் பாயும். ஆழமான, அச்சமூட்டும் சீற்றத்தை வெளிப்படுத்தி, முட்டைகளைக் காக்கத் துணிந்து தாக்கவும் செய்யும்.
குஞ்சுகள் பொரிக்கும் முன் விலகிச் செல்வது ஏன்
முட்டைகள் பொரிப்பதற்குச் சரியாக 1 வாரம் இருக்கும்போது, தாய் பாம்பு திடீரெனக் கூட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்றுவிடும். 2 மாதங்களுக்கு மேல் உயிரைக் கொடுத்துக் காத்த முட்டைகளைக் கடைசி நேரத்தில் ஏன் கைவிடுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். இதற்குப் பின்னால் ஆழமான தாய்மைப் பாசம் இருப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் விளக்குகின்றனர்.
சுமார் 80 நாட்கள் உணவின்றி இருந்ததால் தாய் பாம்பிற்கு அப்போது கடுமையான பசி ஏற்படும். அந்தக் கடும் பசியில் இயற்கையான வேட்டை உணர்வு தூண்டப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், புதிதாகப் பிறக்கும் தன் சொந்தக் குட்டிகளையே அது சாப்பிட்டுவிடும் அபாயம் உருவாகும். அந்த ஆபத்திலிருந்து குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகவே, அவை முட்டையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே ராஜநாகம் பாம்பு கூட்டை விட்டு விலகிச் செல்கிறது.
வெளியில் பார்ப்பதற்கு எவ்வளவு கொடிய உயிரினமாகத் தெரிந்தாலும், தன் குஞ்சுகள் பாதுகாப்பாக உயிர்வாழ வேண்டும் என்பதற்காகப் பாசத்தையும் பசியையும் கட்டுப்படுத்தி விலகிச் செல்லும் இந்தத் தாய்மை, இயற்கையின் மிகச்சிறந்த அதிசயம் என்றே கூறலாம்.