
தமிழ்நாட்டின் மாநில விலங்காக, ‘நீலகிரி வரையாடு’ தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அறிவியல் பெயர், ‘நீலகிரிடிராகஸ் ஹைலோக்ரியஸ்’ ஆகும். வரையாடுகள் அடர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் வெள்ளை கலந்த நிறத்திலும் காணப்படும். இதன் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும்.
வரையாடுகள், பொதுவாக நீலகிரியை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மற்றும் யானை மலைத் தொடர்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. மலைத் தொடர்களின் மீது 1200 மீட்டர் முதல் 2600 மீட்டருக்கும் அதிகமான உயரம் வரை இந்த ஆடுகளால் ஏறிச் செல்ல முடியும். வலுவான கால்களைக் கொண்டதாலும், அதற்கேற்ற உடல் தகவமைப்பைப் பெற்றதாலும் சுலபமாக இதனால் மலையேற முடிகிறது.
6 முதல் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கூட்டமாகவும், குடும்பமாகவும், குழுக்களாகவும் வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில், இணை சேர்வதற்காக ஆண் ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொள்கின்றன. இந்த சண்டையால் ஒரு சில நேரம் அவற்றின் உயிருக்கே ஆபத்து கூட ஏற்படுகின்றன.
ஆண் வரையாட்டின் கொம்பின் நீளம், பொதுவாக 44.5 செ.மீ. அதேபோல், பெண் வரையாட்டின் கொம்பின் நீளம் 35.5 செ.மீ. வரை காணப்படும். வரையாடுகள் அதிகபட்சமாக 100 கிலோ வரையிலும், குறைந்தபட்சமாக 50 கிலோ வரையிலும் காணப்படுகின்றன.
இதில் பெண் ஆடுகளின் எடை ஆட்டுக்கு ஆடு வேறுபடும். வரை + ஆடு; இதில் வரை என்பது மலையுச்சி, குன்று, குவடு என்று பொருள். பெயருக்கு ஏற்றவாறே இதன் வாழிடமும் அமைந்துள்ளது. வரையாடுகள் தினமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
தமிழக அரசு வரையாடுகளின் பாதுகாப்பிற்கென, நீலகிரி வரையாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது நிகழ்ந்து வரும் காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற நிலைமைகள் போன்றவற்றால் நீலகிரி வரையாடுகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.