
ஒரு தனியார் வளர்க்கும் யானையை மீண்டும் காட்டிற்குள் கொண்டு விடுவது பற்றிய வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்த, 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளன்று வெளியானது. அன்றைய நாளையே, ‘முதல் உலக யானைகள் தினம்’ என்று கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் நாளன்று, உலக யானைகள் தினம் (World Elephant Day) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் யானைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் உலகத்திலுள்ள 65 அமைப்புகள் ஆண்டுதோறும் இந்நாளைக் கொண்டாடி வருகின்றன.
பாலூட்டி வகையைச் சேர்ந்த யானை ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் அனைத்திலும் மிகப் பெரியதாகும். தரையில் வாழும் விலங்குகளில் மனிதனுக்கு அடுத்த நிலையில், யானை மிக நீண்ட காலம் (70 ஆண்டுகள்) வாழும் விலங்காகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட யானையை நெருங்க பயப்படும். சிங்கங்கள் சில ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வரும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லக்கூடும். ஆனால், இவ்வகை நிகழ்வுகளும் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக நினைவுத்திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உலகிலுள்ள யானைகளில், ஆப்பிரிக்க புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என்று மூன்று சிற்றினங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. இவை பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசிய பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6,000 கிலோ கிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் 3 செ.மீ. அளவில் மிகவும் தடிப்பானது. எனினும், இலகுவானதாகவே இருக்கும். யானையின் தோல் இலகுவானதாக இருப்பதால், கொசுகள் யானையைக் கடிக்கும். யானையின் உடல் பருமனாக இருந்தாலும், அதன் வலுவான நான்கு கால்களைக் கொண்டு, மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் அதனால் முடியும்.
யானைகளில் மட்டுமே காணப்படும் சிறப்பு உறுப்பான தும்பிக்கை, மொத்தம் 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இது அனைத்துப் புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சு விடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை இவற்றால் தூக்க முடியும். யானைகள், தும்பிக்கையைப் பொதுவாக உணவை எடுப்பதற்கும், நீர் பருகுவதற்கும் பயன்படுத்துகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது.
யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தனது பார்வையை விடக் கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத் திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி, தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.
ஆண் யானைகளின் (களிறு) குமுக வாழ்க்கை முறையும், பெண் யானைகளின் (பிடி) வாழ்க்கை முறையும் வேறுபட்டவை. ஆண் யானைகள் பருவம் எய்தும் வரை, தம் தாய் உள்ள குழுவோடு வாழும். பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால், பெண் யானைகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் பருவமெய்திய பெண் யானையும் தனித்துக் காணப்படும். பாலூட்டிகளில் யானையே அதிக அளவு சினைக்காலம் கொண்டவை. யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். பொதுவாக, யானை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைக் கன்றுகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 முதல் 115 கிலோ கிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் பாதுகாப்பாக இருந்து உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகிறது.
இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும் என்றாலும், யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. இவை பெரிதாக இருப்பதால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனப்பெருக்கத்திற்கு பல ஆண்டுகள் ஆகின்றன.
ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோ கிராம் இலை, தழைகள் தேவைப்படுகின்றன. யானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து, மரங்களையும், செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன.
வாழிடங்களின் அளவு குறையும்போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது. யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறிய தாவர உண்ணிகள் பெருகி, தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது.
இவை தவிர, மனிதர்கள் தங்களது வேளாண்மை விரிவாக்கத்துக்காக, யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக, யானைகள் புதிய வேளாண்மை குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிர் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், மனிதர்கள் பயணத்திற்காகக் காட்டு வழிகளில் அமைத்திருக்கும் தொடருந்துச் சாலைகளில், யானை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் பெருமைக்குரியதாகக் குறிப்பிடப்படும் யானை, தமிழ் மொழியில் 170 பெயர்களைக் கொண்டிருக்கிறது. யானை குறித்துப் பல பழமொழிகளும், சொலவடைகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்து சமய ஆன்மிக வழிபாட்டிடங்களான கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுவதுடன், பல்வேறு கோயில் நிகழ்வுகளில் அதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெருமைக்குரியதுதான். இருப்பினும், காடுகளில் வாழ்ந்து வரும் யானைகளையும் பாதுகாக்க வேண்டும். அதற்கான வழித்தடங்களையும், வாழ்விடங்களையும் மனிதர்கள் அழிக்காமல் இருக்க வேண்டும்.