

தேனீக்கள் ஆறு கால்கள் (Hexapoda) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்தத் தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன. தேனீக்கள் பெருங்கூட்டமாகத் தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுங்கோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனைச் சேகரித்து வாழ்கின்றன. தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் இந்தக் கூடுகள் அமைக்கின்றன.
தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடியும். இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும்.
முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை (nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்துத் திரும்பவும் கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு மூடி வைக்கின்றன. இந்த மகரந்தத்தூள் நிறைய புரதம் மற்றும் தாதுப் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும், இவற்றில் 10-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர்க் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனைக் கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்து கக்குகின்றன.
தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தைச் (பூந்துகள்) சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குக் கடத்துவதால், பூக்களிடையே சூலுற (கருவுற) உதவுகின்றது. இதனால் சில மரம், செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கும் இருக்கிறது. இதனைப் மகரந்தச்சேர்க்கை (பூந்துகள் சேர்க்கை) என்பர்.
தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளைக் குமுகப் பூச்சியினம் என்கின்றனர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீதான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவை தவிர, பணி செய்ய பெண் தேனீக்கள் 50,000 முதல் 60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். தேனீயைச் சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய்க் கூறுவார்கள்.
- தேனி மு.சுப்பிரமணி