

குதிக்கும் சிலந்திகள் கூர்மையான பார்வை மற்றும் துல்லியமான தாவல்களுக்காக புகழ்பெற்ற சால்டிசிடே (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை வெப்ப மண்டல காடுகள் முதல் நகர்ப்புறங்கள் வரை பல இடங்களில் வாழ்கின்றன.
குதிக்கும் சிலந்தி (jumping spider) சிலந்தி இனங்களில் ஒன்றான இவை வலை பின்னுவதில்லை. குதித்து குதித்துச் செல்லும் பண்பு கொண்டுள்ளதால் இதற்கு குதிக்கும் சிலந்தி என்ற பெயர் வந்தது. சுமார் 6000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை உலகின் மிகப்பெரிய சிலந்தி குடும்பங்களில் ஒன்றாகும். அண்டார்டிகாவை தவிர அனைத்து கண்டங்களிலும் இவை வாழ்கின்றன. இவற்றின் பெரிய முன்பக்கக் கண்கள் ஸ்டீரியோஸ்கோபிக் பார்வைக்கு உதவுகின்றன. இவற்றின் பார்வைத் திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் இவற்றால் வேட்டையாடவும், நிறங்களை பார்க்கவும் உதவுகிறது.
கண்களின் அமைப்பு: முகத்தில் நான்கு பெரிய கண்கள் மற்றும் தலையின் மேல் நான்கு சிறிய கண்கள், மற்ற சிலந்திகளில் இருந்து சால்டிசிட்களை வேறுபடுத்துகின்றன. இவை வலை பின்னாமல், தங்கள் கண்களைப் பயன்படுத்தி இரையைப் பின்தொடர்ந்து திடீரெனப் பாய்ந்து பிடிக்கும். குதிக்கும் சிலந்திகளுக்கு 8 கண்கள் உள்ளன. இவற்றின் முன்பக்க நடுக் கண்கள் (anterior median eyes) மிகவும் பெரியவை. இதுவே இதற்கு தனித்துவமான அடையாளமாகும்.
இவற்றின் எட்டு கண்களால் அவை கிட்டத்தட்ட 360 டிகிரி பார்க்க முடியும். இவை தாவரங்கள், மரக் குவியல்கள் பாறை போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை பகல் நேர வேட்டையாடுபவை. எறும்புகள், பழ ஈக்கள் போன்ற சிறிய முதுகெலும்பில்லாத இரையை இவை வேட்டையாடுகின்றன.
இரையை பிடிக்கவும், எதிரிகளிடமிருந்து தப்பித்துச் செல்லவும் குதித்துச் செல்லும் இந்த சிலந்திக்கு உடல் முழுவதும் கண்கள். அதாவது, நான்கு ஜோடி கண்களைக் கொண்டது. எட்டு கண்களும் வெவ்வேறு காட்சிகளை காண்கின்றன. எனினும் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கூட்டாக செயல்படுகின்றன. நான்கு ஜோடி கண்களும் ஒரே தன்மை கொண்டவை அல்ல. தலையின் முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு கண்கள்தான் முதன்மைக் கண்கள். இந்தக் கண்களால் இவை நிறங்களைக் காண முடியும். மிகவும் கூர்மையான பார்வையைக் கொண்டவை. சிலந்தியின் உடல் சிறியது எனினும் இவற்றின் பார்வைக் கூர்மை அதிகம்.
நன்கு வளர்ந்த பூச்சிகளின் ஏட்டு நுரையீரல் இவற்றிற்கு மூச்சுக் குழாயாகப் பயன்படுகிறது. இந்த சிலந்திகள் வலைகளை உருவாக்குவதில்லை. ஆனால், இலைகள் அல்லது பட்டைகளுக்கு அடியில் சிறிய மறைவிடங்களை உருவாக்குகின்றன. இவை தங்கள் உடல் நீளத்தை விட 50 மடங்கு அதிக தூரம் குதிக்கக் கூடியவை. கவர்ச்சியான நிறங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் இரையை ஈர்க்கவும், இனச்சேர்க்கைக்கும் பயன்படுகின்றன.