
தவளை, தேரை இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அவற்றின் இரண்டுக்கும் உள்ள வாழ்க்கை முறை வேறுபாடுகள் அதிகம். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நீரையும் ,நிலத்தையும் உறவிடமாகக் கொண்டுள்ள தவளை, தேரைகள் நிலப் பகுதியை ஆக்கிரமித்த முதல் முதுகெலும்பு உயிரினங்கள் ஆகும். பெரும்பாலான நீர், நில வாழ்வினங்கள் பெயருக்கு ஏற்றாற்போல் இரட்டை வாழ்க்கை நடத்துவது, அதாவது அவை நீரிலும், நிலத்திலும் மாறி மாறி வாழும். இவை போல் சில முழுமையான நிலத்திலும் சில முழுமையான நீரிலும் வாழ்பவையாகவும் இருக்கலாம். இவை யாவும் ஊர்வனங்கள் போல உடலுக்கு தேவையான வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.
தவளை: தவளை பெரும்பாலும் நீர்நிலையை நாடும். மிருதுவான தோல் கொண்டுள்ள தவளைகளுக்கு தாவும் தன்மையும் மிக அதிகம். இவை நன்றாக நீந்தும். தவளை உணவை கண் விழித்து உட்பகுதியினால் விழுங்கும். இவ்வாறு செய்யும்பொழுது கண் விழிகள் உள் சென்று வெளியே வரும். தவளைகள் திறந்தவெளியையும், சூரியனின் ஒளியையும் வெறுக்கின்றன.
ஆப்பிரிக்காவில் வாழும் கோலியாத் தவளை உலகிலேயே மிகப்பெரிய தவளை ஆகும். ஒளிமிக்க வண்ணம் உடைய சில தென் அமெரிக்க விஷ அம்பு தவளைகள் கொடிய நச்சுத்தன்மை கொண்டது. பிற விலங்குகளுக்கு இதுவோர் எச்சரிக்கையாக உள்ளது. பிற விலங்குகள் இத்தவளைகளை இரையாக்கிக் கொள்ள முடியாதபடி இந்த நச்சுத்தன்மை அமைந்துள்ளது. இந்நாட்டு பழங்குடியினர் இந்த நச்சை அம்பில் தடவி வேட்டையாட உபயோகப்படுத்துவதாகத் தெரிய வருகின்றது.
தவளைகள் பெரும்பாலும் நீர்நிலையின் சுற்றுப்புற நிலத்தில் வாழ்கின்றன. சில தவளைகள் மரத்தின் மேலும் வாழும். இத்தவளைகளுக்கு தாவும் சக்தி மிக அதிகம். இதேபோல் எவ்விதப் பரப்பிலும் பற்றும் தன்மை இவற்றுக்கு உண்டு. அவற்றுக்கு காரணம் தகடு போன்று உப்பி இருக்கும் அவற்றின் கால் விரல்களே ஆகும். பெரும்பாலும் மரங்களில் வாழ்வதால் இவை முட்டைகளை வெள்ளை நுரைக் குமிழ்களில் இட்டு நீர் நிலைகள் அருகில் உள்ள பாறையிலோ, மரக்கிளைகளிலோ வைக்கின்றன. இதனால் முட்டைகள் ஈரமாகவும் இருக்கிறது. குமிழில் இருந்து வெளிவரும் நீரில் விழுந்து தலை பிரட்டையாக உருமாறி வளர்ந்து முழுத் தவளையாக மாறுகின்றன. இவ்வாறு நிலத்தின் உதவி இல்லாமல் இத்தவளைகள் வாழ்க்கையை நடத்துகின்றன.
தேரை: சொரசொரப்பான தோல் கொண்ட தேரையானது மெதுவாக ஊர்ந்து செல்லும். பெரும்பாலும் நிலத்தில் பதுங்கிக்கொள்ளும். இவற்றுக்கு தவளை போல் நீந்த வராது. தேரைகள், தவளைகளை விட அளவில் பெரியவை. இவற்றின் தோல் சொர சொரப்பாக இருந்தாலும் வறண்ட பிரதேசங்களில் நீரில்லாமல் இவற்றால் வாழ முடியாது. தேரைகள் பெரும்பாலும் பாறைகளுக்கு அடியிலும், உடைந்த மரக்கிளைகள், பொந்துகளிலும் பகல் நேரங்களில் பதுங்கிக்கொள்ளும்.
தேரைகளின் அடைகாக்கும் பழக்கம் மிகவும் வினோதமானவை. குறிப்பாக, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் காணப்படும் ஒரு வகை தேரையான மிட் வைப்பு தேரை நீரில் முட்டையிடுவதில்லை. ஆண் தேரையானது கயிறு போல் ஒன்றோடு ஒன்றாக இணைந்துள்ள முட்டைகளை பின்னங்களில் நடுவில் வைத்து சுமார் ஒரு மாத காலம் அடைகாக்கும். பிறகு முட்டை பொரித்ததும் சிறிய லார்வாக்களை நீரில் சேர்த்து விடும். முட்டைகள் ஈரமாக இருப்பதற்கு அவ்வப்பொழுது நீர்நிலைகளில் கால்களை கழுவிக் கொள்ளும். அதேபோல், சுரினாம் தேரைகளில் ஆண் தேரையானது பெண் தேரையிடமிருந்து முட்டையை சேகரித்து தனது முதுகின் மேல் உள்ள பை போன்ற உறுப்பில் வைத்து அடைகாக்கும்.
தவளை, தேரை இரண்டுமே நீண்ட நாக்கை வெளிக்கொண்டு இரையை உட்கொள்ளும். இவை இரண்டுமே நுரையீரல் மற்றும் தோல் வாயிலாக சுவாசிக்கின்றன. நீரில் இருக்கும்போது ஆக்சிஜனை தோல் வழியாகப் பெறுகின்றன. ஆகையால்தான் தவளை, தேரை இரண்டின் தோல் எப்பொழுதும் ஈரம் உள்ளதாக இருக்கின்றன.
ஆண் வகைகள் தனது இனப்பெருக்கப் பருவத்தில் குரல்வளையில் உள்ள காற்றை முன்னும் பின்னுமாக இழுத்து ஒலி எழுப்புகின்றன. இவ்வாறு வெளிப்புறத்து காற்றின் உதவி இல்லாமல் நீர் அடியிலும் இருந்து ஒலி எழுப்புகின்றன. சில சமயம் குரல் எழுப்பும்பொழுது தொண்டையானது பை போல் உப்பி காட்சியளிக்கும். பறவைகள் போல் இவற்றிற்கும் குரல் வேறுபாடுகள் உள்ளன.