
லிப்ஸ்டிக் செடி என்பது தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட ஒரு கொடி போன்ற அலங்காரச் செடியாகும். இது மெழுகு போன்ற இலைகளையும், லிப்ஸ்டிக் குச்சிகள் போல் காணப்படும் சிவப்பு அல்லது சில சமயங்களில் ஊதா நிறப் பூக்களையும் கொண்டுள்ளது. இதற்கு மிதமான ஒளி, நிலையான ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பம் தேவை. இவை சுமார் மூன்றடி நீளம் வரை வளரும்.
லிப்ஸ்டிக் செடியின் சிறப்பம்சங்கள்: பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாத அரிய வகை லிப்ஸ்டிக் தாவரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவில் இருந்து வெப்பமண்டல ஆசியா வரை காணப்படும் இந்தத் தாவர குழுவில் சுமார் 174 இனங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 26 தாவர வகைகள் உள்ளன.
அடர்த்தியான பச்சை இலைகள் மற்றும் சிவப்பு நிற குழாய் வடிவ பூக்களைக் கொண்டது. இதன் பூக்கள் மெழுகு போன்ற டியூபிலிருந்து வெளியேறி, லிப்ஸ்டிக் குச்சிகளைப் போன்ற வடிவத்தில் காணப்படுகிறது. இவற்றை தொங்கும் தொட்டிகள் அல்லது உயரமான கொள்கலன்களில் வளர்க்கலாம்.
இது ஒரு அற்புதமான காற்று சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. அதன் பசுமையான கொடிகள் மற்றும் கண்கவர் பூக்களால் உட்புறத் தோற்றத்தை மேம்படுத்துகிறது. கவர்ச்சிகரமான பூக்கள் மற்றும் பளபளப்பான இலைகளுக்கு பெயர் பெற்ற இவற்றை உட்புற வீட்டு தாவரமாக வளர்க்கலாம். நேரடி சூரிய ஒளி இதற்குத் தேவையில்லை. இதற்கு மறைமுக சூரிய ஒளி தேவைப்படுவதால் வீட்டிற்குள் வைப்பது சிறந்தது. தொட்டிகளில் லிப்ஸ்டிக் செடியை வளர்க்கும்போது ஈரப்பதமான மற்றும் நன்கு காற்றோட்டமான இடமாகப் பார்த்து வைப்பது அவை செழிப்பாக வளர்வதற்கு உதவும்.
லிப்ஸ்டிக் செடிகள் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. இவை உயிர் வாழ நிறைய தண்ணீர் தேவை. ஆனால், இதற்கு அதிகப்படியான உரமோ, சிறப்பு கவனிப்போ தேவையில்லை. இந்தச் செடிகள் நச்சுத்தன்மை அற்றவை. இவற்றின் இலைகள் வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கோடுகளுடன் பல வண்ணங்களில் காணப்படும். இச்செடியின் தண்டு குட்டையாக இருக்கும். மேலே சில இலைகளும், நீண்ட முட்களைக் கொண்டதாகவும் இருக்கும். சிறந்த வெளிச்சம் மற்றும் ஈரப்பதமான மண்ணில் வளர்க்கப்படும்பொழுது லிப்ஸ்டிக் செடியின் பூக்கள் சுமார் 3 வாரங்கள் வரை நீடித்து இருக்கும்.
மொத்தத்தில், இதன் அழகியல் கவர்ச்சி, உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்தி மாசுகளை வடிகட்டவும் உதவுகிறது. குறைந்த பராமரிப்பு மற்றும் தொங்கும் கூடைகளில் அழகாக வளரும் திறன் கொண்டது. இதன் கொடி போன்ற வளர்ச்சி, பசுமையான இலைகள், பிரகாசமான சிவப்பு அல்லது மெரூன் நிறத்தில் உதட்டுச்சாயத்தை ஒத்த பூக்கள் ஆகியவை வீட்டிற்கு அழகு சேர்க்கின்றன.