
தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் பிரானா மீன்கள் (Piranha) இருக்கின்றன. அர்ஜைன்டைனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்திலும் இம்மீன்கள் காணப்படுகின்றன. இவ்வகை மீன்களில் வித்தியாசமான 20 இனங்கள் அமேசான் நதியில் வாழ்கின்றன. செராசல்மிடாயி (Serrasalmidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா (Red Bellied Piranha) என்பவை முரட்டுத்தனமானவை. செராசல்மஸ் நட்டேர்ரி (Serrasalmus Nattereri) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்வின மீன்கள் ஏனையவற்றை விட மிகவும் வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டிருக்கின்றன.
பிரானா மீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 சென்டி மீட்டருக்கு மேல் வளர்வதில்லை. சில இனங்களில் வயிற்றுப் பகுதி செம்மஞ்சள் நிறமாகவும், ஏனைய பகுதிகள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். வேறு சில முற்றாகக் கறுப்பு நிறமானவை. பிரானா மீன்களின் தலை பெரியதாகவும் மழுங்கியும் இருக்கும். உடல் ஆழமானதாக இருப்பதோடு, வயிறு வாள் போன்ற விளிம்புடையதாகக் காணப்படும்.
இவற்றின் வலிமையான தாடைகளில் முக்கோண வடிவான கூரிய பற்கள் இருக்கின்றன. இரு தாடைகளும் ஒன்று சேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இதன் பற்கள் அமைந்துள்ளன. ஆற்றில் நீர்மட்டம் தாழ்வடையும் வேளையில், இவை கூட்டங்களாக இரை தேடிச் செல்கின்றன. ஒரு கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீன்கள் இருக்கக்கூடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன.
பொதுவாக, செந்நிற வயிற்றுப் பிரானா கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன. இரையொன்று இனங்காணப்பட்டதும் கூட்டத்தின் அடுத்த உறுப்பினர்களுக்கு ஒலிச் சைகைகள் மூலம் செய்தி அறிவிக்கப்படுகிறது. சைகை கிடைத்ததும் அனைத்து மீன்களும் இரையை நோக்கித் திரண்டு தாக்குதலை ஆரம்பிக்கின்றன.
ஒவ்வொரு மீனும் இரையை ஒரு கடி கடித்துவிட்டு ஏனையவற்றிற்கு இடங்கொடுத்துவிட்டு அப்பால் செல்லும். இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரமே எஞ்சும் வரை இரையைத் தின்றுத் தீர்த்துவிடுகின்றன. இம்மீன்கள் கூட்டத்தில் விலங்குகளில் மிகப்பெரிய உருவம் கொண்ட யானையாக இருந்தாலும் சிறிது நேரத்தில் தின்றுவிட்டு எலும்புகளை மட்டும் மீதமாக விட்டுச் சென்றுவிடும்.
அண்மைக் காலத்தில் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதும் பிரானா மீன்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பிரேசிலில் நிகழும் இத்தாக்குதல்களுக்கு செராசல்மஸ் ஸபைலோபிலீயூரா (Serrasalmus Spilopleura) என்ற பிரானா இனமே காரணமாக இருதிருக்கிறது. தென்கிழக்குப் பிரேசிலில், ஒரு பிரதேசத்தில் 2003ம் கோடைக் காலத்தில் இரண்டு வாரங்களுக்குள் 52 தாக்குதல்கள் நிகழ்ந்தன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவது இவ்வதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என பிரேசில் நாட்டு விலங்கியலாளர் கூறியிருக்கிறார்.
பிரானா மீன் கடிப்பதனால் ஏற்படும் காயம் வட்ட வடிவமாகக் குழிபோல இருக்கும். பெருமளவு இழையங்களும் குருதியும் இதன் மூலம் இழக்கப்படலாம். ஆறுகளில் குளிக்கச் செல்பவர்களே பெரும்பாலும் இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பிரானா கூட்டங்களால் தின்று தீர்க்கப்பட்ட மனிதர்கள் பற்றிய செய்திகள் அண்மைக்காலத்தில் பல பகுதிகளிலிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் விஞ்ஞானிகள் இச்செய்திகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். மேற்சொன்ன பிரானாக்களினால் முழுவதுமாகத் தின்று தீர்க்கப்பட்டவர்கள் பலர் மாரடைப்பினாலோ, நீரில் மூழ்கியதாலோ இறந்த பின்னரே பிரானா தாக்குதல் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.