
சிறந்த கலாசாரம் மற்றும் பல்வேறு வளங்கள் நிறைந்தது நமது நாடு. நமது மூதாதையர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. இயற்கையை தெய்வமாக நமது முன்னோர் வழிபட்டனர். அனைத்து மதங்களும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்றே போதனை செய்கின்றன. அப்படி அவை சொல்லும் கருத்து என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
உலகின் மக்கள் தொகை பெருக்கத்தாலும், மக்களின் ஆடம்பர வாழ்க்கை முறைகளாலும் அவர்களின் தேவை அதிகமாகிறது. இதனால் இயற்கை வளங்கள் அதிகம் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. ஆதலால் தேவையைக் குறைத்து உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் சேதப்படாமல் வாழ நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தாமல் வாழும் முறைகளை மனிதர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
இந்து மத வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவை நம்மைச் சுற்றி உள்ள மரங்கள், செடி, கொடிகள், மலைகள், வன விலங்குகள், ஆறுகள், கடல் வளம் போன்றவற்றைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுவதுடன் அவை மனித சமூகத்திற்கு எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் கூறுகின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் என்றும் அவை ஒவ்வொன்றும் எவ்வாறு எல்லா உயிர்களிடத்தும் தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் உபநிடதங்கள் எடுத்து இயம்புகின்றன. கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் நூல் காடுகள் பாதுகாப்பு பற்றியும், வன விலங்குகள் மேலாண்மை பற்றியும் உலகிலேயே முதன்முதலாகப் பேசுகிறது.
நமது சங்க இலக்கியங்களும் சித்தர் பெருமக்களின் வரலாறும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தமையால் பெற்ற ஆற்றல்களை எடுத்து இயம்புகின்றன. மனிதனும் சுற்றுச்சூழலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு உடையன என்றும், மனிதன் தனது அளவற்ற ஆசைகளால் இயற்கையை வெறுமையாக்குகிறான் என்றும் எடுத்துக்கூறும் புத்த மதம் ஆசைக்கு அணையிடக் கூறுகிறது.
இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. தனது படைப்புகளால் கடவுள் மகிழ்ச்சி அடைகிறார். படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவை ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்புக்கும் அவர் மதிப்பளிக்கிறார். ‘ஆண்டவர் அன்பு செலுத்துகின்ற படைப்புகளின் மீது மரியாதை வைப்பது, நாம் ஆண்டவர் மீது வைக்கும் உண்மையான மரியாதை ஆகும்’ என்கிறது கிறிஸ்தவ மதம்.
‘இவ்வுலகில் வாழ மனித இனம் ஒன்று மட்டும் இறைவனால் படைக்கப்படவில்லை என்றும், மனிதன் தொடர்பு கொண்டுள்ள இதர இனங்களும் நியாயமாகவும் சமமாகவும் படைக்கப்பட்டுள்ளதாகவும், மனிதன் தன்னிடம் மட்டுமல்லாது, இதர இனங்களையும் காப்பாற்ற வேண்டும்’ என்கிறது இஸ்லாம். இதேபோல் ஜைன மதம், சீக்கிய மதம் இன்ன பிற உலகில் உள்ள அனைத்து மதங்களும் சுற்றுச்சூழல் மூலம் இணக்கமாக வாழ அறிவுரை கூறுகின்றன.
இயற்கை வளங்களின் பாதுகாவலராக விளங்கும் மலைவாழ் மக்கள் தங்களைச் சுற்றி உள்ள இயற்கையை தாயாக வணங்குகிறார்கள். ‘மனிதர்கள் இதர உயிரினங்களுக்கு தலைவர்கள் அல்ல. அவர்கள் விலங்குகளின் ராஜ்ஜியத்திற்கு பொறுப்பாளர்கள் மட்டுமே’ என்கின்றார் அண்ணல் காந்தியடிகள். எனவே, இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாத்து, நமது வருங்கால சந்ததியினருக்கு பொறுப்போடு விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
வளரும் நாடுகளில் நகர்ப்புறங்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரும், குப்பைகளும், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவமனை கழிவுகளும் இன்ன பிறவும் சுற்றுப்புறச் சூழலை பெரிதும் மாசுப்படுத்துகின்றன. இந்நிலையில் நமது அறநூல்களும், முன்னோர்களும் சுற்றுச்சூழல் பற்றி கூறிய நன்னெறி கோட்பாடுகளை பற்றிச் சிந்தித்து, நம் இளைய தலைமுறைகளுக்கும் எடுத்துக் கூறி அவற்றைப் பாதுகாப்பதற்கான கருத்துக்களைப் பதிய வைப்பதை நாம் குறிக்கோளாகக் கொள்வது அவசியம்.