
இயற்கையின் படைப்புகளான பறவை மற்றும் விலங்கினங்களில் சிலவற்றை நம்மில் பலர் வீட்டில் செல்லப்பிராணிகளாக (Pet Animals) வளர்க்க விரும்புகின்றனர். அவற்றின் அழகு, நட்புடன் பழகும் விதம், அவற்றின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு போன்றவற்றை இதற்கான காரணமாகக் கூறலாம். செல்லப்பிராணிகளைத் தேர்ந்தெடுப்பதில் பலர் நாய்கள் இனத்திற்கே முன்னுரிமை வழங்குவதாகக் கூறலாம். நாய்கள் இனத்தில், அவற்றின் உடலமைப்பு, நிறம், சைஸ், டிசைன் போன்றவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகளவில் சுமார் 200 முதல் 400 வரையிலான வேறுபட்ட இனங்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவற்றின் விலை சில ஆயிரங்களிலிருந்து பல லட்சம் (INR) வரையில் இருப்பதாகவும் தெரிகிறது. நாய்கள் இனத்தில் உலகிலேயே மிக அழகான 10 வகைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. சமோய்டு (Samoyed): சமோய்டு நாய்கள் வெள்ளை நிற, தடிமனான இரட்டை அடுக்கு கோட் உடைய மேய்க்கும் நாய் இனமாகும். இவை சைபீரியாவின் சமோய்டு மக்களிடமிருந்து தங்கள் பெயரைப் பெற்றுள்ளன. இவை அழகான, கம்பீரமான தோற்றம் உடையவை. ஆரம்பத்தில் வட சைபீரியாவில் வசித்த மக்களுக்கு, வேட்டையாடவும், பனி வண்டிகளை இழுக்கவும் இந்த வகை நாய்கள் பயன்படுத்தப்பட்டன.
2. சொவ் சொவ் (Chow Chow): இது ஒரு ஸ்பிட்ஸ் டைப் இனத்தை சேர்ந்த நாய் ஆகும். சீனாவின் வடபகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இது. மிக உறுதியான உடலமைப்புக் கொண்டது. அடர்த்தியான உரோமங்களால் உருவான இரண்டு அடுக்கு கோட் உடைய நாய் இது. இதன் கழுத்துப் பகுதி உரோமங்கள் தடிமனாகவும் விறைப்புடனும் காணப்படும். இதன் கோட் நிறம் கருப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை என எந்த நிறத்திலும் இருக்கும். நாக்கு பர்பிள் நிறம் கொண்டது.
3. பொமரேனியன் (Pomeranian): மத்திய யூரோப்பின் பொமரேனியா என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டதால் இதற்கு இந்தப் பெயர் உண்டானது. இது முடி நிறைந்த சிறிய அளவிலான நாய் இனத்தைச் சேர்ந்தது. மேலை நாடுகளில் மேற்குடி மக்களால் வளர்க்கப்பட்டதால் மிகுந்த புகழ் பெற்றது. கருப்பு, வெள்ளை, பிரவுன் என எந்த நிறத்திலும் இதைப் பார்க்கலாம்.
4. பூடில் (Poodle): மிக அழகான, கவர்ச்சிகரமான, நேர்த்தியான, பல சைஸ்களில் காணப்படும் பூடில் இன நாய்கள், சுருள் சுருளான கோட் உடையவை. மிகவும் புத்திசாலித்தனமும் பயமற்ற குணமும் கொண்டவை இவை.
5. பைசோன் ஃபிரிஸ் (Bichon Frise): சிறிய வடிவம், கருப்பு நிறக் கண்கள், பட்டன் சைஸ் மூக்கு, பஞ்சு போன்ற முடியுடன், பஞ்சடைத்த பொம்மை போலவே தோற்றமளிக்கும் இந்த நாய். சுமார் பத்து அங்குல உயரமே கொண்டது. அன்பான, அழகான, வசீகரமான இந்த நாய் நிமிஷத்தில் நம் கைக்குள் வந்து அமர்ந்து கொள்ளும்.
6. பாப்பிலோன் (Papillon): இந்த நாய்க்கு பட்டாம்பூச்சி என்ற பொருள் தரும் பாப்பிலோன் என்ற பெயர் வரக் காரணம் கம்பீரமான, மயிலிறகு போல் தோற்றமளிக்கும் அதன் காதுகளேயாகும். இதன் கால்கள் எழில் நயம் வாய்ந்த அழகுடையவை. ஆனால், வலுவானவை. தடகள வீரனுக்குடைய அத்தனை அழகான பண்புகளும் கொண்டது இந்நாய். விறைப்புடன் நிற்கும் இதன் காதுகளைச் சுற்றி பட்டு நூல் போல தொங்கும் இதன் உரோமங்கள் இதன் முகத்துக்கு தனி அழகைக் கொடுக்கும்.
7. டால்மேஷியன்(Dalmatian): இதன் வெள்ளை நிற தோலில் அமைந்துள்ள கருப்பு நிறப் புள்ளிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாயை ரசிக்கத் தெரியாதவர்கள் எந்த ரசனையும் இல்லாதவர்கள் என துணிந்து கூறலாம். ஆரம்ப காலத்தில் கோச் வண்டி மற்றும் குதிரைகளுக்கு பாதுகாவலனாக பணிபுரிந்து வந்த டால்மேஷியன்கள் தற்போது உரிமையாளரின் தோழனாக மட்டுமே வளர்கின்றன.
8. ஜெர்மன் ஷெபர்ட்: அர்ப்பணிப்பு, விழிப்புணர்வு, பாதுகாப்புணர்வு போன்ற நற்குணங்கள் நிறைந்து, எந்தவித பயமுமின்றி எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயாராயிருக்கும் இனம் இது. இரண்டடுக்கு கோட் கொண்டது. கருப்பும் பிரவுன் நிறமும் கலந்து கவர்ச்சியான தோற்றம் தரக் கூடியது.
9. அகிட்டா (Akita): இந்நாய் ஜப்பானை பிறப்பிடமாகக் கொண்டது. 60 கிலோ வரை எடை கொண்ட பெரிய வகை நாய். அதிக பலம், பாசம், நம்பிக்கைக்குரிய நேசம், ஆதிக்கம் செலுத்தக்கூடிய குணம் கொண்ட நாய். மற்ற நாய்களையும், அறிமுகம் இல்லாதவர்களையும் அண்ட விடாது. பல வகையான நிறங்கள் கொண்டது.
10. சலுக்கி (Saluki): நீண்ட முடியுடன் ஒல்லியான உருவம் கொண்ட நாய். இது பழங்கால இனத்தை சேர்ந்தது. நாடோடிகளும், பழங்குடியினரும் தாங்கள் வேட்டையாட செல்லும்போது உடன் அழைத்து செல்வதற்காக இந்த நாயை வளர்த்து வந்தனர்.