
லின்ங்ஸ் (Lynx) என்பவை வித்தியாசமான உடலமைப்பு மற்றும் நடத்தை கொண்ட காட்டுப் பூனைகள் ஆகும். இப்போது அழிந்து வரும் இந்த காட்டுப் பூனைகளைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஜூன் 11ஆம் தேதி சர்வதேச லின்ங்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பதிவில் லின்ங்ஸ் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
லின்ங்ஸ் - பொருள்;
லின்ங்ஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு பிரகாசம் என்று பொருள். இந்த காட்டுப் பூனையின் கண்கள் பிரகாசமாக இருப்பதாலும், இருட்டிலும் நன்றாக ஒளிர்வதாலும் இதற்கு இந்தப் பெயர் வந்தது. குறைவான வெளிச்சத்தில் கூட இந்தப் பூனைகளின் பார்வை மிகக் கூர்மையாக இருக்கும். 250 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு எலியைக் கூட இதனால் இருட்டில் கண்டுபிடிக்க முடியும். மனிதனுடைய கண்களை விட இருட்டில் ஆறு மடங்கு அதிகமாக பார்க்கும் திறன் கொண்டவை.
கேட்கும் திறன்;
அனைத்து லிங்க்ஸ் இன பூனைகளும் தலையில் கூந்தல் போன்ற அடர்த்தியான முடியும், காதுகளின் நுனியில் கருப்பு முடிக்கற்றைகளையும் கொண்டுள்ளன. இதனால் அவற்றால் மிக நுண்ணிய சப்தத்தைக் கூட கேட்கும் திறன் பெற்றவை.
ஸ்னோஷூக்கள்;
இவை பெரிய அகலமான பாதங்களைக் கொண்டுள்ளன. 7 முதல் 10 சென்டி மீட்டர் வரை விட்டம் கொண்டவை. அவற்றின் அடிப்பகுதியில் அதிக ரோமங்கள் உள்ளன. இவை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் அந்த பாதங்கள் அவற்றை தாங்கி நிற்கின்றன. அடர்த்தியான பனியில் கூட அமைதியாக திறமையாக நகர உதவுகின்றன. இவை நிலத்தில் மட்டும் சிறந்த வேட்டைக்காரர்களாக இருப்பதில்லை, நன்றாக மரம் ஏறும் திறனும், தண்ணீரிலும் நீந்த கூடிய ஆற்றல் பெற்றவை.
உணவு;
ஜெர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழும் காட்டுப் பூனைகள் சிறிய மான்களை உண்கின்றன. ஆல்பைன் பகுதியில் வாழும் காட்டுப் பூனைகள் பனி முயல்கள் மற்றும் கலைமான்களை உண்கின்றன. சராசரியாக வாரத்திற்கு ஒரு மானை சாப்பிடும் பழக்கம் உள்ளது. மேலும் இவை காட்டுப் பன்றிகள், நரிகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்ணுகின்றன.
வீட்டுப் பூனைகளுக்கும் காட்டுப் பூனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்;
இரண்டும் ஒரே பூனைக் குடும்பத்தை சேர்ந்தவைதான். ஆனால் அவை வளரும் இடம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அவற்றின் உடல் அமைப்பும் உணவு முறை மற்றும் நடத்தை போன்றவை வேறுபடுகின்றன.
உடலமைப்பு; வீட்டுப் பூனைகளை விட லின்ங்ஸ் கணிசமாக பெரியதாக இருக்கின்றன. சிறிய லின்ங்ஸ் பூனைகள் கூட வீட்டுப்பூனையை விட இரண்டு மடங்கு பெரியவை. இவை நீண்ட கால்களை கொண்டுள்ளன. வீட்டுக்கு பூனைகளுக்கு இல்லாத அளவு பெரிய மெத்தை போன்ற பாதங்களைக் கொண்டுள்ளன. இருக்கும். வீட்டுப் பூனைகள் மனிதர்களுக்கு அருகாமையில் வசிக்கும் விலங்குகள். லின்ங்ஸ் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும். மாமிச உணவை மட்டும் உண்ணும். பனிமூட்டமான நிலப்பரப்புகளில் கூட பதுங்கியிருந்து வேட்டையாடுவதில் திறமைசாலிகள்.
ஏன் லின்ங்ஸ் காட்டுப் பூனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்?
இவை காட்டு மிருகங்களை வேட்டையாடுவதால் அந்த இனங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தாவரங்கள் உண்ணும் மான்களைக் கொன்று உண்பதால் நிறைய தாவரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன. பறவைகள் மற்றும் சில பிற சிறிய விலங்குகளுக்கு வாழ்விடத்தை உருவாக்க உதவுகிறது.
மறைமுகமாக பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளை ஆதரிக்கிறது. தாம் வேட்டையாடும் முழு இரையையும் உண்ணுவது இல்லை. இவை உண்ட விலங்குகளின் சடலங்களின் மீதத்தை நரிகள், பறவைகள் மற்றும் பூச்சிகள் போன்ற பிற உயிரினங்களுக்கு வழங்குகின்றன. இதனால் சுற்றுச்சூழல் அமைப்பில் உணவு வகை மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கு பங்களிக்கின்றன.