
கோடைக்காலம் என்று நினைக்க ஆரம்பித்தாலே நமக்கு ஞாபகத்தில் வருவது ஊட்டியும், கொடைக்கானலுந்தான்! தமிழ் நாட்டிற்குள்ளேயே இருப்பதாலும், எல்லோராலும் எளிதில் சென்றுவரும் தூரத்தில் இருப்பதாலும், குளு குளு சீதோஷ்ணம் நிலவுவதாலும், அதிகச் செலவின்றிப் பார்த்து வரும் இடம் என்பதாலும், பெரும்பாலானோர் ‘டிக்’ அடிக்கும் இடம் இந்த இரண்டுமே!
அதிலும் கல்விக் கூடங்களுக்கு விடுமுறை விட்ட பிறகு, குடும்பத்தாருடன் நம் மக்களில் பெரும்பாலானோர் விரும்பி வரும் இடம் ஊட்டியே! ஊட்டி ரயிலில் பிரயாணம் செய்வதை பலர் பிறவிப்பயனாகவே கருதுவதுண்டு. ஊட்டி என்றதும் உடன் நினைவுக்கு வருவது தொட்ட பெட்டாவே! எங்கள் ஊரில், அவசரக்காரர்களைக் குறிக்கும் விதமாக, ”ஊட்டி பொயிட்டுத் தொட்டபெட்டாவை பார்க்காம வந்தானாம்!” என்று ஏளனமாகச் சொல்வதுண்டு.
யானைகள் தங்கள் வாழ்விடங்களான காடுகளை விட்டு ஊருக்குள் டூர் அடிப்பது இப்பொழுது வாடிக்கையாகி விட்டது. தினந்தோறும் ஊடகங்களில் ‘இன்றைய யானைச் செய்திகள்’ என்று தலைப்பிட்டுப் போடும் அளவுக்கு யானைகளின் நடமாட்டம் மனித வாழ்விடங்களில், அதிகரித்து விட்டது!
ஊட்டிக்கு உல்லாசப் பயணம் சென்றவர்களை, யானை நடமாட்டம் காரணமாக தொட்ட பெட்டாவுக்குச் செல்லாமல் தடை விதித்திருப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பெரும்பாலான ஏழை, எளியவர்களும், நடுத்தர மக்களும் வாழ் நாளில் ஒரு முறைதான் ஊட்டிக்குச் செல்லும் வசதி பெறுகின்றனர். அப்படிச் செல்வோருக்கு இந்தத் தடையானது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமையும்!
யானைகள் அதிகம் வாழும் காடுகளைச் சுற்றி, அவை வெளியில் வராதவாறு பள்ளங்கள் தோண்ட வேண்டுமென்பது வனநடைமுறை. அதனை முறையாகப் பின்பற்றி, அவற்றுக்கு வேண்டிய உணவுக்கும், நீருக்கும் கோடைக் காலங்களில் ஏற்பாடு செய்ய வேண்டியது வனத்துறையினரின் கடமை!
அவ்வாறு செய்தால், அவை வனத்தை விட்டு வெளியில் வராமல் இருக்கும். இவற்றில் ஏதோ குறைபாடுகள் உள்ளதால்தான் அவை வெளியே திரிந்து மனிதர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன. பலரைத் தாக்கிக் கொல்லவும் செய்கின்றன. அவற்றை வெளியே விட்டு விட்டு, ட்ரோன் கொண்டு தேடுவதெல்லாம் பயன்தராத செயல்கள்!
06-05-25 ஊடகச் செய்தியில், அந்த ஒற்றை யானை ஒரு வீட்டுக்குள் புகுந்து, மேலே போட்டிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை உடைத்து வெளியே வருகிறது! அந்த வீட்டைப் பார்க்கும்போதே அது ஏழையின் வீடு என்று தெரிகிறது. கூரை இழந்த வீட்டார் குளிரில் எங்கே தங்குவர்? அவர்களின் அவலத்திற்கு யார் காரணம்? இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு காண வேண்டாமா?
இது போன்ற அவலங்களைத் தடுக்க நீதி மன்றங்கள் தாங்களாகவே வழக்குப்பதிந்து (suo moto), உரிய வழிமுறைகளை ஆணைகளாகப் பிறப்பித்தால் ஏழை, எளியவர்கள் பயன் அடைவார்களே. பல அப்பாவிகளின் உயிர்களும் காப்பாற்றப்படுமே! அத்தோடு ஊட்டியைப் பார்க்க உற்சாகமாக வருவோரின் ஆசைக்கு விலங்கிடும் அவலமும் தீர்க்கப்படுமே!
‘எல்லாவற்றுக்கும் நீதி மன்றமா?’ என்று சிலர் முணுமுணுப்பது நமக்கும் கேட்காமல் இல்லை! என்ன செய்வது? இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்கள் வாயிலாகவே பல நன்மைகள் நடந்தேறி வருகின்றன. யானைகள், காட்டெருமைகள், கரடிகள் போன்றவை ஊட்டி சாலைகளில் உற்சாக நடை போடுவதைத் தடுத்தால் தான், பயணிகள் பயமின்றி வர ஏதுவாகும். ஏற்கெனவே ‘இ பாசால் ‘ தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு விட்டதாகப் புலம்பி வரும் சிறு வணிகர்களுக்கு, இந்த நடவடிக்கை இதம் தரும்!