மனிதனை முடக்கி போடும் மான்சினீல் விஷ மரங்கள்!

Manchineel Tree
Manchineel Tree
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகில் நச்சுத் தன்மையுடைய எத்தனையோத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றுள், கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரங்களே உலகில் மிகவும் ஆபத்தான மரம் எனப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில், சிறிய ஆப்பிள் என்று பொருள் தரும் மான்சானில்லா (Manzanilla) என்ற சொல்லிலிருந்து இம்மரத்தின் பெயர் உருவாகியிருக்கிறது.

கரீபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த இம்மரங்கள் 15 மீட்டர் (49 அடி) உயரம் வரை வளரும் தன்மையுடையவை. இம்மரம் சிவப்பு - சாம்பல் பட்டை, சிறிய பச்சை - மஞ்சள் பூக்கள், பளபளப்பான பச்சை இலைகள் கொண்டு இருக்கின்றன. இம்மரத்தின் பழங்கள் ஆப்பிள் போன்ற தோற்றத்தில், பச்சை அல்லது பச்சை - மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மரத்தின் பழங்கள் மற்றும் இலைகள் மேலோட்டமாக, ஆப்பிள் மரத்தை ஒத்திருப்பதால் இதனை, ‘கடற்கரை ஆப்பிள்’ என்றும் அழைக்கின்றனர்.

கரீபியன் பகுதியைத் தவிர்த்து, அமெரிக்காவில் புளோரிடா, பஹாமாஸ், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் வடதென் அமெரிக்கப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இம்மரங்கள் காணப்படுகின்றன. தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இம்மரம் பெருமளவு அழிவுக்குள்ளாகி விட்டது என்கின்றனர்.

கடற்கரைப் பகுதிகளிலும், உவர் சதுப்பு நிலங்களிலும் காணப்படும் இம்மரங்கள் இயற்கையாகக் காற்றுத் தடைகளை வழங்குகின்றன. இம்மரத்தின் வேர்கள், மணலை உறுதிப்படுத்தி கடற்கரை அரிப்பைத் தடுக்கின்றன. இம்மரம் இயற்கை வளத்திற்கு உறுதுணையாக இருக்கின்ற போதிலும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் அனைத்திற்கும் மிகவும் ஆபத்தான மரமாகவே இருக்கிறது.

இம்மரத்தின் தண்டு, இலை, பூ, காய், பட்டை என்று அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளை நிறத்திலான பால் போன்ற சாறு நச்சுத்தன்மையுடனும், அமிலத்தன்மையுடனும் இருக்கின்றன. இந்தச் சாறு மனிதர்கள் அல்லது விலங்குகளின் தோலில் பட்டால், அவ்விடங்களில் உடனடியாகக் கொப்புளங்கள் ஏற்பட்டு விடும். மழை பெய்யும் வேளையில், இம்மரத்தின் கீழ் நின்றிருந்தால், மரத்திலிருந்து வடியும் மழைநீருடன் இம்மரத்திலிருக்கும் அமிலத் தன்மையிலான திரவமும் கலந்து தோலில் கொப்புளங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் கொண்டது.

இதையும் படியுங்கள்:
Animal Agriculture: விலங்கு விவசாயமும், சுற்றுச்சூழலும்!
Manchineel Tree

இம்மரத்தை எரித்து அழித்து விடலாமென்றாலும், இம்மரத்தினை எரிப்பதால் ஏற்படும் புகை கண்களைக் குருடாக்கி விடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இம்மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் இரைப்பை, குடல் அழற்சிகளையும் ஏற்படுத்தி அழிவுக்கு வழி வகுத்து விடும். சுவாசப்பாதைகளை உடனடியாக முடக்கிவிடும் தன்மை கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.

மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்திற்கும் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இம்மரத்தில் கருப்பு முள்ளந்தண்டு உடும்பு (Ctenosaura similis) எனும் உயிரினம் மட்டும் இம்மரத்தின் பழங்களை உட்கொண்டு, அம்மரத்திலேயே வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இம்மரத்தில் இத்தனை ஆபத்துகள் இருந்த போதிலும், கரீபியன் தச்சுப் பணியாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இம்மரத்தின் அடிப்பகுதியில் நெருப்பு வைத்து, இம்மரத்தைக் கீழே விழச் செய்து, அதனை நன்றாகக் காய வைத்து, அதன் நச்சுத்தன்மைகளைக் அகற்றி, மரத்திலான தளவாடப் பொருட்கள் செய்வதற்குப் பயன்படுத்தி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது!

logo
Kalki Online
kalkionline.com