
மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக பூமியின் சராசரி வெப்பம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 2.7°C உயரக் கூடும் என்றும் புவியியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வில், பத்து நாடுகளைச் சேர்ந்த 21 விஞ்ஞானிகள் எட்டு பனிப்பாறை மாதிரிகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள 2,75,000 பனிப் பாறைகளில் 2,00,000க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளின் எதிர்காலத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் வெப்ப நிலையால் நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியில் உள்ள பாறைகள் பெரும்பாலும் உருகி, மீதம் கால் பகுதி பனிப்பாறைகள் மட்டுமே எஞ்சி இருக்கும். முக்கால் பகுதி பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். இதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். குறிப்பாக கடலோர மாநகரங்களான மும்பை, சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றின் பெரும்பகுதி சுமார் இரண்டு அடி நீரில் மூழ்கி விடும்.
சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, உலகின் பனிப்பாறைகள் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகவும் வேகமாக உருகி வருகின்றன. இந்த வேகம் இப்படியே தொடருமானால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், பூமியின் சராசரி வெப்பநிலை மேலும் 2.7°C அதிகரித்து, உலகின் பனிப் பாறைகளில் 76 சதவிகிதம் உருகி கடலில் தண்ணீராக கலந்து விடும். மீதியுள்ள 24 சதவிகித பனிப்பாறைகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.
இன்றைய நிலையில் உள்ளபடி, புவியின் வெப்பநிலை அப்படியே உயராமல் இருந்தாலும், 2020ம் ஆண்டு நிலைகளிலிருந்து பனிப்பாறை 39 சதவிகிதம் உருகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தற்போதைய சராசரி வெப்பநிலை கூட பனிப் பாறைகளின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
புவியின் வெப்பநிலை உயர்வால் , உலகில் உள்ள பல நாடுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து, பல நாடுகளின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகும் வாய்ப்பு உள்ளது. புவியின் சராசரி வெப்பநிலை 2°C அதிகரித்தால், ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் மற்றும் டென்மார்க்கில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் முற்றிலுமாக உருகும். இதனால் இந்த நாடுகளின் கடலோரப் பகுதிகள் மூழ்கத் தொடங்கும்.
இது மட்டுமல்லாது, வட அமெரிக்காவின் ராக்கி மலைகள், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள பனிப் பாறைகளில் சுமார் 90 சதவீதம் உருகிவிடும். தெற்காசியாவில் உள்ள இமயமலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்துகுஷ் இமயமலையில் உள்ள பனிப்பாறையில் 75 சதவிகிதம் உருகி விடும்.
இமயமலையில் இருந்து உருவாகும் கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகள் பாய்ந்து, உலகில் இரண்டு பில்லியன் மக்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவுத் தேவைகளுக்கு ஆதாரமாக உள்ளன. வெப்பநிலை உயர்வு 1.5°C ஆக தடுக்கப்பட்டாலும் கூட 55 முதல் 60 சதவிகிதம் வரை பனிப்பாறைகள் உருகும். உலக மக்கள் எல்லாம் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி வெப்பமயமாதலை தடுத்தாலும் கூட, பனிப்பாறைகள் உருகுவது பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும் என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.