
கடுக்காயைப் பற்றி அனைவரும் நன்றாக அறிந்து இருப்போம். அதனுடன் அதன் மரமும் எவ்வாறு பயன் தருகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
சிறப்பியல்புகள்:
இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பரவியது .இது ஒரு இலையுதிர் மரமாகும். இதன் தண்டு பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. இம்மரம் இலையுதிர் மற்றும் தட்பவெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது.
தட்பவெப்பம்:
கடுக்காய் மரம் ஆனது சுமார் 60 அடி உயரம் மற்றும் 2 முதல் 3 மீட்டர் விட்டம் வரை வளரக்கூடிய மரமாகவும், மோசமான பாறை மண் முதல் மணற்பாங்கான களிமண் மற்றும் செம்மண் பகுதிகளில் செழிப்பாக வளரும். அதுமட்டுமின்றி கடல் மட்டத்திலிருந்து பொதுவாக ஆயிரம் மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது.
மரப்பண்புகள்:
இலைகள் நீள் வட்ட வடிவில் காணப்படுகின்றன. இலைகள் ஏழு முதல் எட்டு சென்டிமீட்டர் நீளமும் 4.5 முதல் 10 சென்டிமீட்டர் விட்டமும் கொண்டிருக்கும். இதன் இலை கொத்து அமைப்பு ஒன்று விட்டு ஒன்றாக இருக்கும். பூவானது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 20 முதல் 30 பூக்கள் வரை இருக்கும். இதன் பூக்கும் நேரம் இடத்தை பொறுத்து மாறுபடும். சமதள நிலத்தில் மார்ச் முதல் ஜூன் வரையிலும் ,மலைப்பகுதிகளில் மே முதல் ஆகஸ்ட் வரையிலும் பூக்கும். இதன் காய்கள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு அரக்கு நிறத்தில் காணப்படும்.
இந்த பழத்தின் மேல் பகுதி கெட்டியாக இருக்கும். இதன் நீளம் 3-5 சென்டிமீட்டர் ஆகும். ஒரு கிலோ விதையில் 140 முதல் 220 விதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மர மேலாண்மை:
இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நன்கு தேர்வு செய்யப்பட்ட முதிர்ந்த விதைகளை நொதித்தல் முறையில் அல்லது உள்விதையில் குருத்து வெட்டப்படாதவாறு விதையின் கீழ் பகுதியை வெட்டிவிட்டு தண்ணீரில் 36 மணி நேரம் ஊறவைத்ததின் மூலம் நாற்றங்காலில் விதைகளை அதிக அளவில் குறைந்த நாட்களில் முளைக்கச் செய்யலாம்.
விதை இல்லா இனப்பெருக்கம் கடுக்காய் மரங்களை ஒட்டு கட்டுதல் முறையின் மூலம் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம். நன்கு வளர்ந்த மற்றும் மகசூல் தரும் மரங்களில் இருந்து தாய் தண்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளில் ஒட்டுக்கட்டுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
கடுக்காய் மர நாற்றுகளை தோப்புகளாக உருக்குவாக்குவதற்கு 3 ×8 மீட்டர் அல்லது 9×9 மீட்டர் இடைவெளியில் 16 சென்டிமீட்டர் ஆழமுள்ள குழிகளில் நடவேண்டும். நடுவதற்கு முன் குழிகளில் இரண்டு கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் டிஏபி இடுவது நல்லது.
மகசூல்:
இம்மரமானது ஏழாம் வருடத்தில் இருந்து பயனளிக்கும். ஒரு மரமானது பத்தாவது வருடத்தில் 30 லிருந்து 35 கிலோ காய்ந்த விதைகளை கொடுக்கும். சராசரியாக ஒரு ஹெட்டேருக்கு ஒரு வருடத்தில் 10- 15 டன் உலர்ந்த பழங்கள் கிடைக்கின்றன.
மருத்துவம்:
கடுக்காய் மரப்பழம் மற்றும் விதைகள் பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் தூள் சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
தடிமரம்:
இதன் கட்டை வெள்ளை நிறத்தினால் மென்மையாகவும் அடர்த்தி 675 -900 கிலோ 3 மீட்டர் (12 சதவீதம் ஈர பதத்தில்) உள்ளது. இதனால் பெட்டிகள் செய்ய பயன்படுத்தப் படுகின்றன.
விலை:
கடுக்காய் மரங்களிலிருந்து பெறப்படும் காய்களுக்கு எப்பொழுதும் நல்ல சந்தை விலை உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு கிலோ கடுக்காய் விலை 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மரத்திலிருந்து சுமார் 40 கிலோ முதல் 100 கிலோ வரை மரங்களின் வளர்ச்சியை குறித்து கிடைக்கப்பெறும் .
மேலும் கடுக்காய் மரங்கள் தடிமர விற்பனைக்காக பயன்படுத்தப்படுவதால் தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு டன் ₹6,000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.