

சில விலங்குகள் தங்களைச் சுற்றியுள்ள செடிகள் அல்லது மரங்களைப் போல நிறம் மாறி எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கடலுக்கு அடியில் வாழும் ஒரு வித்தியாசமான ஆக்டோபஸ் ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மிமிக் ஆக்டோபஸ் (Mimic Octopus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் வெறும் நிறத்தை மட்டும் மாற்றுவதில்லை. இது சுமார் பதிமூன்று வகையான கொடூரமான கடல் வாழ் உயிரினங்களைப் போல அச்சு அசலாக தனது உருவத்தையும் அசைவுகளையும் மாற்றிக்கொள்ளும் அபாரமான திறன் கொண்டது. எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக நடமாடும் இந்த உயிரினம் எப்படி இப்படி ஒரு அதிசயத்தை செய்கிறது எனக்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
திறந்த வெளி வாழ்க்கை!
பொதுவாக ஆக்டோபஸ்கள் பெரிய பாறைகள் அல்லது அடர்த்தியான பவளப்பாறைகளுக்கு இடையே தங்களை பாதுகாப்பாக ஒளித்துக்கொண்டு வாழும். ஆனால் இந்த மிமிக் ஆக்டோபஸ் வாழும் இடம் முற்றிலும் வேறுபட்டது. இவை மணல் மற்றும் சகதி நிறைந்த ஆழமற்ற திறந்தவெளிக் கடல் பகுதிகளில் மட்டுமே வசிக்கும்.
இங்கு ஆபத்து வந்தால் ஒளிந்துகொள்ள எந்த ஒரு சின்ன இடமும் கிடைக்காது. பட்டப்பகலில் இரையைத் தேடி வெளியே வரும்போது பெரிய மீன்கள் மற்றும் வேட்டையாடும் உயிரினங்களிடம் இது மிக எளிதாகச் சிக்கிக்கொள்ளும். ஒளிந்துகொள்ள வழியே இல்லாத இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் தப்பித்து உயிர் வாழ்வதற்காகவே இயற்கை இதற்கு இந்த உருமாறும் சூப்பர் பவரைக் கொடுத்துள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ற பக்கவான நடிப்பு!
இந்த ஆக்டோபஸின் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால் இது சும்மா ஏதோ ஒரு உருவத்திற்கு மாறிவிடாது. தன்னைத் தாக்க வரும் எதிரி எந்த உயிரினத்தைப் பார்த்துப் பயந்து ஓடுமோ அந்த உயிரினமாகவே பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மாறிவிடும். உதாரணமாக, ஒரு சின்ன மீன் இதைத் தாக்க வந்தால், அந்த மீனை வேட்டையாடும் பயங்கரமான கடல் பாம்பு போல தனது எட்டு கால்களையும் நீளமாக விரித்து மணலில் ஊர்ந்து செல்லும்.
வேறு சில நேரங்களில் அப்படியே உடலைத் தட்டையாக மாற்றி ஒரு ஃபிளாட் ஃபிஷ் போல நீந்தும். சில சமயம் தனது கைகளை மேலே தூக்கி கொடிய விஷம் கொண்ட லயன் ஃபிஷ் போல போஸ் கொடுக்கும். இது எல்லாமே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அது செய்யும் ஒரு கச்சிதமான நாடகம்.
ரகசியம்!
எலும்பே இல்லாத இதன் வளைந்து கொடுக்கும் உடலமைப்பு தான் இந்த பிரம்மாண்டமான வித்தைக்கு முக்கியக் காரணம். இதன் தோலில் உள்ள குரோமட்டோபோர்கள் எனப்படும் சிறப்பு செல்கள் மூளையின் கட்டளைக்கு ஏற்ப பலவிதமான நிறங்களை உடனுக்குடன் உருவாக்கித் தரும்.
அதுமட்டுமில்லாமல் தோலின் தன்மையை கல் போன்று சொரசொரப்பாகவோ அல்லது கண்ணாடி போன்று மிருதுவாகவோ மாற்றிக்கொள்ளும் பாபில்லே எனப்படும் தசைகளும் இதில் நிரம்பியுள்ளன. எலும்புகள் இல்லாததால் ரப்பரைப் போல தனது உடலை எப்படி வேண்டுமானாலும் சுருக்கி விரித்து எந்த ஒரு வடிவத்திற்கும் இதனால் சுலபமாக மாறிவிட முடியும்.
மற்ற கடல் விலங்குகளைப் போல எதிரிகளிடம் இருந்து தப்பிக்க கடினமான ஓடுகளோ, தற்காப்புக்கான கொடிய விஷமோ இந்த சின்ன ஆக்டோபஸிடம் கிடையாது. அதற்குப் பதிலாக மிகவும் புத்திசாலித்தனமாக ஆபத்தான விலங்குகளின் அடையாளத்தை மட்டும் கடன் வாங்கி எதிரிகளை குழப்பித் தப்பிக்கிறது.
தன்னிடம் பலம் இல்லாவிட்டாலும் மூளையை யூஸ் பண்ணி இயற்கையின் மிகப்பெரிய சவால்களைச் சமாளிக்கும் இதன் தந்திரம் உண்மையிலேயே ஒரு ஆகச்சிறந்த சர்வைவல் ட்ரிக் என்றுதான் சொல்ல வேண்டும்.