"மூளை சூடாயிடுச்சுப்பா..." - பாபநாசத்தில் அம்பலமான 'கம்பைன்ட் ஸ்டடி' ரகசியம்!

combined-study-
combined-study-
Updated on
Kalki Strip
Kalki Strip

-ராம் மோகன்

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் ‘’நண்பர்களுடன் ஊர் சுற்ற பொய் சொல்லி மாட்டிய அனுபவம்’’! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் இரண்டாவது கட்டுரை இதோ…

1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் +2 பரீட்சைக்கு படிக்க லீவு விட்டிருந்தார்கள். நான், எனது நண்பன் பழனியப்பன், அவன் தம்பி பத்தாம் வகுப்பு படிக்கும் ஆறுமுகம் சேர்ந்து பரீட்சைக்கு படிக்க, சனிக்கிழமை மாலை எங்கள் வீட்டில் சொல்லிவிட்டு, நண்பன் வீடிருக்கும் அம்பா சமுத்திரத்திற்கு வந்துவிட்டேன்.

நாங்கள் இரவு முழுவதும் படித்துவிட்டு அதிகாலை ஐந்து மணி அளவில் டீ குடிக்க மெயின் ரோடு வரும்பொழுது, ஆறுமுகம் "அண்ணே, அண்ணே, நாம பாபநாசம் தலையணைக்கும் அகஸ்தியர் அருவிக்கும் குளிக்க போலாமா!?" என்றான். "சரிடா அம்மா, அப்பா முழிக்கும் முன்னர் ஒரு குளியல் போட்டு விட்டு திரும்பி விடலாம்" என்று சொன்னான் பழனி. ஞாயிற்றுக்கிழமை காலை, கையில் புத்தகப் பையோடு கிளம்பி, நேரே பஸ் ஏறி பாபநாசத்தில் இறங்கினோம்.

பாபநாசத்திலிருந்து தலையணை சுமார் 1 கிலோ மீட்டர் இருக்கும். சல சலக்கும் ஆற்றின் நீரை அதிகாலை வெயிலில் பார்த்து ரசித்து கொண்டும் சிரித்து பேசி மகிழ்ந்தும் தலையணை வந்து சேர்ந்தோம். தலையணையின் சில்லென்ற நீரில் எல்லோருக்குமே நீச்சல் தெரியும் என்பதால் ஆழமான பகுதிக்கு போட்டி வைத்து நீச்சலடித்தோம். கரை திரும்பும்பொழுது காலை மட்டும் தண்ணீருக்குள் விட்டு சிறு மீன்கள் காலில் உள்ள அழுக்கை கொத்தி எடுக்கும் மீன்களின் ஸ்பாவை நாங்கள் இயற்கையாக அனுபவித்தோம்.

அரைமணி நேரம் நீந்தியும், டைவ் அடித்தும் மகிழ்ந்தோம். சிறிது நேரத்தில் குளித்துவிட்டு தலையணையிலிருந்து மலைப்பாதை வழியாக அகஸ்தியர் அருவி வந்து சேர்ந்தோம். காலை சிற்றுண்டியை அங்கேயே முடித்துவிட்டு நல்லெண்ணெய் வாங்கி நாங்களே ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்துவிட்டு குளிக்க தயாரானோம். குற்றாலத்தில் உள்ள அருவிகள் கூட கடுமையான கோடையில் வறண்டுவிடும். ஆனால் இந்த அருவி மட்டும் வருடத்தின் 365 நாட்களும் ஆர்ப்பரித்து விழும் என்பது இதன் சிறப்பு.

இதையும் படியுங்கள்:
மதுரை ஜிகர்தண்டாவிற்கே சவால் விட்ட 'ஜெல்லி ஐஸ்கிரீம்' - ஒரு சுவையான நினைவூட்டல்!
combined-study-

குளிர்ந்த அந்த நீரில் குளித்தும் அந்த சுவையான தண்ணீரை குடித்தும் மகிழ்ந்தோம். தலையில், முதுகில் விழும் அருவி நீரில் வாரத்தின் மொத்த களைப்பையும் மறந்தோம். சிறிது நேரத்தில் பசி வயிற்றை கிள்ள சுடச்சுட மிளகாய் பஜ்ஜியையும், எங்க ஊரு ஸ்பெஷல் கார, உளுந்த, பருப்பு வடைகளையும் கடித்துக்கொண்டே, ஏலக்காய் டீயையும் சுவைக்க, "பூலோக சொர்க்க வாழ்க்கைடா இது!" என்று சிலாகித்தோம். மதியம் வரை ஆட்டம் போட்டுவிட்டு, பளபளக்கும் முகத்தோடு ஊர் திரும்ப பஸ் ஏற வந்தோம்.

அங்கேதான் எங்களுக்காக அந்தப் பெரிய 'ட்விஸ்ட்' காத்திருந்தது. பஸ் ஸ்டாண்டில் எங்கள் மொத்த குடும்பமும், புதுசா கல்யாணம் ஆன மாமா அத்தையோடு காரிலிருந்து இறங்கினார்கள். என் தந்தை எங்களைப் பார்த்ததும் "என்னடா... 'கம்பைன்ட் ஸ்டடி' பண்றோம்னு சொல்லிட்டு, இங்க என்ன பண்றீங்க?" என்று அவர் கர்ஜித்தார். கையில் புத்தகப்பை இருந்தும், எங்கள் தலையில் இருந்து சொட்டிய தண்ணீர் எங்களை மாட்டிவிட்டது. அடி விழும் என்ற பயத்தில் நாங்கள் ஏதேதோ உளறினோம்.

இதையும் படியுங்கள்:
பொய் சொல்லத் தெரியாத மழலைகள்! நீதியின் குரலாக மாறும் குழந்தைகளின் சாட்சியம்!
combined-study-

"இல்லப்பா... படித்து படித்து மூளை ரொம்ப சூடாகிவிட்டது. அதை குளிர்விக்கத்தான் வந்தோம்" என்று நான் இழுக்க, "ஆமாம் மாமா, பாடம் எல்லாம் அப்படியே மண்டைக்குள்ள இறங்கிடுச்சு. அதான் பிரெஷ் ஆக வந்தோம்" என்று பழனி தன் பங்கிற்கு முட்டு கொடுத்தான். எங்கள் அப்பாவோ, "அடேய்... நீங்க படிக்கிற லட்சணம் எனக்குத் தெரியும்டா! கிளம்புங்க வீட்டுக்கு" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு எங்களை விரட்டினார்.

logo
Kalki Online
kalkionline.com