

வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதில் மணி பிளான்ட் செடிக்கு தனி இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது நவீன வாஸ்து நிபுணர்களும், சீனக் கலைமுறையான பெங் சுயி நிபுணர்களும் 'கிராசுலா' எனப்படும் 'ஜெட் பிளான்ட் செடி' நேர்மறை அதிர்வுகளை கொடுத்து பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு உழைப்போடு அவன் வசிக்கும் வீட்டின் நேர்மறை ஆற்றலும் அவசியம். காலம் காலமாக நேர்மறை ஆற்றலுக்கு வீட்டில் வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடியைவிட கிராசுலா செடிகளில் பவர் அதிகம் இருப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இட நெருக்கடி மிகுந்த பெருநகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிராசுலா செடி ஒரு வரப்பிரசாதமாக மாறி உள்ளது.
கிராசுலா செடியின் தோற்றம்
கிராசுலா செடியின் இலைகள் தடிமனாக கரும் பச்சை நிறத்தில் உருண்டையாக உள்ளன. இது சிறிய நாணயங்கள் அடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு அளித்து தனித்துவமான ஈர்ப்பை வழங்குகிறது.
பணம், செல்வத்தை தரும் கிராசுலா
தடிமனான இலைகளைக்கொண்ட செடிகள் செழிப்பின் அடையாளமாக எப்போதும் வாஸ்து ரீதியாக கருதப்படுகிறது. தங்களுக்குள் நீரை சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக தடிமனான இலைகளைக் கொண்ட செடிகள் உள்ளன. அதுபோலவே இத்தகைய செடிகள் வளர்க்கும் வீடுகளிலும் செல்வமும் சேமிப்பும் அபரிமிதமாக கிடைக்கும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது .
கிராசுலா செடியின் மகிமை
* கிராசுலா செடி வளர்க்கும் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதனை உள்வாங்கி நேர்மறை ஆற்றலை வெளிவிடுகிறது.
* வாஸ்துப்படி கிராசுலா செடியை வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் நுழையும்போது வலது பக்கம் வைக்கவேண்டும்.
* வீட்டிற்குள் நல்ல ஆற்றலை நுழைய வைக்கும் நுழைவுச் சீட்டாக கிராசுலா செடிகள் இருக்கின்றன.
* சூரிய ஒளி நேரடியாக படாத இடமான ஹால் மற்றும் வரவேற்பரைகள், ஜன்னல் ஓரங்களில் கிராசுலா செடிகள் செழித்து வளரும்.
* வாஸ்துப்படி படுக்கையறை, கழிவறை பக்கத்தில் இந்த செடியை வைக்கக் கூடாது.
வாஸ்து டிப்ஸ்
* தொடர்ச்சியாக தொழிலில் நஷ்டத்தையயும், அலுவலகங்களில் சிரமத்தை சந்தித்து வருபவர்கள் தங்களுடைய அலுவலக மேசையின் மீது கிராசுலா செடியை வளர்க்கலாம்.
* இவ்வாறு வளர்க்கும்போது வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் உருவாகி பொருளாதார முன்னேற்றம் அடையும் என பெங் சுயி நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
கிராசுலா செடி பராமரிப்பு
அதிக கவனிப்பு தேவை இல்லாத கிராசுலா செடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை சிறிதளவு தண்ணீர் தெளித்தாலே போதுமானது. பரபரப்பான இன்றைய தலைமுறையினர் எளிதாக இந்த செடியை வளர்க்கலாம்.
மணி பிளான்ட் வைத்தும் பலன் கிடைக்கவில்லை என கருதுபவர்கள் கிராசுலா செடியை வளர்த்தால் கண்டிப்பாக மாற்றம் தெரிந்து புதிய பாதை கிடைக்கும் என்பது வாஸ்து நிபுணர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.