

கடலில் உள்ள வளங்கள் ஏராளம். அவைகளை எப்படி பெறுகிறோம் என்பவற்றினைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
நீர்வளம் குறையாக் கடலில் விலங்கியல் பிரிவில் உள்ள பெரும்பான்மை வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. தாவர வகைகளும் குறிப்பிடும் அளவில் கடலில் உள்ளன. இவ்வாறு ஒரு செல் தாவரம் முதல் பெரும் திமிங்கலம் வரை உள்ள கடல் வாழ் உயிரினங்களை பட்டியில் போட்டுக்காட்டுவது சற்று சிரமமே. கடலில் இல்லாத குறிப்பிட்ட விலங்கின பிரிவை சேர்ந்த விலங்கினம் எதுவென்று அலசி ஆராய்ந்தால் தவளை இனம் மட்டுமே மிஞ்சும் என்பதை அறியமுடியும். அந்த அளவுக்கு நீர் வாழ் விலங்கின வகைகளின் கொள்ளிடம் ஆக அல்லது கிடங்காக கடல் உள்ளது.
இவற்றுள் நமக்கு உணவாக பயன்படும் உயிரினங்கள் மிகப்பெரும் அளவில் உள்ளன. மேலும் பல வகையான கனிமப் பொருட்களும், பெட்ரோலியப் பொருட்களும் கடல் அடியில் மண்டி கிடக்கின்றன. இன்று நிலப்பரப்பை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வெகு விரைவில் கடலில் உள்ள பல்வேறு வகையான பயனுள்ள பொருட்களையும் நாடி வாழ்வது தவிர வேறு வழி இல்லை என்று கூறலாம்.
இதனை தெளிவாக உணர்ந்த காலம் சென்ற அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அவர்கள் மனிதனின் வாழ்வு கடலில் உள்ள செல்வத்தையே நம்பியுள்ளது என்றும் முன்கூட்டியே தீர்க்க தரிசனத்துடன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிலையில் எத்தனையோ காரியங்களுக்கு நாம் கடலைத்தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. போக்கு வரத்துக்கும், ஏற்றுமதி, இறக்குமதி என பல்வேறு காரியங்களுக்கு கடல் பயன்படுகின்றது. அவற்றுள் மனிதனின் உடல்நலத்தை பேணுவதில் கடலும், கடலில் மண்டி கிடக்கும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
கடலில் உள்ள ரசாயனக் கூறுகளும் மாறுபாட்டுக்கு உட்பட்டவை என்பதற்கு உதாரணம் நீரின் உப்பு திறன் ஆகும். ஆற்று முகத்துவாரப் பகுதிகளில் 0.5 விழுக்காடு அளவு இருக்கும் உப்புத் திறன் கடலின் வெப்பமண்டல பகுதிகளில் 3.7 விழுக்காடாக உள்ளது. கடலின் சராசரியான உப்புத்தன்மை 3.5 விழுக்காடு ஆகும். உலகில் அதிகமான உப்பு தன்மை உள்ள கடல் சாக்கடலாகும். இங்குள்ள உப்பு தன்மையின் அளவு விழுக்காடு (3-4) இதனை 30- 40 ppt என மீன்வள அல்லது கடலியல் அறிவியலில் குறிப்பிடுவதுண்டு.
கடல் நீரில் கரைந்துள்ள வாயுக்கள்:
உயிர் வளி (Oxygen)
கடலில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் மிக மிக முக்கியம். அது இல்லை என்றால் உயிரினங்களில் மூச்சும் இராது பேச்சும் இராது. நிலப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பெருமளவு 60 விழுக்காடு கடலில் இருந்தே உண்டாகி வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கரிவளி (Carbon di-Oxide)
கடல் வாழ் உயிர்களுக்கு ஆக்சிஜன் கனி என்றால் கார்பன் டை ஆக்சைடு உரம் ஆகும். ஆக்சிஜன் இல்லாமல் ஒளிச்சேர்க்கைக்கு வழி இல்லை. ஒளிச்சேர்க்கைக்கு உரமான கரிவளிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என்னும் அளவிற்கு கடல் நீரில் அது கரைந்து உள்ளது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் உயிர் வெளிப்படுவது போல உயிரினங்களின் தொடர்ந்த சுவாசத்தால் கரிவளி வெளிப்பட்டு நீரில் கரைந்து நிறைந்து இருக்கிறது.
உயிர் சத்துக்கள் (Vitamins):
உயிர் சத்துக்கள் உணவுச் சங்கிலி மூலம் மீன்களை வந்தடைகின்றன. அவற்றை நாம் உண்ணும் போது பெருகின்றோம்.
சீர் பணி:
ஆறுகள் கடலில் சேர்க்கும் வண்டல் முதல் அனைத்தையும் சிதைக்கப்பட்ட பின் மேலெழும் நீரோட்டத்தால் நீரின் மேல் மட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, இவை நுண்ணுயிர் தாவரங்களால் பயன்படுத்தப்பட்டு, தாவர உற்பத்தி உயர்கிறது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது உயர்ந்ததொரு துணைப் பொருளாக உயிர் வளி வெளியேறி நீரில் நிறைகின்றது. கடற்புற்களும், கடற்பாசிகளும் இத்தகைய சீர்பணியை செய்கின்றன.