பால் வழிப் பாதையில் பல மைல்கள் பறந்து செல்லும் அந்துப் பூச்சி!

Bogong moth
Bogong moth
Published on

ல வகையான பறவைகள் பருவ நிலை காரணமாக தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதை மைக்ரேஷன் (migration) என்று கூறுகிறோம். போகோங் மோத் (Bogong moth) எனப்படும் ஒரு சிறிய அந்துப்பூச்சி ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து குடி பெயர்ந்து செல்வதை அறிந்து விஞ்ஞானிகள் வியப்பின் எல்லைக்கே சென்றுள்ளனர். அந்தச் சிறிய பூச்சிக்கு இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

போகோங் மோத் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் கடுமையிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து இளவேனிற் காலத்தில் புறப்பட்டு, ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து, ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள குளுமையான குகைகளில் ஓய்வெடுக்கச் செல்கிறது. பிறகு, இலையுதிர் காலத்தில் (autumn) தனது சொந்த இருப்பிடம் திரும்பி இல்லறம் நடத்தி இனப்பெருக்கம் செய்துவிட்டு இறந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிறத்தில் வழுக்கைத் தலையுடன் காட்சி தரும் 'வழுக்கை உகாரி'!
Bogong moth

இந்தப் பூச்சிகள் ஆல்ப்ஸ் பகுதிக்குச் செல்வதற்கு, பறவைகள் மற்றும் மனிதர்களைப் போல, வானிலுள்ள நட்சத்திரங்களைத் தமக்கு வழிகாட்டியாக உபயோகிக்கின்றன. பூச்சிகளுக்கு இந்த மாதிரியான திறமை உள்ளதை இப்பொழுதுதான் முதன் முறையாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த போகோங் மோத், சுமார் 5 செ.மீ. அளவிலான இறக்கைகளைக் கொண்டுள்ளது. வானில் மேக மூட்டம் இருக்கும்போது, பூமியின் காந்தப் புலத்தை உணர்ந்து, அதன் உதவியால் பிரச்னைகளை சமாளித்துத் தனது பயணத்தைத் தொடரக் கூடிய திறமையும் இதற்கு உண்டு.

சுமார் நானூறு அந்துப் பூச்சிகளை ஆராய்ந்த பின்னரே, அவை எப்படி இரவில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து தங்கள் பயணத்தைத் தொடர முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு சிறிய மூளையுடைய இப்பூச்சிகளின் கண்களுக்கு, மங்கலான நட்சத்திரங்கள் கூட, மனிதர்களுக்குத் தெரிவதை விட பதினைந்து மடங்கு பிரகாசமாகத் தோன்றி, 'பால் வழி' (Milky Way) பகல் வழி போல் இவற்றுக்கு வழி காட்டுவது தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி திருடன் கடல் நத்தையின் காமெடி வாழ்க்கை!
Bogong moth

மோனார்ச் பட்டர்ஃபிளை மற்றும் டங் பீட்டல்ஸ் (dung beetles) போன்ற விலங்குகளும் வெளிச்சத்தை தங்கள் பயணத்திற்கு உபயோகிக்கின்றன என்றாலும், அவை இவ்வளவு நீண்ட தூரம் செல்வதில்லை. முதுகெலும்பில்லாத ஒரு சிறிய பூச்சி, நட்சத்திரங்களை திசை காட்டும் கருவியாகப் (Campass) பாவித்து ஒரு குறிப்பிட்ட புவியியல் திசையில் வெற்றிகரமாகப் பயணித்து இலக்கை அடைவது அற்புதமான சாகசம் என்றே கூறலாம்.

போகோங் மோத் இப்பயணத்தை அதன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே மேற்கொள்கிறது. இது பிறக்கும் முன்பே அதன் பெற்றோர் இறந்து விடுகின்றனர். அதனால் இதற்கு இந்த பால் வழியை சொல்லித்தர எவருமின்றி. தனது உள்ளுணர்வின் உந்துதலினால் தானே கண்டுபிடித்து சென்று வருவது அதிசயத்திலும் அதிசயம் எனலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com