மழை வருது மழை வருது குடை கொண்டு வா…

700 ஆண்டுகளுக்கு முந்தைய மழையின் அறிகுறி, மழைக்காலத்தின் முன்னேற்பாடுகள், மழையின் தன்மை பற்றி முக்கூடல் பள்ளு என்ற சிற்றிலக்கிய நூல் நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கின்றது.
Village
Village
Published on

மழை எல்லாக் காலத்திலும் பரவசம். நாம் வானியல் அறிவிப்புகளின்படி மழைக்கான முன்னேற்பாடுகளைச் செய்கின்றோம். மழையை ரசிக்கிறோம். 700 ஆண்டுகளுக்கு முந்தைய மழையின் அறிகுறி, மழைக்காலத்தின் முன்னேற்பாடுகள், மழையின் தன்மை பற்றி முக்கூடல் பள்ளு என்ற சிற்றிலக்கிய நூல் நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

மழைக்கான அறிகுறிகள்

நாளைக்குப் பெருமழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் வரும் அதற்கு அறிகுறியாக இன்று கிழக்குத் திசையில் மின்னல் வெட்டுகின்றது. கிழக்குத் திசை மின்னல் இலங்கையும் கேரளாவும் இருக்கும் மேற்குத் திசையில் தோன்றுவதால் மலையாள மின்னல் என்றும் ஈழமின்னல் என்றும் ஒரு புலவர் குறிப்பிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
குறையாத செல்வம் பெருக்கும் சம்பந்தர் உரைத்த தேவாரப் பதிகம்!
Village

நேற்றும் இன்றும் அடிக்கும் காற்றினால் மரக்கொம்புகள் சுற்றுகின்றன. நீர்க்கேணியில் இருக்கும் தவளை தன் இணையை அழைக்கின்ற சத்தம் கேட்கிறது. மறுநாள் மழை பெய்யப் போவதால் தன் வளைக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருக்க நண்டு தம் வளையின் வாய்ப்பகுதியை அடைக்கின்றது. எண்ணற்ற வானம்பாடிகள் வானத்தில் பறக்கின்றன. இவை கூட்டமாக பறந்தால் மழை வரும்.

மழை வந்தால் என்ன செய்வது?

மழைக்கான முன்னேற்பாடுகளையும் முக்கூடல் பள்ளு ஒரு பாடலில் தெரிவிக்கின்றது.

பொருநை (தாமிரபரணி) நதியில் மறுநாள் மழை நீர் பெருகி ஓடும். அப்போது ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு ஏமஞ்சாமத்திற்கு போக வேண்டி இருக்கும். அதற்காகத் தோணியைத் துறையிலேயே சிக்கென கட்டி வைக்க வேண்டும். வீட்டு வாயிலை மறைக்க படல் தயாராக இருக்க வேண்டும். வெளியே மழையில் நடந்து செல்வதற்கு தாழங்குடையைத் தயாராக வைக்க வேண்டும். மேலே போர்த்திச் செல்ல கொங்காணி எனப்படும் சாக்கு இருக்க வேண்டும். காவல் பணிக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் வருகையைக் கொம்பூதித் தெரிவிக்க கொம்புகளை எடுத்து வைக்க வேண்டும். தீப்பந்தம் தயாரிக்க சீலைத் துணிகளும் அதில் ஊற்றுவதற்கு விளக்கெண்ணையும் எடுத்து வைக்க வேண்டும்.

மழையின் வருகை

கருவுற்ற பெண் கரு முதிர்ந்ததும் குழந்தை பெறுவது போல சூலுற்ற கார் மேகங்கள் மழை பொழிவது உறுதி. இவை கடலில் மேய்ந்து கருக்கொண்டு உலகத்தின் வேலி போல வானத்தில் சுற்றி இருந்து பின் ஏதேனும் ஒரு இடத்தில் காலூன்றி மழை பெய்யத் தொடங்கி விடும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; வால் பாண்டி சரித்திரம்!
Village

மழை பெய்த இடங்கள் சந்தனமும் கஸ்தூரியும் மணக்க மணக்கப் பூசியிருக்கும் பெண்ணின் மார்புகளைப் போல் காட்சி அளிக்கும் குன்றுகளின் மீது அமுத தாரைகளைப் போல் மழை பெய்துள்ளது. வெயிலின் வெப்பத்தைத் தணிக்க இந்திரனின் கட்டளையால் மலைச்சாரலில் பெய்துள்ளது. அவனுடைய வரவை அறிவிக்கும் வகையில் இடிகள் போர் முரசுகள் போல முழங்கின. மலைத் திரவியங்களை அள்ளிக் கொண்டு வந்த மழை நீர் அவற்றை வள்ளல் போல வழி எங்கும் வாரி இறைத்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

வெள்ளத்தில் நீராடப் புகுந்த மத யானைகள் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. காட்டுப்பன்றிகள் ஆற்றின் வேகத்தில் சிக்கித் தவித்தன. காட்டு மல்லிகைச் செடிகளும் நீரில் துவண்டன. காட்டு மரங்களின் வேர்களை மழை நீர் அரித்துச் சென்றது. மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழை முடிந்தது.

கற்பகச் சோலையின் இறைவனான இந்திரன் ஏவலினால் கார்மேகங்கள் மழையைப் பொழிந்து முடிந்ததும் வானத்தில் அழகிய வானவில் தோன்றியது. வானவில் தோன்றினால் மழை முடிந்தது என்று புரிந்து கொள்ளலாம். இனி மழை இருக்காது.

இவ்வாறு முக்கூடல் பள்ளு விளக்கும் மழையின் வரலாற்றால் நமக்கு முன்னோர்களின் அறிவியலும் வாழ்க்கைக் திறமும் இலக்கிய உணர்வும் இனிதே விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com