
திருஞானசம்பந்தர் பல சிவ தலங்களுக்குச் சென்று, அங்கேயே தங்கி எல்லாம்வல்ல இறைவனை நினைந்து உருகி, பல பதிகங்களைப் பாடி வருகிறார். இப்படி அவர் திருவாவடுதுறையை வந்தடைந்து, அங்கு அருள்புரியும் மாசிலாமணியீசுவரரை வழிபட்டு வருகிறார். அப்போது ஒரு நாள் சம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர், தனது மகனிடம், ‘தான் ஒரு யாகம் செய்ய விரும்புவதாகவும், அதற்கான செலவுகளுக்குக் கொஞ்சம் பொருள் தேவை’ என்றும் மகனிடம் கோரிக்கை வைக்கிறார்.
பல ஊர்களுக்குச் சென்று பொருள் சேகரித்திருந்தால், சம்பந்தர் கவலையேபடாமல் சட்டென்று தனது தந்தைக்கு வேண்டிய பொருளை எடுத்துக் கொடுத்திருப்பார். ஆனால் அவர் அப்படி இல்லையே. ஊர் ஊராகச் சென்று சிவ தலங்களைப் பாடி வழிபட்டு, சிந்தை முழுவதும் சிவனே என்று காலத்தைக் கழிப்பவரிடம் பொருள் சேருமா? பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றுமா? யாகத்திற்குத் தேவையான பொருளைக் கொடுக்கும் அளவிற்கு சம்பந்தரிடம் ஒன்றுமே இல்லையே. இதனால் மிகவும் வருந்தினார் சம்பந்தர். தந்தையின் யாகத்திற்குக் கொடுக்கும் அளவுக்குத் தன்னிடம் பொருள் இல்லையே என்ற கவலையோடு திருவாவடுதுறையில் உறையும் ஈசனை நாடினார்.
‘அந்தமில்லாப் பொருள் எனப்படுவது ஆவடுதுறையுள் எந்தையார் இணையடித்தலங்கள் அன்றோ?’ முடிவில்லாத வேதப் பொருளாய் எப்போதும் நிறைவுடன் இருப்பது, ஆவடுதுறையுள் அருள்புரியும் மாசிலாமணியீசரின் பாதக் கமலங்கள்தானே என்ற தெளிவுடன் எம்பெருமான் முன் நின்றார். மாசிலாமணியீசரை மனமுருக வேண்டி, நந்தியின் அருகில் நின்று,
‘இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே’
எனும் பதிகத்தைப் பாடினார்.
‘என்னை அடைந்து கேட்பவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் செல்வம் ஒன்றும் இல்லை. உன் திருவடியாகிய செல்வம் தவிர வேறொன்றும் நான் அறியேன். உலக நன்மைக்காக என் தந்தை இயற்றப்போகும் யாகத்தை நடத்திட எனக்குப் பொருள் தந்து அருளிட மாட்டாயோ?’ என்று இறைஞ்சி, இறைவனின் திருவருளை வேண்டி நிற்கிறார்.
சம்பந்தரின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுளம் கொண்டார் மாசிலாமணியீசர். சிவகணம் ஒன்று அங்கே தோன்றி பலிபீடத்தின் மேல் பொன் நிறைந்த பணமுடிப்பு ஒன்றை வைத்து, ‘இந்த உலவாக்கிழி (உலவாக்கிழி - குறையாத பண முடிப்பு) உமக்கு இறைவன் நல்கியது’ என்று உரைத்தது.
திருஞானசம்பந்தர் மனம் மகிழ்ந்து சிவ கணத்தின் முன்பு நெடுஞ்சாண்கிடையாகப் பணிந்து விழுந்தார். அந்தப் பண முடிப்பை, தனது தலை மீது வைத்து எடுத்துக்கொண்டு, தன் தந்தையிடம் சென்று, ‘வேத முதல்வனாகிய சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் வேள்விக்கும், சீர்காழியில் உள்ள நல்லோர் செய்யும் திருத்தொண்டுகளுக்கும் இந்தப் பொன்முடிப்பு உதவும். எவ்வளவு எடுத்தாலும் குறையாமல் பெருகும்’ என்று கூறினார். தனது மகனின் சிவ பக்தியை நினைத்து உருகி, சிவபாத இருதயரும் பொற்கிழியைப் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் அங்கிருந்து விடைபெற்றார்.
ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளின் பேரருளால் சிவகணம் பொற்கிழியை வைத்த பலிபீடம், திருவாவடுதுறை கோயிலில் நந்தியம்பெருமான் வீற்றிருக்கும் இடத்திற்குப் பின்னால் இப்போதும் உள்ளது. இன்றும் இக்கோயிலுக்கு வந்து செல்வோர் இந்த பலிபீடத்தில் தங்கள் பணப்பையை வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். சிவகணம் தந்த அந்தப் பணமுடிப்பு அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைத் தந்தது போல், தங்கள் வாழ்விலும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இப்போதும் மக்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.
திருஞானசம்பந்தரால் திருவாவடுதுறை தலத்தில் பாடப்பட்ட இந்த தேவாரப் பதிகம், பன்னிரு திருமுறைகளில் மூன்றாம் திருமுறையில் உள்ளது. இந்தத் தேவாரப் பதிகத்தை ஓதுபவர்களுக்கு செல்வம் சேர்ந்து வளம் பெருகும் என்றும், இடர்கள் களைந்து நன்மை பெருகும் என்றும் நம்பப்படுகிறது.