
இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் கடல்சார் பகுதியை பவள முக்கோணம் (Coral Triangle) என்று குறிக்கின்றனர். வெப்ப மண்டல கடல் நீரைக் கொண்ட இந்த நிலப்பகுதி, ஒரு முக்கோண வடிவத்தைக் கொண்டது. எனவே, இப்பகுதியை பவள முக்கோணம் என்று சொல்கின்றனர். இதுவரையில் 600-க்கும் அதிகமான பாறைப் பவள உயிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை தவிர, 2000-க்கும் அதிகமான பவளப் பாறை மீன் இனங்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அண்மையக் காலங்களில், இந்தப் பவள முக்கோணம் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின ஆய்வாளர்களையும், வெளிநாட்டு அறிவியலாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
கடல்களின் அமேசான் என்று போற்றப்படும் இந்தப் பவள முக்கோணம், கடல் வாழ் பல்லுயிர்களின் அனைத்துலக மையம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கோணம், 5.7 மில்லியன் ச.கி.மீ. கடல் நீர் பரப்பளவைக் கொண்டது. பவள முக்கோணத்தில், பெரிய வகை திமிங்கலச் சுரா மீன்களைத் தவிர, 3,000 க்கும் மேற்பட்ட மற்ற மீன் இனங்களும் இருக்கின்றன.
7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அரிய வகை மீன் இனமான சீலகாந்த் (Coelacanth) மீன்கள் இந்த முக்கோணத்தில் இருப்பதாக, 1952 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் ஏழு வகையான கடலாமைகள் உள்ளன. அவற்றில் ஆறு வகை ஆமைகள், இந்தப் பவள முக்கோணத்தில்தான் இருக்கின்றன.
பவள முக்கோணத்தில், ஏறக்குறைய 120 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 2.25 மில்லியன் மக்கள் மீனவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு கடல்தான் வாழ்வதாரம். பவள முக்கோணப் பகுதியில் தூனா வகை மீன்கள், வரையறுக்கப்பட்ட நிலையையும் தாண்டி, மேலும் கூடுதலாகப் பிடிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. தூனா மீன்கள் விரைவில் அழியக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். இப்பகுதியில், மீன்பிடித்தல் மூலமாக ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி வருமானமாகக் கிடைக்கிறது.
கடந்தப் பத்தாண்டுகளில், அரிய வகை மீன் பிடித்தல் மட்டுமின்றி, பல வகையான கடல்சார் பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடற்கரை மேம்பாடுகள், அளவுக்கு அதிகமான மீன் பிடித்தல், பவள முக்கோண நாடுகளின் அடிப்படையான ஏழ்மை நிலை, கடல்சார் பல்லுயிர்களைப் பாதுகாப்பதில், அரசியல் அதிகாரத்தின் மிதமான போக்கு, தட்பவெப்ப நிலை மாற்றம் போன்றவைகளே அதற்குக் காரணமாக அமைகின்றன.
அரிய வகை மீன்களுக்கு உலகச் சந்தையில் கிடைக்கும் அதிக விலையின் காரணமாக, ஏழ்மைச் சூழ்நிலையில் வாழும் மீனர்வர்களுக்குக் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமானதாகத் தோன்றவில்லை.
எனவே, பவள முக்கோணம் பகுதியில் வாழும் பல்லுயிர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இயற்கைக்கான உலகளாவிய நிதியம், பவள முக்கோணத் திட்டம் எனும் ஒரு திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. பவள முக்கோண வட்டாரத்தில் பல வகையான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அங்கு அமைந்துள்ள அரசுகள், இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள், இயற்கைக்கான உலகளாவிய நிதியம், அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம், ஆசிய மேம்பாட்டு வங்கி போன்ற அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன.