
தூக்கணாங்குருவி (baya weaver bird, உயிரியல் பெயர்: Ploceus philippinus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை ஆகும்.
மனிதனுக்கு நன்மை செய்யும் உயிரினங்களின் வரிசையில் தூக்கணாங்குருவி என்னும் அழகான பறவை முக்கிய இடம் வகிக்கிறது. இவை பொதுவாக மஞ்சள் சிட்டு, மஞ்சள் குருவி, கின்னகம், சிதகம், தூதுணம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலதில் பயா வீவர் (Baya Weaver), அல்லது வீவர் பறவை (Weaver Bird) எனக் கூறப்படுகிறது.
பயிர்களை பூச்சிகள் தாக்கி அழிப்பது வழக்கம். ஆனால், இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கையானது தூக்கணாங்குருவிகளை படைத்துள்ளது. இது ஊர்க்குருவி வம்சத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும்.
தூக்கணாங்ககுருவி இரு வகைகளாக காணப்படும். ஒரு வகைக் குருவிகளின் மேல் பகுதி அடர் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
மற்றொரு வகைக் குருவிகள் பழுப்புடன் கூடிய வெண்மைக் கோடுகளை கொண்டிருக்கும். முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும்.
தூக்கணாங்குருவி பொதுவாக 15 சென்டி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. ஆண் மற்றும் பெண் இரு பாலினமும் கூடு கட்டக்கூடியது. வால் பகுதி சிறியதாகவும் மேல் பகுதி தடித்தும் காணப்படும். சராசரியாக 20 கிராம் எடை கொண்டது.
பயிர்களை தாக்கும் அசுவினி தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, சிறிய சிலந்திகள், வெட்டுக்கிளி, நத்தைகள், கம்பளி பூச்சி போன்றவற்றை உணவாகக்கொண்டு பயிர்களை காப்பாற்ற தூக்கணாங்குருவிகள் உதவுகின்றன. மேலும் அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானியங்களையும் உட்கொள்ளும்.
தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் 'தொங்கு கூடுகள்' வியப்பை அளிப்பன.
கூடுகள் எடை இல்லாத சுரைக்காய் வடிவில் இருக்கும். இந்த கூடுகள் மரங்களின் கிளை நுனியில் தொங்கும். இவை ஒரு கூடு கட்ட ஆயிரக்கணக்கான நார் இழைகளை பயன்படுத்துகின்றன.
அதாவது நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை நெய்கின்றன. ஒரு காய்ந்த புல்லில் முதல் முடிச்சை உருவாக்கி கடைசியில், இந்த பறவை மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு அழகிய வாசலை உருவாக்கிவிட்டு கூட்டை நிறைவு செய்கிறது. அதில் ஆண்பறவை தான் கூடு கட்டும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும்.
இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண்ணை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை அழகு படுத்தும். இந்த கூடுகள் உலகின் புகழ்பெற்ற நெசவாளர்கள் கூட நெய்ய முடியாத எதிரெதிர் கோணங்கள் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
கோடையில் கிணறு அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம், கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம், வயல்வெளி மற்றும் நீர்நிலைகள் ஓரம் கூடு கட்டி வாழ்ந்து, பயிர்களை காக்க உதவும் தூக்கணாங்குருவிகள், பாதுகாக்க வேண்டிய பறவை இனம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.