
தற்போதைய சுற்றுப்புற சூழ்நிலையில் கொசுக்கள் அனைவரது வீடுகளிலும் பொதுவான பிரச்னையாகி விட்டது. எவ்வளவு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் கொசுக்கள் வருவதைத் தடுக்க முடியவில்லை. கொசுக்களால் வியாதிகள் வருவதோடு, நிம்மதியும் கெடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கொசுக்கள் வராமல் தடுக்கும் சில செடிகள் குறித்தும் அதை வளர்ப்பது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
சாமந்தி: சாமந்திப்பூ செடி கொசுக்களை விரட்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. நேரடியாக தொட்டிகளிலோ அல்லது மண் தரையிலோ சாமந்தி விதைகளை விதைக்கலாம். விதைத்த பிறகு விதைகளை லேசான மண்ணால் மூடி, தண்ணீரைத் தெளிக்கவும். 20 சதவிகிதம் மாட்டு சாண உரம் தேவைப்படும். உரம் கலந்து ஐந்து அல்லது ஆறு மணி நேர சூரிய ஒளி தேவைப்படும். சாமந்தி விதைகளை சாதாரண தோட்டம் மண்ணில் நட்டு வைக்கலாம். பூச்சிகளை விலக்கி வைக்கும் சாமந்தி பூக்கள் அலங்காரம் மற்றும் வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பூண்டு செடி: கொசுக்களை விரட்டுவதற்கு மிகவும் பயன்படும் பூண்டு செடிகளை வளர்க்க மண்ணை தளர்வாக வைத்து அதன் துண்டுகளை எடுத்து மண்ணில் நடவும். முழு சூரிய ஒளியில் வளரும் இந்தச் கொடி அழகான ஊதா நிறப் பூக்களைக் கொண்டு வளரும் ஒரு அலங்காரத் தாவரமாக இருப்பதோடு, வேகமாகவும் பரவுகிறது.
எலுமிச்சை புல் செடி: ஆரோக்கியத்திற்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படும் எலுமிச்சைப்புல் செடிக்கு மணல் மற்றும் லேசான மண் சிறந்தது. புதிய வேரூன்றிய தண்டுகளைக் கொண்டு வந்து நேரடியாக ஒரு தொட்டியிலோ அல்லது மண் தரையிலோ நடலாம். இதன் இலைகளிலிருந்து தேநீர், கஷாயம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
புதினா செடி: கொசுக்களுக்கு எதிரியாக இருக்கும் புதினா செடியை அதன் தண்டு மற்றும் வேர்களுடன் சேர்த்து ஒரு தொட்டியில் நட்டு வளர்க்கலாம். லேசான மற்றும் பகுதி சூரிய ஒளியில் நன்றாக வளரக்கூடிய புதினா செடி ஈரமான மற்றும் வளமான மண்ணில் நன்கு வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெரனியம்: ஜெரனியம் என்பது கொசுக்களை பெருமளவில் விலக்கி வைக்கும் ஒரு தாவரமாக இருக்கிறது. ஜெரனியம் செடியை நடுவதற்கு அதிக முயற்சி தேவையில்லை. வீட்டிலேயே நட்டு வளர்ப்பது எளிதாகும். ஜெரனியம் பூக்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
ரோஸ்மேரி செடி: தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் கொசுக்களில் இருந்து ரோஸ்மேரி செடி விலக்கி வைக்கிறது. விதைகள் அல்லது துண்டுகள் மூலம் நடப்படும் ரோஸ்மேரி செடி வளர்க்கப்படும் வீட்டில் கொசுக்கள் இருக்காது. மசாலா மற்றும் மூலிகை தேநீருக்கு ரோஸ்மேரி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
துளசி: பல நன்மைகளைக் கொண்ட துளசி செடி நல்ல கொசு விரட்டியாக உள்ளது. இதன் விதைகள் அல்லது துண்டுகளை லேசான மண்ணில் அழுத்தி வைத்தாலே வளருகின்ற துளசி செடிகளுக்கு வளமான மண்ணும் நான்கு முதல் ஆறு மணி நேர சூரிய ஒளியும் அவசியமாகும்.
மேற்கூறிய செடிகளை வீட்டின் உள்ளேயோ அல்லது வெளிப் புறமாகவோ வளர்த்து கொசுக்களில் இருந்து தப்பித்து. ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.