மென்மையான ரோமங்கள், சுறுசுறுப்பான மூக்கு, வெள்ளை பஞ்சு போன்ற வால் என நம் மனதை கொள்ளை கொள்ளும் செல்லப் பிராணி முயல். ஆனால், இந்த துள்ளும் அழகான விலங்கை வளர்ப்பதற்கு நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை தோற்றத்தில் பார்ப்பதற்கு எளிமையான விலங்காகத் தெரிந்தாலும், ஒரு முயல் குட்டியை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு முன், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. முயல் குட்டிக்கு ஓடுவதற்கும், விளையாடுவதற்கும், உடலை நீட்டுவதற்கும் போதுமான இடம் தேவை. ஒரு சரியான முயல் கூண்டை முழுமையாக நீட்டும்போது, அதன் அளவை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும். கம்பிகளால் ஆன கூண்டுகள் முயல்களின் மென்மையான பாதங்களுக்கு வலி ஏற்படுத்தும் என்பதால், திடமான தரை உள்ள கூண்டுகளை பயன்படுத்துங்கள். முயல்கள் இயற்கையாகவே சுத்தமானவை என்பதால், தினமும் கூண்டை சுத்தம் செய்வது அவசியம்.
2. வைக்கோல் (Hay) அதன் உணவில் 80% இருக்க வேண்டும். முயல்களுக்கு சாப்பிடுவது ஒரு முழுநேர வேலை. டிமோதி வைக்கோல் (Timothy hay) அதன் கூண்டில் இருக்க வேண்டும். இது வெறும் உணவு மட்டுமல்ல, அவற்றின் பற்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். காரட் முயல்களுக்கு நல்லது. இருப்பினும் அதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், தினமும் கொடுக்க கூடாது.
3. முயல்கள் குறுகிய காலம் வாழும் செல்லப் பிராணிகள் அல்ல. அவை 8-12 ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு முயலை நீங்கள் தத்தெடுக்கும்போது, நீங்கள் குறைந்தது ஒரு பத்தாண்டுகளுக்கு அதன் பராமரிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தினசரி கவனிப்புக்கான பொறுப்பை ஏற்க நேரிடலாம். சில முயல்கள் சரியான கவனிப்புடன் 12 ஆண்டுகள் வரை கூட வாழும். எனவே, எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை, நிதி நிலைமை போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு, ஒரு முயலை வளர்க்கும் முடிவை எடுக்க வேண்டும்.
4. எல்லா கால்நடை மருத்துவர்களும் முயல்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. இந்த வகை விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தேவை. அதோடு, முயல்களுக்கான மருத்துவ பரிசோதனைக்கு, பூனை அல்லது நாய்களுக்கு ஆகும் செலவை விட அதிகமாக செலவாகும்.
5. முயல்களுக்கு மின்சார வயர்கள் மிகவும் பிடிக்கும். அவைகளை மெல்லுவதற்கு முயற்சிக்கும். அதனால், வயர்களை கவர் செய்ய வேண்டும் அல்லது அவற்றின் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். வீட்டு மூலைகள், தளங்கள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவற்றை முயல்களின் சக்திவாய்ந்த பற்களால் சேதப்படுத்தலாம்.
6. பெரும்பாலான முயல்கள் தூக்குவதை விரும்பாது. அவை தரையில் வாழும் இரையைத் தேடும் விலங்குகள். அதனால், அவற்றை தூக்கும்போது அவை தங்களது கட்டுப்பாட்டை இழந்து, பயந்துபோய் கைகளிலிருந்து குதித்து, உங்களுக்கு கீறல் விழ நேரிடலாம். இது அதன் இயல்பு. தரையில் அமர்ந்து அதனுடன் விளையாடுவது சிறந்தது.
7. முயல்களுக்கு சமூக தொடர்பு அவசியம். ஒரு மனிதனிடமிருந்தோ அல்லது மற்றொரு முயலிடமிருந்தோ அதற்கு அன்பு தேவை. சரியான சமூக தொடர்பு இல்லாத முயல்கள் மனச்சோர்வு அல்லது சில நடத்தை சிக்கல்களை உருவாக்கலாம். முயலுடன் தினமும் ஒரு சில மணிநேரம் செலவழிக்க திட்டமிடுவது அவசியமானது.