
தாவரக் கொட்டைகளின் ஓட்டை உடைக்க, பூக்களின் உள்ளிருக்கும் தேனை உறிஞ்ச, மரங்களில் துளையிட என்பது போன்ற தனித்துவமான காரணங்களுக்காக சில வகை பறவையினங்கள், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் அமைந்துள்ள அலகுகளைக் கொண்டுள்ளன. அப்படியான ஐந்து வகை பறவையினங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கிராஸ்பில் (Crossbill): கிராஸ்பில்லின் அலகு அடிப்பாகத்தின் மீது மேல்பாகம் குறுக்காக அமர்ந்து, கத்திரிக்கோல் போன்ற தோற்றமளிக்கும். இந்த அமைப்பு, கூம்பு வடிவிலிருக்கும் பைன் மரக் கோன்களின் உள்ளே உள்ள விதைகளை நோண்டி எடுத்து உண்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ஆண் மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையை பெண் பறவைகள் நாடோடிகள் போல் கூட்டமாக பைன், ஃபிர் மற்றும் ஸ்புரூஸ் போன்ற, பூக்களுக்குப் பதிலாக கோன்களில் விதைகளை உற்பத்தி செய்யும், மரங்கள் நிறைந்த ஊசி இலைக் காடுகளைத் தேடிப் பறந்து கொண்டிருக்கும்.
2. பெலிகான் (Pelican): பெலிகான் பறவைகளின் தொண்டை நீட்சித் தன்மையுடைய ஒரு பை போன்ற அமைப்பு கொண்டதாயிருக்கும். அது ஒரு வலை போல் செயல்பட்டு, பெலிகான் உணவுக்காக மீனை பிடிக்கும்போது மீனை மட்டும் விழுங்கச் செய்து, தண்ணீரை வெளியேற்றிவிடும். இம்மாதிரியொரு புத்திசாலித்தனமான திறமையுடைய பெலிகான், சிறந்த வேட்டைக்காரன் என்ற பெயருக்குரியதாக உள்ளது.
3. கிவி (Kiwi): கிவி நியூஸிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட, பறக்க முடியாத, இரவில் நடமாடக்கூடிய பறவை. உணர்வுத் திறன் கொண்ட இதன் நீண்ட அலகின் நுனிப் பகுதியில் உள்ள துவாரங்கள் வழியே, தரையில் உள்ள புழுப் பூச்சிகளை கண்டறிந்து பிடித்து உணவாக்கிக் கொள்ளும். மற்ற பறவைகளைப் போலல்லாமல் அலகின் நுனிப்பகுதியில் உள்ள நாசித் துவாரங்கள் வழியே முகர்ந்து, இரையைக் கண்டு பிடித்து உயிர் வாழும் தனித்துவமான பறவை கிவி.
4. வாள் போன்ற அலகுடைய ஹம்மிங் பேர்ட் (Sword billed Humming bird): வாள் போன்ற இதன் அலகு இதன் உடம்பை விட நீளமானது. இதன் உதவியால், நீண்ட குழல் போன்ற அமைப்புள்ள பூக்களின் உள்ளிருக்கும் தேனை உறிஞ்சி உட்கொண்டு உயிர் வாழும் பறவை இது. இதன் மிக நீளமான அலகு ஆபத்தான நேரங்களில் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளவும் அதற்கு உதவி புரிகிறது.
5. டௌக்கன் (Toucan): பெரிய அளவிலான இதன் கலர்ஃபுல் அலகு நாம் நினைப்பது போல் எடை மிகுந்ததல்ல. இலகுவான இந்த அலகு, மரக் கிளைகளிலிருந்து பழங்களைப் பறிக்கவும், டௌக்கனின் உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், சமயங்களில் எதிரிகளை மிரட்டி அவற்றிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் உதவிகரமாக உள்ளது.