
நீர் என்பது வாழ்வின் ஆதாரம் என்றாலும், உலகில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் குடிக்கத்தக்கவை அல்ல. சில ஏரிகள் இயற்கையின் அதிசயமாக மிக அதிக உப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. இந்த ஏரிகள் தங்களின் தனித்துவமான இயற்கை அமைப்பு, சூழலியல் முக்கியத்துவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கான ஆதாரமாக விளங்குகின்றன. அந்த வகையில் உலகின் அதிக உப்புத்தன்மையோடு விளங்கும் சில ஏரிகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. டான் ஜுவான் பாண்ட் (Don Juan Pond): அண்டார்டிகா கண்டத்தின் மெக்மர்டோ வாலி (McMurdo Dry Valley) என்ற இடத்தில் 40 முதல் 44 சதவிகிதம் உப்பு செறிவு உள்ளது. இது உலகின் மிக அதிக உப்புத்தன்மை கொண்ட நீர்நிலை ஆகும். இதன் வெப்பநிலை 50°C இருந்தாலும் நீர் உறையாது. சுமார் 100 மீட்டர் நீளம் மட்டுமே இது உள்ளது. இதில் அதிக அளவு கால்சியம் குளோரைடு இருப்பதால், நீர் மிகவும் ‘briny’யாக (அதிக உப்புத்தன்மை) உள்ளது. விஞ்ஞானிகள் இந்த ஏரியை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாய் (Mars) போன்ற கிரகங்களில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என்ன என்பதை ஆராய்கிறார்கள்.
2. கய்டா ஏரி (Gaet’ale Pond): தாழ்வு நிலப்பகுதியாகிய, எத்தியோப்பியாவில் உப்பின் செறிவு சுமார் 43 சதவிகிதம் ஆகும். இது இயற்கை எரிமலை வெப்பத்தால் உருவான ஏரி. இதன் நீரில் சல்பர், உப்பு, கனிம உப்புகள் அதிகமாக உள்ளன. ஏரியின் சுற்றுப்புறம் மிகவும் வெப்பமானதால் இது உலகின் சூடான இடங்களில் ஒன்றாகும். இங்கு நீரில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதால், உயிரினங்கள் வாழ முடியாது. பச்சை, மஞ்சள் நிறம் கொண்ட நீர் மற்றும் சல்பர் வாசனையால் பிரபலமானது.
3. லேக் அசால் (Lake Assal): கிழக்கு ஆப்பிரிக்கா, ஜிபூட்டி நாட்டில் உப்பின் செறிவு 34 முதல் 35 சதவிகிதம் வரை உள்ளது. இது ஆப்பிரிக்காவின் அதிக உப்புத்தன்மை கொண்ட ஏரி. கடல் மட்டத்திலிருந்து 155 மீட்டர் உயரத்தில் இது இருப்பதால், சுற்றியுள்ள பாலைவனத்தால் நீர் அதிகமாக ஆவியாகி, உப்பு படிவங்கள் உருவாகின்றன. வணிக ரீதியாக உப்பு எடுக்கும் முக்கிய மையமாக இது விளங்குவதோடு, சுற்றுலா தளமாகவும் பிரபலமானது.
4. டெட் ஸீ (Dead Sea): இந்த ஏரி இஸ்ரேல், ஜோர்டான், பாலஸ்தீனம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உப்பு அடர்த்தி 33 முதல் 34 சதவிகிதம் ஆகும். இது உலகின் மிகப் பிரபலமான உப்பு ஏரி. கடல் மட்டத்திலிருந்து 430 மீட்டர் தாழ்வான பகுதியில் இருப்பதால், உலகின் மிகக் குறைந்த நிலப்பகுதி இது ஆகும். நீரில் உடல் எளிதாக மிதக்கும். ஏனெனில், உப்பு அளவு மிக அதிகம். மருத்துவ, சுகாதார சிகிச்சைகளுக்கு Dead Sea Mud உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று, மத ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது.
5. லேக் உர்மியா (Lake Urmia): இந்த ஏரி வடமேற்கு ஈரான் பகுதியில் உள்ளது. இங்கு உப்பு செறிவு 30 முதல் 32 சதவிகிதம் ஆகும். இது மத்திய கிழக்கு பகுதியின் மிகப்பெரிய உப்பு ஏரி ஆகும். ஏரியின் நீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும், காரணம் ‘Halobacteria’ மற்றும் ‘Dunaliella Salina’ என்ற நுண்ணுயிர்கள்தான். ஒருகாலத்தில் பறவைகளின் (குறிப்பாக Flamingos) முக்கிய வாழிடமாக இது இருந்தது. ஆனால், சமீபத்தில் காலநிலை மாற்றம், நீர்வளக் குறைவு காரணமாக ஏரியின் அளவு குறைந்து வருகிறது. ஈரான் அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் மீண்டும் இதை பாதுகாக்க முயற்சி செய்கின்றன.
உலகின் அதிக உப்புத்தன்மை கொண்ட ஏரிகள் மனிதர்களுக்கு பல்வேறு அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகைய ஏரிகள் இயற்கையின் பல்வேறு பரிமாணங்களை உணர்த்தி, மனிதர்களுக்கு சூழலியலை பாதுகாக்கும் பொறுப்பையும் நினைவூட்டுகின்றன.